March 16, 2016

அணைக்கப்பட வேண்டிய மதங்களைத் தாண்டிய சாதீ!


‘விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருக்கு சார்’, ஒருத்தரோட இரத்தத்த இன்னொருத்தருக்குக் குடுத்து உயிர் பிழைக்க வைக்கிறாங்க; ஒருத்தரோட கருமுட்டையை வேறொருத்தருக்கு செலுத்தி, அவங்க வழியாகக் குழந்தை பெத்துக்கிறாங்க; ‘இப்போலாம் யார் சார் சாதி பாக்கிறா’ என்பது போன்ற பேச்சுகள் அங்கங்கே தொனித்தாலும் சாதி எனும் தீ தொடர்ந்து பற்றியெரியத்தான் செய்கிறது.

மேம்போக்காகப் பார்த்தால் சாதி, மத, இன, நிற வேறுபாடுகள்/வெறிகள் இல்லை எனத் தோன்றினாலும் அவை ஆழ்மனங்களில் விதைகளாக இன்றும் உறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு திருப்பூர் கொடூரம் ஒரு உதாரணம்.

இத்தகைய சாதிய பாகுபாடுகள் இந்து மதத்தில் மட்டுமே தொடர்ந்து இருந்து வருகிறது என்போமானால் நாம் நமது கண்களைக் கட்டிக்கொண்டும், செவிகளை அடைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறோம் என்று தான் பொருள்பட முடியும்.

தென் தமிழகத்தில் எவர் எந்த ஆலயத்திற்கு செல்கிறார் என்பதை வைத்தே அவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் எனக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடிகின்ற அளவு சாதியெனும் பேய் வியாபித்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்குள்ளேயே பல பிரிவுகள் இருந்து வருகின்றன. இதில் வேற்றுப் பிரிவினரை/ வேறு சாதியினரைத் திருமணம் செய்து கொள்ளும் கிறிஸ்தவர்கள் வெகு சிலரே.

பிற சாதி/மத/இனத்தைச் சார்ந்த ஒருவருடன் நட்பு பாராட்டுவதையே புருவம் உயர்த்திப் பார்க்கும் கிறிஸ்தவ சமூகம் தான், அன்பைப் பெருமையாக பேசுகிறது!! இணையத்தில் திருப்பூர் சம்பவத்திற்குப் பொங்குகிறது! என்று கருதுகையில் நாம் வாழும் சமூகத்தை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

இருவருக்கிடேயே நடைபெறும் சாதாரண உரையாடல்களின் நடுவே மூன்றாவது ஒருவரைக் குறித்து பேச்செழுகையில், 'அவன் நம்மாளா'?  என்று வினவப்படுவதிலிருந்தே சாதியம் நம்மோடே பின்னிப் பிணைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மிகச்சிறப்பாக பாடும் திறமையுள்ள உறவினர் ஒருவரைக் குறித்து சில தினங்கள் முன்னர் 'அவன் மட்டும் வேற சாதிப்பயலா இருந்திருந்தா, இந்நேரம் பெரிய ஆளா வந்திருப்பான்' என்றார் அப்பா; பதிலுக்கு ஆமாம் என்றேன். அது தான் நிதர்சனும் கூட.

செய்தி ஊடகங்கள், குறிப்பிட்ட சமூகத்தினரை சிலாகித்து எழுதுவதும், அவர்களை முன்னிலைப்படுத்துவதும் இன்றளவும் இருந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதக் கொண்டாண்டங்களின் செய்திகளில் சவேரியார், கிறிஸ்து அரசர் ஆலயங்களைக் குறிப்பிட்டு எழுதிய இந்து தினசரி, லுத்தரன் உட்பட்ட ஆலயங்களை இருட்டடிப்பு செய்ததில் இருந்தே இவை போன்ற ஊடகங்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள முடியும்.

ிறமைகள் இருந்தும், ஒரு சாராரை மட்டம் தட்டுவதில் இன்றைய சமூகமும், ஊடகங்களும், அரசியல் வியாபாரிகளும் தொடர்ந்து குறிப்பாய் இருப்பதிலிருந்தே சாதியத்தின் வன்மத்தை உணரலாம். 'ஜீவா' 'இறுதிச்சுற்று' போன்ற திரைப்படங்கள் இதைத்தான் உணர்த்தியிருந்தன. சாதி/மதக் கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆயிரம் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், திரைப்படங்கள் வெளிவந்தாலும் தனிமனித சிந்தனை மாறாவிடில் இது இன்னும் தொடரவே வாய்ப்பிருக்கின்றது.

பிறந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் வேலையில் அமருவோரை விட, பிறந்த ஊரிலேயே வளர்ந்து, படித்தோ/படிக்காமலோ சிறு வேலைகளில் அமருவோரின் மனநிலையும், வீம்பிற்காக அவர்கள் முன்னெடுக்கும் சாதியம் சார்ந்த கருத்துகளும், கொலை செய்யும் அளவிற்கு வீரியம் மிக்கவை என்பது மறுக்கமுடியாத ஒன்று. குறுகிய வட்டத்திற்குள்ளான அவர்களது வாழ்க்கை முறையும், பரந்துபட்ட சிந்தனையின்மையுமே இதற்கு காரணம் எனலாம்.

'எங்க ஏரியா உள்ள வராதே' போன்றதான வாசகங்களும் இவர்களிலிருந்தே உண்டாகியிருக்க வேண்டும்!! ஊர்களில் வயது முதிர்ந்தும், எண்ணங்களில் முதிர்ச்சியடையாத சிலரின் சொற்களுக்கு விலைபோகும் இளைஞர்களைக் குறித்து கவிஞர். மகுடேசுவரன் இரு தினங்கள் முன்னர் பின்வருமாறு மிகத் தெளிவாக எடுத்தியம்பியிருந்தார்.
    
       "சாதி ஆளுமைக்குப் பெயர் பெற்ற பிரிவினரில் தேர்ச்சியான கல்வியறிவு பெற்றவர்கள் இடத்தைக் காலி செய்து விட்டார்கள். வெளிநாட்டுக்கும் பெருமாநகரங்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். போனவர்கள் போக, மீதமுள்ளவர்களில் பலர் வாழ்க்கயை மாற்றத்தக்க புதிய கல்விக்கோ சிந்தனைக்கோ ஆட்படாத பழைமையின் எச்சங்கள். பெரும்பாலும் 'மதுக்குடியர்கள்'. இவர்கள் தீவிரமாக ஈடுபடுவதற்கு ஏதேனும் ஒரு உணர்ச்சிகரமான பற்றுதல் வேண்டியிருக்கிறது...

    ...அந்த இடத்தில் தான் ஏதோ ஒன்றின் அடிப்படைவாதம் அவர்களைக் கவர்கிறது. சாதி, மதம் போன்ற அடிப்படைவாதங்களுக்கு முதலில் இரையாகிறார்கள். இந்த அடிப்படைவாதக் கொள்கையில் நின்றாலும் கூட, ஆக்கப்பூர்வமாகச் செய்வதற்கு எண்ணற்றவை இருக்கின்றன. ஆனால், அவற்றை நோக்கி அவர்களை யாரும் வழிநடத்தமாட்டார்கள். இது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய சமூக நிலவரம். மேலோட்டமான உரையாடல்களால் இவற்றை களைவதற்கில்லை" என்றிருந்தார் கவி. மகுடேசுவரன். இது தான் இன்றைய நிதர்சனம்.

ம்பேத்காரையும், பெரியாரையுமே பைத்தியம் என்கிற கொலைவெறியர்கள்; பகிரங்கமாகக் கொல்லப்பட்டவரின் சடலத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்பவர்கள்; கணவனின் சடலத்தைக் கூட இறுதியாக ஒரு முறை பார்த்து விடத் துடித்த மனைவியின் தனி மனித சுதந்திரத்திற்கு தடை போட்ட அரசு; வாக்குகளுக்காக இவற்றைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் திராவிடக் கட்சிகள்; சாதி அரசியலை முன்வைக்கும் பாமக போன்ற கட்சிகள் என நீளும் இந்த பட்டியல் இல்லாமல் போகும் காலம் மட்டும் சாதிவெறி தொடர்ந்து இருக்கத்தான் போகிறது.

புகைப்படம் நன்றி: G. ராமமூர்த்தி 
-------------

(சாதியின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி/வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை, பொருளாதார வசதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடாக மாற்ற வேண்டியதைக் குறித்ததான வரைவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை இனி வரும் அரசுகளேனும் புரிந்து செயல்படுதல் அவசியம்)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails