கவியரசு கண்ணதாசன் அவர்கள் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என பாடல் எழுதிவிட்டு போனார்.இன்றும் கோப்பையில் குடியிருக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோப்பையினால் வென்றவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. எந்த பழக்கமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வரம்பு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகத் தான் அமையும்.
கடந்த மாதம் மங்களூரில் நிகழ்ந்த விமான விபத்து கூட விமானி குடிபோதையில் இருந்ததால் ஏற்பட்ட அலட்சியத்தால் நிகழ்ந்திருக்குமோ என கூட சந்தேகக்கிறார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 39 விமானிகள் குடித்து விட்டு விமானம் ஓட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ப்ரஃபுல் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கோப்பைக்கு அதிகம் பெயர்போனவர்கள் நமது பக்கத்து மாநிலத்தவர்களான கேரளத்தினரும், கர்நாடகத்தினருமே. அதுவும் குறிப்பாக மல்லுகள் அருகில் எவரும் நெருங்கி விட முடியாது.
குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் இன்றளவும் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டாலும் சட்டத்திற்கு புறம்பாக மது தயாரிப்பதும், விற்கப்படுவதும் தொடரத்தான் செய்கிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் நம்மவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.
நேற்றைக்கு கூட குவைத்தில் குடித்து விட்டு கார் ஓட்டிய பெண்மணி விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார். குவைத் பத்திரிக்கைகளைத் திருப்பினால் கள்ளச்சாராயம் தயாரித்தவர் கைது, கடத்தல், பதுக்கல் செய்தவர் கைது என்று தான் வாசிக்க நேரிடுகிறது.
உலககோப்பை கால்பந்து இன்னும் இரு தினங்களில் துவங்கவிருப்பதால் கோப்பைக்கும் உலகக்கோப்பைக்கும் உள்ள தொடர்பையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 1994 ல் உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இருந்த பிரான்கோ என்பவர் "நாங்கள் மது அருந்தியது எங்கள் உடல்திறனை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவியது என்றும் அதனால் நன்றாக விளையாட இயன்றது" என்றும் கூறுகிறார். அவரது மனைவியுடனான தாம்பத்ய உறவும் அவரை மேலும் சிறப்பாக ஆட உதவி செய்தது என்கிறார்.
ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் மீது சமீபத்தில் வைக்கப்பட்ட இதே குற்றச்சாட்டு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை... வித்தியாசம் ஒன்று மட்டும் தான்... இந்தியா தோல்வியடைந்தது; பிரேசில் வெற்றி பெற்றது. ஒருவேளை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தால் அவர்கள் கோப்பையுடன் ஆடியதை நாம் மறந்திருக்கக்கூடும்.
மேற்கத்திய நாடுகளில் மதுப்பழக்கம் வழக்கமாகிப் போன ஒரு விஷயம், ஆனால் நம்மூரில் அப்படி பார்க்கப்படுவதில்லையே!
எதுவாயினும் அளவோடு இருந்தால் அழகு தான். இல்லையென்றால் கோப்பையை வைத்துக்கொண்டு ஆடுபவர்களுக்கு நாம் ஆட வேண்டியிருக்கும்.
கார்ட்டூன் நன்றி: http://www.caricatures-ireland.com/
2 comments:
எதுவாயினும் அளவோடு இருந்தால் அழகு தான்.
....... கருத்துக்களை நல்லா சொல்றீங்க.... :-)
//கோப்பையினால் வென்றவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. எந்த பழக்கமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வரம்பு இருக்க வேண்டும்//
வீரர்கள் தங்கள் சுகபோகத்திற்காக மதுவருந்தி ரசிகர்கள் மனம் வருந்த உலகக் கோப்பையைக் கைநழுவ விட்டதை மன்னிக்கவே முடியாது....,
Post a Comment