மதம் கொண்டு, மதியின்றி. பிறரின் அமைதியான
வாழ்க்கை முறைக்கு சில போலி ஆன்மீகவாதிகள் பங்கம் விளைவிப்பது சமீப காலமாக தொடர்வது
வருத்தத்திற்குரியது. அப்படிப்பட்டவர்களை ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவதை விட தீவிர(மத)வாதிகள்
என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமதான்
மாதம் கடந்த சில தினங்கள் முன்னர் தான் ஈத் நன்னாளுடன் முடிவிற்கு வந்தது. இஸ்லாமிய
சகோதரர்களின் முதல் நோக்கமே சமாதானம் என்பது தான். எவரையும் சந்திக்கும் பொழுதும் முதலில்
அவர்கள் சொல்வது உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் - 'அஸ் சலாம் அலைக்கும்' என்பதே.
ஆனால் அந்த சமாதானத்திற்கே உலை வைக்கும்
படியான செயலை, அவர்களின் பிரார்த்தனை நேரத்தில், மசூதிக்குள்ளேயே வெடிகுண்டுகளை வெடிக்கச்
செய்த சம்பவம் குவைத் நாட்டில் சில வாரங்கள் முன்னர் நடந்தது; இது போன்றே பாகிஸ்தான்,
சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள்
என்று அறியப்படுபவர்களே!!! மதம் கொண்டு சமாதானத்திற்கு உலை வைக்கின்றனர்.
தமிழகத்திலும் ரமதான் மாதத்தில் இஸ்லாம்
சகோதரர்களுக்குள்ளேயே அரிவாள் வெட்டுகளும், கொலைகளும் அரங்கேறியதை பத்திரிக்கைக்கள்
வாயிலாக அறிய நேரிட்டது.
இந்த அனுபவங்களையும், சில பெயர் கிறிஸ்தவ,
பெயர் இந்து நண்பர்களின் உபவாச, விரத காலங்களிலும் இருந்து பெற்ற அனுபவங்களையும் வைத்துப்
பார்க்கையில் இம்மூன்று மதத்தினருமே நோன்பு, உபவாசம், விரதம் இருப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நன்றாக
விளங்கிக் கொள்ள முடிகிறது.
பல கிறிஸ்தவர்கள் உபவாசம் என்பதன் பெயரில்
ஒரு மாதம் முதல் நாற்பது நாட்கள் வரை புலால் உண்பதை நிறுத்துவார்கள், பிரார்த்தனையும்
தவறாது செய்வார்கள், ஆனால் அவரகள் செயல்களில் எந்த வேறுபாடும் இருக்காது; தொடர்ந்து
பொய் சொல்வதையும், பிறர்மேல் வீண் பழிகளை சுமத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
தேவையிலிருப்போருக்கு உதவி செய்யவும் மறுப்பார்கள். இவர்கள் போலிகளன்று வேறென்ன?
சில இந்து சகோதரர்கள், சபரிமலைக்கு மாலை
அணிந்திருக்கிறேன், அதனால் மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை
என்று பக்தி மயமாக இருப்பார்கள். ஆனால் மாலையைக் கழற்றினால் மது அருந்தலாம், எந்த தீய
பழக்கவழக்கங்களிலும் ஈடுபடலாம் தவறில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பலரது நோன்பும், உபவாசமும், விரதமும்
இன்று இப்படித்தான் பெயரளவில் இருந்து வருகிறது. ஆன்மீகத்தை சரிவர புரிந்தவர்கள், வேதங்களை
முறையாக பயின்றவர்கள் சமுதாயத்துடன் அமைதியை கடைபிடிக்கவே விரும்புவார்களன்றி சமுதாயத்திற்கெதிரான
செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
அனைத்து ஆன்மீக மார்க்கங்களும் சமாதானத்தையே பறைசாற்றி வருகின்றன, வேதங்களை சரியாக புரிந்து கொள்ளாத சில அரைவேக்காட்டு ஆன்மீக வாதிகள் தான் சமாதான குலைச்சலுக்கு காரணிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும், குறிப்பாக
எளிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஓங்கியிருப்பதால் முன்னெப்போதும் இல்லாத
அளவு திருட்டும், கொலைகளும், ஏமாற்றுதலும் நடந்து வருகிறது. கடவுளின் பெயரில் மக்களை
ஏமாற்றி கொள்ளையடிக்கும் சாமியார்களும், போதகர்களும் இந்த வகையினரே.
மதவேறுபாடின்றி சக மனிதர்களை மனிதர்களாய்
பாவிக்கும் நாள் வரும் வரை இங்கு மதத்தின் சாயலால் நடந்தேறும் வன்முறைகளுக்கு முடிவிருக்காது
என்று தான் தோன்றுகிறது.
No comments:
Post a Comment