சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து
ஆளுங்கட்சியைத் தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக் ஒழிப்பிறகு ஆதரவு குரல்கள்
எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம்
முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சொந்த அலுவல் நிமித்தம் தமிழக-கேரள எல்லையில்
இருக்கும் காரக்கோணம் மருத்துவக்கல்லூரிக்கு 13 ஆம் தியதி செல்ல வேண்டியிருந்தது. காரக்கோணம்
செல்வதற்கு களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பேருந்தில் பயணம் செய்தாக
வேண்டுமென்பதால களியக்காவிளையில் இறங்கினேன்.
இறங்கியதுமே காதில் விழுந்த மலையாள குரலிலிருந்து, அங்கு அரசியல் கூட்டம் நடைபெறுவதாக அறிய முடிந்தது.
சற்றே உன்னித்து கவனித்ததும் அது மது ஒழிப்புக்கு ஆதரவான உரை என புரிந்தது.
அந்த உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில்
தமிழில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் நிகழ்த்தப்பட்ட உரை மலையாளத்தில் இருந்தது
என்பதாலும், உரையாற்றியவர் தெளிவான நடையோடு பேசியதாலும் அதனை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.
கேரளத்தின் மதுவிலக்கு, தமிழகத்தின் டாஸ்மாக், தோழர் சசி பெருமாளின் மதுவிலக்குக்கு
எதிரான போராட்டங்கள் போன்றவைக் குறித்து விரிவாக கருத்துக்களைப் பதிவு செய்தார் உரையாற்றியவர்.
உரையின் இறுதியில் அவரை சந்தித்து அவரது
பெயரை அறிந்து கொண்டதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது.
மலையடி பகுதியைச் சார்ந்த குமார் என்பதாக தெரிவித்தார் அந்த பெரியவர். ஏறக்குறைய
60 வயது இருக்கும் அவருக்கு. இத்தனை வயதிலும் மிகத்தெளிவாக, புள்ளிவிவரங்களோடு, உரை
நிகழ்த்துகிறார் என்பது குறித்து பெரிதும் ஆச்சர்யப்பட்டேன். பேச்சை முடித்த கையோடு
அவர் மற்றுமொரு இடத்தில் உரையாற்றுவதற்காக புறப்பட்டு சென்றார்.
இப்படியாக மதுவிலக்குக்கு ஆதரவாக அனைத்து
தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் பிடிவாதம் கொண்டு
மது குறைப்பு குறித்து கூட எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒரு அரசைப் பெற்றிருப்பதற்கு
நாம் வெட்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment