November 30, 2014

RIP Phil Hughes

நவம்பர் 30, இன்று 26 ஆவது வயதைக் கண்டிருக்க வேண்டிய பிலிப் ஜோயல் ஹ்யூஸ் இன்று இல்லை. 

நவம்பர் 24 ஆம் தேதி இடது கழுத்தில் கொண்ட அடியால் ஹ்யூஸ் மைதானத்தில் மயங்கி விழுந்த போது அது அத்தனை பெரிய ஆபத்தாக எனக்கு தெரியவில்லை. அவர் மரித்துப் போனார் என்ற தகவல் செல்ஃபோனின் திரையில் ப்ரேக்கிங் நியூஸ் என மின்னிய அந்த ஒரு நிமிடம் ஆடிப்போனேன். இந்த தகவல் தவறாக வெளியிடப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் கூட என்னுள் எழுந்தது.

ஹ்யூஸ் காயமடைந்த 24 ஆம் தேதி பெரும்பாலான ஊடகங்கள் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாகதான் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால் காணொளிகள், பந்து அவரது இடது கழுத்தில் தான் காயம் ஏற்படுத்தியிருந்ததை உறுதி செய்தன. இந்த காரணம் தான் அவர் மீண்டு வரக்கூடும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்திருந்தது.       

ஆனால் நாம் ஒன்று நினைக்க நிகழ்பவை வேறொன்றாக இருப்பது போல், ஹ்யூஸ் கழுத்தில் வாங்கிய காயம் அவரது உயிரைப் பறிக்கும் வீரியம் கொண்டிருந்திருக்கிறது. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் வெர்ட்டப்ரல் இரத்தநாளம் (Vertebral Artery) சிதைக்கப்பட்டதால் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு அறுவைசிகிச்சைக்குப் பின்னரும் சரியான முடிவுகளை தராதபடியால் ஹ்யூசின் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டியதாகிப் போனது.

பிலிப் ஹ்யூஸ் ஆரம்பத்தில் ரக்பி ஆட்டங்களில் ஆர்வம் காட்டினாலும், பின்னர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தனது 20 ஆவது வயதில் ஆஸ்திரேலியாவிற்காக ஆட தொடங்கியவர். தான் ஆடிய முதல் ஒருதின போட்டியிலேயே சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையும், டெஸ்ட் ஆட்டங்களில் இளவயதிலேயே இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்தவர் என்ற பெருமையும் பெற்றவர்.

செஃபீல்ட் ஷீல்ட் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெறுகின்ற ஆட்டமொன்றில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக ஆடிய போது சீன் அபோட் என்ற மற்றொரு ஆஸ்திரேலியர் எறிந்த பந்து செய்த மாயமான காயம் தான் இத்தனைக்கும் வித்திட்டது. கிரிக்கெட்டில் இத்தகைய காயங்கள் சகஜம் தான் எனினும், ஹ்யூஸ் அடைந்த காயம் அவரது உயிரைப் பறிக்குமளவு ஆபத்தாகிப் போனது தான் மொத்த கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

ஹ்யூஸிற்காக வருந்தும் நிலை ஒருபுறமிருந்தாலும் பந்து வீசிய சீன் அபோட்டிற்கு ஆறுதலும், மனோரீதியான வழிநடத்துதலும் மிக அவசியம்; அதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்து வருவது பாராட்டத்தக்கது.


ஹ்யூஸ் இடது கை ஆட்டக்காரரக இருந்தாலும் அவர் ஆடும் விதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க்கின் ஆட்டத்தை ஒத்திருக்கும்; குறிப்பாக அவரது கவர் டிரைவ் மற்றும் ஆஃப் டிரைவ். 


கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சார்பாக இரங்கல் செய்தியை பகிர்ந்து கொள்ள வந்த  அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க் மனதுடைந்து விம்மியது அவர்கள் எவ்விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. கண்முன்னர் நிகழ்ந்த இவ்விழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு ஈடு செய்யமுடியாதது.

408 63* 64 இந்த எண்கள் ஹ்யூஸ் நினைவிருக்குமட்டும் நினைவு கூறப்படும்.

408 - ஆவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர்;
63* அவரது  கடைசி ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த ஓட்டங்கள்;
64 - அவரது ஒருதின ஆட்டத்தில் அவர் அணிகின்ற மேற்சட்டையின் எண் (ஹ்யூசை கவுரவிக்கும் வண்ணம்  இந்த எண் ஓய்வு பெற்றதாக கிரிக்கெட்  ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது)

நவம்பர் 30, இன்று 26 ஆவது வயதைக் கண்டிருக்க வேண்டிய பிலிப் ஜோயல் ஹ்யூஸ் இன்று இல்லை; அவரது மரணம் பல பாடங்களை நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது; வாழ்க்கைச் சக்கரம் எக்கணம் நிற்குமென எவரும் அறுதியிட்டு கூற முடியாது. முடிந்த வரை நன்மையானதை மட்டுமே செய்வோமென்றால் நாளை நாமும் இங்கு சில நன்மையானவைகளை விதைத்தோம் என்ற பெயராவது நிலைக்கும்.



நன்றி: க்ரிக்இன்ஃபோ
Images Courtesy: dailymail.co.uk



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails