அரசியலும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொல்வார்கள் இன்று விளையாட்டும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொன்னாலும் தகும். 2020 ல் இந்தியா பணக்கார/வல்லரசு நாடாகிறதோ இல்லையோ 20-20 கிரிக்கெட் போட்டியால் பலர் பல கோடியை ஏய்த்து பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.
மற்ற விளையாட்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் தான் அதிக ஊழல் நடைபெறுவதாக தெரிகிறது. அதற்கு காரணம் கிரிக்கெட்டில் புழங்கும் அதிக பணமும், விளம்பர நிறுவனங்கள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் தான் என படுகிறது.
விளையாட்டில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் ஊழலின் கை ஓங்கி இருப்பதற்கு "பேராசை" என்ற பெரிய வில்லனும் ஒருவகையில் காரணமாவதையும் மறுக்க முடியாது. அசாரூதீன், ஜடேஜா, ஹான்ஸி குரோனியே என கிரிக்கெட்டில் முதிர்ந்த வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு தோல்விக்கு காரணமானார்கள் என்றால் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஆசிப், அமீர், பட் இளம் வீரர்களும் துணிந்து விட்டார்கள்.
ஐ.பி.எல் போட்டிகளை ஒருங்கிணைத்ததில் லலித் மோடி ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் என்றால் அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் 'சுரேஷ் கல்மாடி' ஊழல் செய்ததாக தெரிய வந்திருக்கிறது. இதன் முன்னர் தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் ஊழல் செய்ததாக கே.பி.எஸ் கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இப்படியாக இன்று விளையாட்டும் பணமும் பிரிக்கமுடியாததாகி விட்டது. விளையாட்டு பிரபலங்கள் இத்தனை குற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் செய்த ஊழலுக்கு தக்கதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். குறைந்த பட்சம், பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் அவ்வளவு தான்.
"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்ற கவுண்டமணியின் நகைச்சுவை போல் விளையாட்டில இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைமை வந்து விட்டது என்பதாகவே படுகிறது.
'SPOTS' இல்லாத "SPORTS" எங்க இருக்கு என பலரும் இப்போதே கேள்வியும் எழுப்பத்தொடங்கி விட்டார்கள்
2 comments:
என்ன செய்வது!!!
இதென்ன விளையாட்டோ...!
அய்யோ அய்யோ...
Post a Comment