வழக்கமாக கட்டுரைகள் எழுதும் முன்னர் அதற்கு ஆதாரமான தகவல்களைத் திரட்டுவது எனது வழக்கம்.
ஆங்கில கட்டுரைகளைத் தான் பெரும்பாலும் மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த வகையில் கிரிக்கெட் குறித்த எனது அனைத்து கட்டுரைகளுமே cricinfo அல்லது wikipedia தளத்தின் மேற்கோள்களோடு தான் இருக்கும்.
2008 ல் சச்சின் தனது 19 ஆண்டு கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்த போது எனது அனுபவங்களையும் ஆங்கில wikipedia மற்றும் cricinfo வின் தகவல்களையும் ஆதாரமாகக் கொண்டு சச்சின் டெண்டுல்கரின் 19ஆண்டு கால கிரிக்கெட் பயணம் என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.
சமீபத்தில் அந்த கட்டுரையின் பெரும்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை என்ற தலையங்கத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.
அதோடு மேற்கோள்களில் rediff, cricinfo என்ற வரிசையில் மூன்றாவதாக எனது வலைப்பூவின் சுட்டியையும் அளித்திருக்கிறார்கள்.
வழக்கமாக விக்கிபீடியாவில் எவர் வேண்டுமானாலும் தகவல்களைத் தொகுக்க முடியும். அந்த விதத்தில் எந்த புண்ணியவாளனோ எனது மொழிபெயர்ப்பை இணைத்திருக்கிறார் எனவும் இதற்கு பொருள் கொள்ளவியலும்; அல்லது விக்கிபீடியாவினரே கூட தொகுத்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.
விக்கிபீடியாவிலிருந்து எனது வலைப்பூவிற்கு சிலரின் வருகை இருக்கவே என்னவென்று அலசியதில் சிக்கிய விஷயம் இது.
ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை தமிழ் விக்கி இணைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.
விக்கிபீடியாவிற்கும், எனது மொழிபெயர்ப்பை இணைத்தவருக்கும் நன்றிகள்.
----
பி.கு:
விக்கிபீடியா நடுநிலையின்றி செயல்படுகிறது என்றும் தகவல்களை சரிவர ஆராயாமல் இணைக்கிறது என்றும் பல கருத்துகள் நிலவி வருகின்றன. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.
அது ஒருபுறம் இருந்தாலும், ஆங்கிலத்தை ஒப்பிடுகையில், இணையத்தில் கல்வி சம்பந்தமான தமிழ் கட்டுரைகள் வெகு சிலவே என வலைப்பதிவரும், எழுத்தாளருமான பத்ரி அவர்கள் கடந்த வருடம் http://thoughtsintamil.blogspot.com/2009/06/blog-post_5808.html என்ற பதிவில் ஆதங்கப்பட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்தகைய குறையை போக்க வலைப்பதிவர்களும், எழுத்தாளர்களும் முன்வந்தால் இன்னும் சிறப்பான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்க வாய்ப்பாக அமையும்.
No comments:
Post a Comment