பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வர ஆரம்பித்ததிலிருந்தே எளிதில் வெற்றி பெறலாம் என எண்ணிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல்கட்சிகளுக்கும் "அரசி"யல்வாதிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
குறிப்பாக தமிழகத்தில் அய்யா அவர்களின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி,விருதுநகரில் அண்ணன் அவர்களின் தோல்வி, தேர்தலுக்கு நாற்பது நாட்களிருக்கையில் ஈழம் ஏற்படுத்துவோம் என்றதோடு நாற்பதும் நமக்கே என நாடகமாடிய அம்மாவின் பின்னடைவு,காங்கிரஸ் பெருந்தலைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, என வரிசையாக நோக்கினால் மக்கள் தெளிவாக வாக்களித்து சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள் எனலாம்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் பதவி வகித்து வந்திருக்கும் 'அய்யா' வின் பதவி மோகத்திற்கு மக்கள் சரியான சம்மட்டி அடி அடித்திருக்கிறார்கள்.ஆவேச பேச்சாளர் அண்ணனின் சந்தர்ப்பவாதத்தைக் குறித்து சொல்லவே தேவையில்லை.சொந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை அலசாத 'எம்.பி'க்களுக்கும் அமைச்சர்களுக்கும் தக்க அடி கிடைத்திருக்கிறது.
விலைவாசி உயர்வு,மின்தடை,இலங்கைப் பிரச்சினையில் தடுமாற்றம் இவைகளுக்கு அப்பாலும் முதியவரின் உண்ணாவிரதமும் கள்ள ஓட்டும், சொல்லும்படியான வாக்குகளை அளித்திருக்கிறது என ஒருசாரார் நம்பினாலும் பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கிய இலவசங்களும்,கேப்டன் சிதறச் செய்த வாக்குகளும் முதியவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
இதே பாணியிலேயே இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் நல்லாட்சி செய்த ஆளுங்கட்சியினருக்கே மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள்,ஆந்திராவில் காங்கிரஸின் ரெட்டி,டெல்லியில் காங்கிரஸின் ஷீலாதீட்சித்,ஒரிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்,பீகாரில் ஜனதா தளத்தின் நிதிஷ் குமார்,ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா,குஜராத்தில் பா.ஜ.க வின் நரேந்திர மோடி என இந்த முதல்வர்கள் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு அவர்கள் செய்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு பெரும்பான்மை இடங்களை அளித்திருக்கிறது.
நல்லாட்சி செய்யாத கேரளா,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு சரியான அடியும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளின் பழமைவாத கொள்கைகளையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.
ஐக்கிய முற்போக்கு முன்னணியில் ஒருகாலும், மூன்றாவது அணியில் ஒருகாலுமாக நாடகமாடிய லாலு சரண்,பாடலிபுத்திரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.இரு தொகுதிகளிலும் தோற்க வேண்டிய நிலையிலிருந்தவர் இறுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சரண் தொகுதியிலிருந்து மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.
பிரதமர் கனவு கண்ட சந்தர்ப்பவாதிகள் மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பாஸ்வான் ஆகியோருக்கு பெரும் தோல்வியை தந்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.இத்தனைக்கும் பாஸ்வான் தனது சொந்த தொகுதியிலேயே தெரிந்தெடுக்கப்படவில்லை.இதே பீகார்,ஹஜிபூர் தொகுதியில் 4,24,000 வாக்குகள் வித்தியாசத்தில் 1977 ல் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை செய்தவரும், 1977 முதல் 2004 வரை ஏழு முறை இந்த தொகுதியில் இருந்து தெரிந்தெடுக்கபட்டவரும் இவரே.
சரிவர செயல்படாத மத்திய சமூகநலைத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியும் ஆந்திராவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
இப்படியாக நல்லாட்சி செய்தவர்களுக்கும்,ஓரளவு நியாயமாக இருந்தவர்களுக்கும் மக்கள் மீண்டும் தங்கள் ஆதரவை அளித்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அகங்காரிகளுக்கு தக்க பதிலும் கொடுத்திருக்கின்றனர்.
பொருளாதர வீழ்ச்சியிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் எவருக்குமே பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமானால் அது மேலும் இந்திய பொருளாதாரத்தை சீரழித்திருக்கும்.அந்த நோக்கத்தில் நிலையான ஆட்சி வேண்டியும் மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.
ஆனாலும் காங்கிரசுக்கு 200 ற்கும் மேல் தொகுதிகள் கிடைத்தது சற்றே ஆச்சரியம் தான்!
6 comments:
நல்ல அலசல்.
//பொருளாதர வீழ்ச்சியிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் எவருக்குமே பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமானால் அது மேலும் இந்திய பொருளாதாரத்தை சீரழித்திருக்கும்.அந்த நோக்கத்தில் நிலையான ஆட்சி வேண்டியும் மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.//
இதுவும் ஒரு முக்கிய காரணம்.
சிவகங்கையில் மாறி மாறி இழுத்தடித்து கடைசியில் சிதம்பரம் வென்றார் என்ற முடிவில் தங்கள் கருத்து என்ன?????
நன்றி குளோபன் அவர்களே.
--------------
மது அவர்களே...சிவகங்கையில் ஏதோ குளறுபடி நடந்துள்ளாதாகவே தெரிகிறது. மறு எண்ணிக்கை,பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடும். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் பின்னணியில் இருந்த அமைச்சர் இறுதிச்சுற்றில் முன்னணிக்கு வந்ததும். 4000 வாக்குகளுக்கு மேல் இருக்கும் வித்தியாசமும் ஆச்சரியமே!
Ayyavvin santharpavatha arasiyalukku savukku adi, savu mani. What a exiting news.
பொருளாதர வீழ்ச்சியிலிருந்து இந்தியமீள,நிலையான ஆட்சி வேண்டியும், மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்......
நல்ல அலசல்...
தமிழக அரசியல் முடிவுகள் நான் எதிர்பார்த்ததுதான்.
மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..
தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:
http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html
பதிவை பார்க்கவும். கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்...
Post a Comment