24 வருடங்கள் முன்பு கராச்சியில் நவம்பர் 15 அன்று தனது 16 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரின்
பயணம் அதே நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்தது அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின்
முடிவிற்கு கனக்கச்சிதமாக எழுதப்பட்ட வரலாறு எனலாம். சச்சினின் சகாப்தம் அவரது சொந்த
மண்ணிலேயே முடிவுக்கு வருவது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கின்ற மரியாதை
என கூற முடியும். இது போலொரு மரியாதை சவுரவ், டிராவிட், லக்ஷ்மண் இவர்களுக்குக் கூட
அளிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு.
ஏப்ரல் 24 ல் பிறந்த சச்சின், 24 வருடங்களாக
சர்வதேச கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் ஆட்டங்கள், 463 ஒரு நாள் ஆட்டங்கள், 34347 சர்வதேச
ஓட்டங்கள், 100 சதங்கள், 164 அரை சதங்கள், 200 விக்கெட்கள் என அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு
அளித்த பங்கினை இந்த தலைமுறையை சார்ந்த எவராலும் மறக்கவியலாது. அவரது சாதனைகளை பட்டியலிட
இந்த ஒரு பக்கம் போதாது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்ட தர வரிசையில்
முதலிடம், உலகக் கோப்பை வெற்றி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் அதிக ஓட்டங்களை
எடுத்தவர், அதிக சதங்களை குவித்தவர், உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்களை அடித்தவர்,
எந்த அணியினரும் பின்வாங்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக அதிக சதங்களை எடுத்தவர்,
ரஞ்சி, துலீப், இரானி ஆட்டங்களில் முதல் ஆட்டங்களிலேயே சதங்களை அடித்தவர். பதினைந்தாவது
வயதில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை செய்தவர்.
டிராவிட் உடன் சேர்ந்து 1999 ல் நியூசிலாந்திற்கு
எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 331 ஓட்டங்கள் குவித்தவர், சவுரவ் கங்குலியுடன் இணைந்து
முதல் விக்கெட்டிற்கு 22 சதங்களை எடுத்தவர். தொடர்ந்து 185 ஒரு தின ஆட்டங்களில் ஆடியவர்
என எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின்.
இன்னும் எழுதி செல்லலாம் சச்சினின் பெருமைகளை.
இத்தனை சாதனைகளை செய்திருந்தாலும் சச்சின் இன்னும் நம் உள்ளத்தில் உயர்ந்து நிற்பது
அவரது சாதனைகளால் அல்ல அவரது எளிமையாலும், தன்னடக்கத்தாலுமே.
எத்தனையோ சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரகள்
இந்தியாவிலும் பிற அணிகளிலும் இருந்திருக்கிறார்கள், எனினும் அனைவராலும் மதிக்கப்பட்ட,
மரியாதை அளிக்கப்பட்ட, கவுரவப்படுத்தப்பட்ட ஒரே வீரர் சச்சினாகத்தான் இருக்க முடியும்.
அதற்கு எடுத்துக்காட்டு பிராட்மேன், லாரா, ஷேன்வார்ன், வாசிம் அக்ரம் போன்றோர் சச்சினுக்கு
செய்த மரியாதையும் அவருடன் ஆடிய சவுரவ் கங்குலி, டிராவிட் போன்றோர் நேரிலேயே வந்து
மரியாதை செய்வதும். பிற விளையாட்டு நட்சத்திரங்களான லூயிஸ் ஹாமில்டன், ரோஜர் ஃபெடரர்,
மைக்கேல் ஷுமாக்கர் போன்றோர் இணையதளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதுமே.
கிரிக்கெட் இல்லாத ஒரு வாழ்வை சச்சினால்
நினைத்துப் பார்ப்பது கடினம் தான் எனினும் இந்திய கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து சச்சின்
பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.
சச்சின் இல்லாத கிரிக்கெட்டை பார்ப்பது
எளிது ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினைப் பார்ப்பது கடினமே என கூறிய சச்சினின் மனைவி
அஞ்சலியின் ஆதங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சச்சினின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையில்
இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விருப்பத்தோடு எந்த ஒரு காரியத்தை செய்தாலும்
அதில் நாம் வெற்றி பெற முடியும் என்பது தான்.
சச்சினை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்த,
ஊக்குவித்த அவரது பெற்றோர்கள், சகோதரர் அஜித் டெண்டுல்கர், பயிற்சியாளர் அச்ரேக்கர்,
ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியை ராகினி தேசாய் இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சிறுவர்களை அவர்களுக்கு விருப்பமான கலைகளில்
அல்லது விளையாட்டுகளில் அவர்களுக்கான முழு சுதந்திரத்தை அளித்து அவர்களை ஊக்குவித்தால்
அவர்களும் நாளைய சச்சின்களே.
No comments:
Post a Comment