இன்று மீண்டும் ஒரு வடஇந்தியன் சில மராத்திய கயவர்களால் அநியாயமாக ரயிலில் வைத்தே கொல்லப் பட்டிருக்கிறான். சில மாதங்களாகவே மகாராஷ்டிராவில் தொடர்ந்து வரும் வட இந்தியர்களின் மீதான இத்தகைய தாக்குதல் அங்கு தொழிலினிமித்தம் குடியேறியுள்ள பிற மாநிலத்தவரைப் பீதியடைய வைத்துள்ளது.பகிரங்கமாக நடத்தும் அவர்களின் இத்தகைய தாக்குதல்களுக்கு போலீசாரும் ஒத்துப் போகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.மகாராஷ்டிராவில் புதிதாக தொடங்கப்படும் தொழில்களில் பிற மாநிலத்தவருக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று வலியுறுத்தி வருகிறார்கள் ராஜ் தாக்கரே உள்ளிட்ட சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள்.அதே நேரத்தில் சுயமாக வேலையிலமர்ந்த கீழ்மட்ட தொழில்களில் இருக்கின்ற காவலாளிகள், டப்பா வாலாக்கள் என அறியப்படும் மதிய உணவு சப்ளையர்கள் 40 சதவீதத்திற்கும் மேலானோர் வட மாநிலங்களைச் சார்ந்தவர்களே.அவர்கள் மிகக் குறைந்த கூலி தருபவர்களுக்கும் வேலை செய்ய தயாராக இருப்பது தான் மராத்தியரை விட அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது.இதையும் கூட பொருக்காமல் அவர்களைத் தாக்கி வருகிறார்கள் மராத்தியர்கள்.வட மாநில குறிப்பாக பீகார், உத்திரபிரதேசத்தைச் சார்ந்த டாக்சி ஓட்டுனர்கள் தாக்கப் படுகின்ற சம்பவங்களும் அங்கொன்றுமாக இங்கொன்றும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது.
இந்நிலையில் கலவரத்தைத் தூண்டும் விதம் மேடைப் பேச்சு நடத்தியதற்காக கடந்த வாரத்தில் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்ட போது (எப்போதோ கைது செய்யப்பட வேண்டியவர்) போலீசாரால் அதிக மரியாதையுடன் அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார், ஒருவர் ராஜ் சாப் என அழைத்துள்ளார், வேறொருவரோ காரின் கதவை அவருக்காக திறந்து கொடுத்துள்ளார், இதற்காக அப் போலீசாராரின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தைத் தூண்டும் நாணமில்லா அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தரும் இவர்களைப் போன்ற போலீசார் எங்கே அன்றாடம் அல்லலுறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு தரப் போகிறார்கள். வடமாநிலத்தைச் சார்ந்த கீழ்மட்ட வேலையிருப்பவர்களை மட்டுமின்றி மேல்மட்டத்தவரையும் பகிரங்கமாக அவர்களின் சொந்த மாநிலத்திற்குத் திரும்பிப் போகச் சொல்லும் அளவிற்கு மராத்திய மதம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு.(நடிகர் அமிதாப்பின் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை) எனினும் கணிப்பொறி, மருத்துவம் போன்ற மேல் மட்டத் தொழில்களில் ஈடுபடுவோர் 55 சதவீதத்திற்கும் மேலானோர் தென்னிந்தியர்களே அதிலும் குறிப்பாக தமிழர்களும்,கேரளத்தினருமே.இவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிப் போகிற ஒரு நிலை வருமென்றால் அவர்களின் பிழைப்பு ஒருபுறம் கேள்விக்குறி என்றாலும் மகாராஷ்டிராவின் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்.இதனை அறிந்தே white color job எனப்படும் கணிப்பொறி, மருத்துவம் போன்ற துறைகளின் பணியிலிருப்போரிடம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள், இல்லையென்றால் அவர்களுக்கும் கீழ்மட்டத் தொழில் செய்பவர்களின் நிலைமை தான்.
இவை அனைத்தும் மராத்தியருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்று கபட நாடகமாடி மராத்தியர்களின் ஓட்டு வங்கியை அடைய இவர்கள் அரங்கேற்றும் நாடகம் என்பதாகவே நான் கருதுகிறேன்.பட்டப் பகலில், பொதுமக்கள் மத்தியிலேயே வெறித்தனம் காட்டும் இவர்கள் மீது மகாராஷ்டிர அரசு காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்திருப்பது கேள்விக்குரிய விஷயம்.தேர்தல் நெருங்குவதால் தான் இந்த கண் துடைப்பு என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இத்தகைய போக்கு தொடருமானால் மகாராஷ்டிராவில் வரலாறு மீண்டுமொரு 1992-1993 ஐ சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

No comments:
Post a Comment