இன்றைய தேதியில் குறைந்தது 100 கி.மீ தொலைவிலிருக்கும் ஊர் ஒன்றிற்கு முன் பதிவில்லாத அரசு பேருந்தில் பயணம் செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை.குறிப்பாக மாணவர்களும்,அலுவலகப் பணிகளுக்கு செல்பவர்களும் பரபரப்பாக இருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளிலும்,விழா நாட்களிலும்,முகூர்த்த நாட்களிலும் மாட்டிக்கொண்டால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாக வேண்டிய நிலை. பெரும்பாலும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை; அப்படியே வந்து சேர்ந்தாலும் தக்க சமயத்தில் கிளம்புவதுமில்லை.
"வாசல் வழியாக அதுவும் ஆண்கள் ஏறுவதெற்கென அமைக்கப்பட்டிருக்கும் பின்வாசல் வழியாகத்தான் ஏறுவோமென கொள்கை கொண்டிருக்கும் என்னைப்போன்ற இ.வா க்களுக்கு வந்து நிற்கும் பேருந்துகளில் இருக்கை கிடைக்கப்பெறுவது குதிரைக்கொம்பு தான். பேருந்துகள் பேருந்து நிலையத்தில் வந்து நிற்கும் முன்னரே, இருக்கைகளில் இடம் பிடிப்பதெற்கென்று உள்ளிருக்கும் பயணிகளையும் இடித்துக் கொண்டு பேருந்தினுள் தங்கள் உடல்களைத் திணித்து விடுவர்.
கைக்குட்டைகள், சிறிய பை முதல் பெரிய பைகள், குடைகள், துண்டுகள்,நோட்டுப் புத்தகங்கள் என தங்கள் கைகளில் உள்ளவற்றை எல்லாம் பேருந்தின் ஜன்னல் வழியாக திணித்து இடம் பிடிப்பது ஒரு கலை என்று கூட கூறலாம்!? இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் கடந்த வாரம் நான் கண்ட காட்சி சற்றே பதற்றப்பட வைத்தது. ஏறக்குறைய இரு வயது நிரம்பிய சிறு குழந்தை ஒன்றை பேருந்தின் ஜன்னல் வழியாக திணித்து இடம் பிடிக்கிறார் ஒரு தந்தை. குழந்தையும் சிரித்துக் கொண்டே இருக்கிறது!! இவரைப்போன்றவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது?
தென் தமிழகத்தின் மதுரை,திருநெல்வேலி,நாகர்கோவில் ஆகிய நகரங்களில் கடந்த ஒரு மாதமாக பேருந்து பயணம் செய்கையில் கண்ட காட்சிகள் தான் இவை.
எனக்கு தெரிந்த வரை பெங்களூருவிலும் மும்பையிலும் இந்த நிலைமை இல்லை. பெங்களூருவில் 90% பேருந்துகளில் கதவு வைத்திருக்கிறார்கள்.கதவு திறப்பதும்,அடைப்பதும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.(தமிழகத்தில் தற்போது சில தாழ்தள பேருந்துகளில் இருப்பது போன்று) எனவே பேருந்து முழுமையாக நிற்பதற்கு முன்னர் அத்தனை எளிதில் உள்ளே நுழைந்து விட முடியாது. ஜன்னல் வழியாக எதையும் திணிப்பதும் பல நேரங்களில் காவல் துறையினரால் கட்டுப்படுத்தப்படுகிறது.
மும்பையிலோ ஜனங்கள் வரிசையில் நின்றே பேருந்தினுள் ஏறுகிறார்கள்.ஜனங்கள் முண்டி அடித்துக் கொண்டு ஏறுவதைக் கட்டுப்படுத்துவதற்கென்றே தனியாக காவல் துறையினர் காணப்படுவர்.நம்மூரில் காவல் துறையினர் இருந்தாலும் முண்டி அடித்துக் கொண்டு ஏறுவதைக் கண்டுகொள்வதில்லை.
******************************
பேருந்து எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் கூட்டம் குறைந்த பாடில்லை. அடுத்த இரு மாதங்களில் மேலும் 1500 புதிய அரசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப் போகிறார்களாம் தமிழகத்தில்.நல்ல விஷயம் தான். இந்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அவர்கள் மற்றொரு தடாலடி அறிவிப்பையும் சேர்த்தே வெளியிட்டுள்ளார்.
அதாவது விரைவில் 2500 புதிய மினி பஸ்களுக்கும் அனுமதி அளிக்கப் போகிறார்களாம். ஏற்கெனவே மினி பஸ்களும் அதன் ஓட்டுனர்,நடத்துனர்களும் மக்களை பெரும் இன்னலுக்குள்ளும் இளைஞிகளை ஓட்டியும் கொண்டிருக்க மேலும் மினி பஸ்களின் அவசியம் தேவை தானா?
மினி பஸ்கள் குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையே.ஆனால் பிற மினி பஸ்களின் போட்டியின் காரணம் நகரத்திற்குள்ளும்,கிராமங்களுக்குள்ளும் அவர்கள் காண்பிக்கும் வேகம் பல உயிர்களை (இவற்றில் ஆடு மாடுகளும் அடக்கம்) காவு வாங்குவது அன்றாட செய்தியாகி வருகிறது.பயணிகளை இறக்கி விடும் முன்னரே சரியாக கவனிக்காமல் பஸ்ஸைக் கிளப்பியும் விடுகிறார்கள். இது கடந்த வாரம் இருமுறை நான் கண்ட காட்சி.
இது ஒரு புறமென்றால் பெண் பயணிகளிடம் மினி பஸ் நடத்துனர்களின் உரசல்களுக்கும், கேலிக்கும் அளவே இல்லை ஒரு மினி பஸ்ஸிற்கு இரண்டு நடத்துனர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.சிலர் காதல் ஆசை காட்டி கற்பையும் பறிக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் நெல்லையில் இப்படியாக 5 பெண்களை ஏமாற்றிய நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தற்பொழுது இருக்கும் மினி பஸ்களை சரிவரக் கட்டுப்படுத்தினாலே போதுமாக இருக்கும்.வீட்டிற்கு இரண்டு மூன்று என மோட்டார் சைக்கிள்கள் வந்து விட்டன.பெருகி வரும் கார்களின் எண்ணிக்கை மறுபுறம். இவற்றினிடையில் மேலும் புதிய மினி பஸ்களின் அறிமுகம் ஆபத்திலும், விபத்திலும் முடியவே வாய்ப்புள்ளது.
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
1 comment:
நல்ல பதிவு...ஆடு,மாடுக கூட ஒழுங்கா போகுது, இந்த நம்ம பயலுக ஏன் தான் இப்படியோ???
Post a Comment