பிப்ரவரி 14 - உலகம் இன்று, வேலன்டைன்
தினம் - காதல் என உணர்வுப்பூர்வமாக அணுகிக்கொண்டிருக்க. தில்லியில் பாமரன் மீதான தன் காதலை
ஆம் ஆத்மி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
46 வயதான அரவிந்த் கெஜ்ரிவால்
எட்டாவது முதல்வராக தில்லியில் அமர்ந்திருக்கிறார் இன்று; அமர்ந்திருக்கிறார் என்று
சொல்வதை விட பாமரனுக்காக தன் முதுகில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். 
வெகு விரைவாக ஒரு உயர்ந்த பதவியில்
அவர் அமர்ந்து விட்டதாக தோன்றினாலும், இந்த உயரத்தை அடைய 14 வருடம் ஆகியிருக்கிறது
என்றால் அது சற்று ஆச்சர்யமே! அவரது வெற்றிக்குப் பின் 14 ஆண்டு கால கனவும், கடின
உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாத முயற்சிகளும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன
தைரியமும் இருந்திருக்கின்றன எனலாம். 
கூடவே, அனைத்து தருணங்களிலும்
உறுதுணையாக இருந்த துணைவியும், மக்கள் நலனுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடி
வரும் சக நண்பர்களும் அவரது பெரிய பலம். 
பதவியேற்பு விழாவின் போது அவர்
பல விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது 'lal battis' குறித்த
கருத்தே! அமைச்சர்களின் வாகனங்களில் உபயோகப்படுத்தும் சிவப்பு விளக்கை அதிகம்
பயன்படுத்த மாட்டோம் என்பதே அது.
அதோடு ஆட்சி செய்கிறோம் என்ற
பெயரில் தற்பெருமை கொள்வதோ, அமைச்சர் செல்கிறார் என்பதற்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்க
வைப்பதோ, பாமரனுக்கு இடையூறாக இருப்பதோ கூடாது எனவும் தெளிவாக பேசியிருக்கிறார். இது
போன்ற அவர்களது எளிமையும், சாதாரண மனிதர்களையும் மதித்து நடக்கும் போக்கும் தான் அவர்களுக்கு
வெற்றி பெற்று தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 
முன்னாள் கேரள முதல்வரான அச்சுதானந்தன்
இது போன்றதொரு எளிமையான வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்து வந்தார்; சாமானியர்களோடு
கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், காய்கறி சந்தைக்கு கூட அவரே சென்று வருவார்.
ஆனால் அங்கிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரால் ஊழலை சமாளிக்க முடியவில்லை. 
அதே போன்றதொரு எளிமையை அரவிந்த்
கெஜ்ரிவாலிடம் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிரான அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும்
என்பதே பாமரனின் எதிர்பார்ப்பு. 
தில்லியின் தற்போதைய சட்டமன்ற
உறுப்பினர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளும், இளைஞர்களுமே. இந்த படையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின்
ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சாமானியர்களுக்காக தற்போது நிர்ப்பந்தத்தால்
அரசியலில் பிரவேசித்திருக்கும் கெஜ்ரிவால் அவர்கள் கல்கத்தாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு
படித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருக்கும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்திலும்,
ராமகிருஷ்ணா மிஷனிலும் சிறிது காலம் ஆர்வலராக இருந்திருக்கிறார். 
பாமரனின் கஷ்டம் புரிந்த ஒருவரால்
தான் இத்தனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியும் என்பதற்கு இவைகளே சான்று. 
பெரிய அரசு அலுவலகங்களிலிருந்து,
சிறு அரசு பணிகள் நடக்கும் இடங்கள் வரை ஊழல் வியாபித்திருந்ததை சான்றிதழ்களில் அரசின்
அங்கீகார முத்திரை வேண்டி தில்லி சென்றிருந்த போது கண்கூடாக காண நேர்ந்தது. இதற்கு
முழுமுதற் காரணமே இடைத்தரகர்கள் தான். 
ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே இது
போன்ற இடைத்தரகர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வருகின்றன; இது எந்த அளவு
உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தில்லி விரைவில் ஊழலற்ற மாநிலமாகும் வாய்ப்புகள்
இருப்பதாக தெரிகிறது. 
ஆம் ஆத்மியின் பாமரனனுடனான இந்த
புதிய காதல் அத்தியாயம் சுபமாக முடிவுரை எழுதப்பட்டால் இன்னும் பல மாநில ஆட்சிமுறைகளுக்கு
இது ஒரு முன்னுரையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
பிரபல கருத்துச்சித்திர கலைஞர்
ஆர். கே. லக்ஷ்மன் அவர்கள் இன்று இருந்திருந்து கெஜ்ரிவாலின் வெற்றியை பார்த்திருப்பாரானால்
பெருமகிழ்ச்சியடைந்திருப்பார்.


No comments:
Post a Comment