February 23, 2016

சுவரொட்டி, விளம்பரப் பலகை மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழகம்

'டிஜிட்டல்’ தொழில்நுட்பம் முறையிலான அச்சுகள் வந்த பின்னர், விளம்பரப் படுத்துதல் என்பது ஒரு புதிய பரிமாணத்திற்குள் காலடி எடுத்து வைத்ததை மறுப்பதிற்கில்லை. வர்ணமயமான, ரசிக்கும் படியான டிஜிட்டல் விளம்பரப்படுத்துதல் என்பது இன்று துதிபாடல்களாலும், தனிமனித விளம்பரப்படுத்துதலாலும், சுய தம்பட்டங்களாலும் அதன் அழகை இழந்து நிற்கிறது.

சிறிய விழாக்கள் முதல் பெரிய மாநாடுகள் வரை டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் வைக்கப்படாத நிகழ்வுகள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவையே. கட்சி விழாக்கள், கோவில் விழாக்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், திருமணங்கள், திரைப்பட வெளியீடுகள் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆளுயரத்திலிருந்து, ஆனை உயரம் வரை வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மூலம் சாமானியன் படும் அல்லல்களுக்கு அளவில்லை. இது போன்ற பலகைகள் @ Flex Board களை வைப்பவர்கள் பேருந்து நிலையங்கள் என்றும், பேருந்து நிறுத்தங்கள் என்றும், நெருக்கடி நிறைந்த போக்குவரத்து வளைவுகள் என்றும், நடைபாதை என்றும் கண்டுகொள்வதில்லை

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கத்தின் முகப்பு, எஸ்.எல்.பி பள்ளியின் அருகேயுள்ள நடைபாதை, வேப்பமூடு சந்திப்பிலுள்ள பூங்கா, பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், சிறைச்சாலை என எதையும் விட்டு வைக்கவில்லை விளம்பரப் பலகைப் பிரியர்கள்.

ஒழுகினசேரி 

தேரேகால்புதூர் 

அண்ணா விளையாட்டரங்கம் 

வடசேரி 

 வேப்பமூடு சந்திப்பு 


அண்மையில் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இது போன்ற விளம்பரப் பலகை ஒன்று, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அகற்றிய காவல்துறை அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய அரசியல்வாதிகளைப் போன்றோர் கொண்டிருக்கும் பணபலமும், ஆள்பலமும் தான் இவர்களுக்கு தீனி.

இதில் உச்சபட்ச நகைச்சுவை, இவர்கள் மின்சார வாரியத்தின் Transformer ஐயும் கூட விட்டு வைக்காதது தான். மட்டுமல்லாது ஒரு மாவட்டத்தின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் 'விளம்பரம் செய்யாதீர்' என்ற எச்சரிப்பிற்குப் பின்னரும், கிறிஸ்தவ கூட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்தியிருப்பதில் இருந்தே இந்த விளம்பரப்படுத்தல் எனும் மன நோயின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.


பதிவுத்துறை அலுவலகம் 

சிறைச்சாலை, நாகர்கோவில் 


ட்சிகள் ஒருபுறமென்றால் மறுபுறம் திரைப்பட ரசிகர்கள், புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, கதாநாயகனுடன், இவர்கள் முகங்களையும் சேர்த்து அச்சிடும் விளம்பரப் பலகைகளின் கொடுமை சொல்லி மாளாது. அதே போன்று திருமண வீடுகளிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் தங்கள் விருப்ப நாயகர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட்டு வாழ்த்து தெரிவிக்கும் அக்கப்போர்களும் தொடரத்தான் செய்கின்றன. இதே பாணியில் அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்களும் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யம்.

எப்படியாவது ஒரு விளம்பரப் பலகையில் நமது புகைப்படமும் வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊருக்கு ஊர், ன்று விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது ஒரு வகை மனநோயாகவே மாறியிருக்கிறது. இத்தகைய சுய தம்பட்டங்கள், அரசியல் தலைவர்களை, மதத் தலைவர்களை திருப்திப்படுத்த அச்சடிக்கப்படும் விளம்பரங்கள், வரும் தலைமுறைக்கு மிகத்தவறான முன்னுதாரணாக அமையும் என்பது தான் இன்னும் வேதனை தரும் விடயம்.

1 comment:

ஸ்ரீராம். said...

திருத்தப்படவேண்டிய கலாச்சாரம்!

Post a Comment

Related Posts with Thumbnails