இரு ஆண்டுகளாகவே குவைத்திற்கான செவிலியர்
பணியமர்வில் நடைபெற்று வரும் பெருங்கொள்ளையை குறித்து எழுத வேண்டுமென மனதில் கருதி
வந்திருந்தேன். செவிலியன் என்ற முறையிலும், குவைத்தில் ஐந்தரை ஆண்டு காலம் பணி செய்து
வருகின்றதாலும் இந்த கொள்ளையைக் குறித்து நானறிந்தவற்றையும், பிற ஊடகங்கள் பிரசுரித்தவற்றையும்
தொகுத்து ஒரு பதிவாக வலையேற்றுகிறேன்.
செவிலியப் பணி என்பது நமது மக்களால்
இழிவான பணியாக கருதப்பட்ட காலம் போய் ஓரளவு அங்கீகரிக்கப்பட்ட பணியாக மாறி தற்போது
பணம் கொழிக்கும் பணியாக மாறியிருக்கிறது (குறிப்பாக அயல்நாடுகளில்). எனினும், இன்றும்
நம் குக்கிராமங்களில் செவிலியப்பணியை உயர்வாகப் பார்ப்பதும், குறிப்பாக பிரசவம் பார்க்கின்ற
தாதிகளை பெரிதும் மதிப்பதும் தொடரத்தான் செய்கிறது.
தாதியர் பணிக்கு அயல்நாடுகளில் மிக அதிக
வேலைவாய்ப்புகள் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) தொடர்ந்து இருந்து வருகின்றன; இதற்கு
முதல் காரணம் வளைகுடா நாடுகளில் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தாதியர் பணியை செய்ய தயங்குவதே!
இந்த நிலைமை மெதுவாக மாறி வருகிறது என்றாலும், ஒரு மருத்துவமனையில் 2 சதவீதத்திற்கும்
குறைவான அரேபியர்களே தாதியராக இருந்து வருகின்றனர்.
இதனால் அரபு நாட்டினர், தாதியர் பணிக்காக
பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத்தான் சார்ந்திருக்கின்றனர். அதற்காக
அவர்கள் இந்திய முகவர்களை (ஏஜென்ட்) நாட வேண்டிய கட்டாயம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி
முகவர்கள் பலர் பெரும் பணக் கொள்ளையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெர்ரி வர்கீஸ் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த
முகவர்கள் ஒருபுறமிருந்தாலும், மற்ற பல முகவர்கள், அவர்களின் துணை முகவர்கள், அவர்களின்
கீழ் முகவர்கள், விசா மற்றும் பயணக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளைகள் அடிக்கின்றனர்.
மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் பணமதிப்பு
உயர்வாக இருப்பதாலும், வருமானமும் அதிகம் ஈட்டமுடியும் என்பதாலும் செவிலியர்கள்
பலர் குவைத்திற்கு வருவதை முன்னுரிமையாகக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக குவைத்
அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிவதே அவர்களின் குறிக்கோள்; ஏனென்றால் அப்போது தான்
60 வயது வரை பணிக்கு பங்கம் வராது; வேலையும் நிரந்தரம்.
இத்தகைய (MOH-Ministry Of Health) அரசாங்க
மருத்துவமனைகளுக்கு தாதியர்களை பணியிலமர்த்த 2004 ஆம் ஆண்டு, 2 லட்சம் ரூபாயில் ஆரம்பித்த
இவர்களின் லஞ்சம் இன்று 22 லட்சமாக ஓங்கி நிற்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 10 லட்சம்
என இருந்த (மு)க(ய)வர்களின் லஞ்சம் கடந்த ஏழு மாதங்களுக்குள் இரண்டு மடங்கு கூடி 20 லட்சம்
என உயர்ந்திருப்பது பலரை அதிரச்செய்தது என்றாலும், அத்தனை லகரங்களை வாரியிறைத்து வேலையெடுக்கவும்
தயங்காதவர்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தானிருக்கிறது.
கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 10 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணியிலமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இந்தியாவிற்கு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முழுமையாக ஒரு வருடம் கூட அவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. முகவர்களுக்கு வாரியிறைத்த 10 லட்சத்தைக் கூட மீண்டும் சம்பாதிக்க வழியில்லாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றவர்களும் உண்டு.
கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 10 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணியிலமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இந்தியாவிற்கு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முழுமையாக ஒரு வருடம் கூட அவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. முகவர்களுக்கு வாரியிறைத்த 10 லட்சத்தைக் கூட மீண்டும் சம்பாதிக்க வழியில்லாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றவர்களும் உண்டு.
இதனை பலரும் பலமுறை அரசிடம் முறையிட்டும்
எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது, எனினும் முகவர்களுக்கிடையேயான போட்டி பொறாமையினால்
தற்போது கேரளா, கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல் ஷராஃபா' நிறுவனம் சி.பி.ஐ யின் பிடியில்
மாட்டியிருக்கிறது. இவர்கள்
300 கோடிக்கும் மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
19,500 ரூபாய் மட்டுமே செவிலியர்களிடமிருந்து
கட்டணமாக வாங்க வேண்டிய இம்முகவர்கள் 19.500 ஐ தொடர்ந்து மேலும் இரு பூஜ்யங்கள் சேர்த்து
19,50,000 ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த தொகைக்கு சான்று ஏதும்
அளிப்பதும் கிடையாது.
கிட்டத்தட்ட 1600 செவிலியர்களை இவ்விதம்
குவைத்தில் பணியில் அமர்த்தியுமிருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் எத்தனையோ கோடிகள்
இவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். இந்த 'அல் ஷராஃபா' நிறுவனத்தின் நிர்வாகி வர்கீஸ்
என்பவர், கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு மிக நெருக்கமானவர் என கேரள ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
தற்சமயம் இந்த ஊழல் சி.பி.ஐ ன் விசாரணையில்
இருக்கவே, அடுத்த மாதம் முதல் குவைத்தில் தாதியர்கள் பணியமர்வு அரசாங்கத்தின் அனுமதி
பெற்ற ODPEC/NORKA/OMC மூலம் மட்டுமே நடைபெற வேண்டுமேன அரசு உத்தரவு
பிறப்பித்திருக்கின்றது.
இந்த ஊழலின் பின்புலத்தில் கேரளத்தைச்
சார்ந்த முகர்வர்கள் மட்டுமல்லாது, கேரளத்தின் பிரபல அரசியல்வாதிகளுக்கும், குவைத்
அரசு மருத்துவத்துறையைச் சார்ந்த சில பணியாளர்களுக்கும் பங்கு உண்டென்று சி,பி.ஐ ன்
விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
குவைத் அரசும் இந்த ஊழல் சம்மந்தமாக
விசாரணை நடத்தப்படும் என கடந்த நவம்பர் மாதமே அறிக்கை
வெளியிட்டிருந்தது. நேற்றைய தகவலின் படி இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கீஸ் குவைத்தில்
தங்கியிருந்து விசாக்களை வழங்கி வருவதாக ஏசியாநெட் தொலைக்காட்சி தெரிவிக்கிறது. அவர்
சரணடைய வேண்டி கேரள காவல்துறை விதித்த கெடு ஏப்ரல் 20 ஆம் தேதியோடு முடிந்த பின்னரும்
அவர் சரணடையாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ன்
உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளது.
இத்தனைக்கும் நேற்று 20 ஆம் தேதி அவர்
குவைத்தில் கைது செய்யப்பட்டு, ஷுவைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர்
குவைத்தில் அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாகவும் ஏசியாநெட்
தொலைக்காட்சி செய்தி
வெளியிட்டிருக்கிறது.
குவைத் தாதியர் பணியமர்வில் வளைகுடா
நாடுகளில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இத்தனை கோடி அளவு ஊழல் நடைபெற முதல் காரணம் முகவர்களென்றாலும்,
எத்தனை லகரங்களானாலும் கொடுத்து பணியிலமரும் செவிலியர்களையும் குற்றம் சொல்ல வேண்டியது
தான் இங்கு துரதிருஷ்டம்.
இதே 'அல் ஷராஃபா' நிறுவனத்தில் 2009 ஆம் ஆண்டில், குவைத்தில் தனியார் மருத்துவமனை பணி ஒன்றிற்காக கட்டணம் என நம்பி நான்கு லட்சம்
ரூபாயை கொடுத்தவன் என்ற நிலையில் எனக்கும் வருத்தமுண்டு.
தகவல்கள் ஆதாரம் - ArabTimesOnline, KuwaitTimes, AsiaNet, MediaOneNews
தகவல்கள் ஆதாரம் - ArabTimesOnline, KuwaitTimes, AsiaNet, MediaOneNews
No comments:
Post a Comment