கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும்
ஒரு சராசரி இந்திய இளைஞனைப் போலவே நானும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். வீட்டில்
இருக்கும் பட்சத்தில் இந்திய ஆட்டங்கள் என்றால் ஆட்டம் துவங்கும் முன்னரே தொலைக்காட்சிப்
பெட்டிக்கு முன்னதாக அமர்ந்து விடுதல் வழக்கம்.
ஐந்து வயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் அத்தனைப் பிரியம்.
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது
வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைக்கும் அளவிற்கு வசதி இல்லை.
அந்த சமயம் மார்த்தாண்டம் எல்.எம். துவக்கப்பள்ளியில் ஐந்தாவது
வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1992 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை ஆட்டங்களின் ஒளிபரப்பு உரிமையை அன்றைய ஸ்டார் டிவி (ஆரம்பத்தில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ்) நிறுவனம்
வாங்கியிருந்தது.
நான்கு மணிக்கு எப்போது மணி அடிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பேன்,
மணி அடித்ததும் பையை தலையில் போட்டுக் கொண்டு எந்த கடையில் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது
என்பதை அறிய ஒவ்வொரு கடையாக ஏறிட்டுப் பாத்துச் செல்வேன்.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், அன்றைய திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப்
பணிமனையிலிருந்து சற்று கீழ்ப்புறம் அமைந்திருக்கும் ஸ்டார் லாட்ஜ் ல் தான் வழக்கமாக
கிரிக்கெட் பார்ப்பதுண்டு.
நேரலையானாலும், பழைய ஆட்டங்களானாலும் கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இன்னும் ஒரு ஓவர் பார்த்து விட்டு
வீட்டிற்குக் கிளம்பி விட வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் அடுத்த ஓவரின் இறுதியிலும்
இன்னும் ஒரே ஓவர் பார்த்து விட்டு சென்று விடலாம் என்கிற அதே எண்ணம் தான் வந்து
செல்லும்.
அப்படிப் பார்த்துப் பார்த்து ஒரு நாள் இரவு 7 மணி ஆகி விட்டது. வீட்டில்
அனைவரும் அன்று ஒரு நாள் பதட்டப்பட்டதோடு சரி. அதன் பின்னர் நான் தாமதமாக போனால்
கூட 'அவன் எங்கயாவது கிரிக்கெட் பாத்திட்டிருப்பான்' என்று சமாதானப்பட்டுக் கொள்வார்கள்.
எனினும் ஆறரை மணிக்குள் வீடு திரும்பி விடுவேன்.
அத்தனை மோகம் கொண்டிருந்தும் முழுநேரமாக கிரிக்கெட் ஆடுவதற்கு மட்டும் வீட்டில் சம்மதம்
இல்லை. நண்பர்களுடன், பக்கத்து ஊர்களிடையே நடைபெறும் போட்டிகள் வரை மட்டுமே
எட்டியிருந்தேன். பிற்காலங்களில், அவ்வப்போது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்திலும்,
ஜான்ஸ் பள்ளி மைதானத்திலும் நடைபெறும் லெதர் பால் ஆட்டங்களை வேடிக்கை பார்ப்பது வழக்கம்.
இப்படியாக தொடர்ந்த பயணத்தில், சர்வதேச ஆட்டம் ஒன்றை நேரடியாக மைதானத்தில்
சென்று பார்த்து விட வேண்டும் என்று வெகுநாள் கனவு கொண்டிருந்தேன், அது சமீபத்தில்
தான் நிறைவேறியிருக்கிறது, இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட்
ஆட்டத்தின் நான்காவது நாள் ஆட்டத்தை காணும் வாய்ப்பை துபாயில் பெற்றேன்.
டெஸ்ட் ஆட்டம் என்பதால் டிக்கெட் எளிதில் கிடைத்தது, தொலைக்காட்சியில்
பார்ப்பதற்கும் நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கத்தான்
செய்கிறது. சர்வதேச ஆட்டம் என்றாலும் அது சாதாரணமாக மாவட்ட அளவில் ஆடும் ஆட்டத்தைப்
பார்ப்பது போன்ற உணர்வே தோன்றியது.
தொலைக்காட்சியில் Replay, மற்றும் பிற Statistics களின் தரவு சேர்க்கப்படுவதால்
அதன் சுவாரஸ்யம் கூட்டப்படுகிறது, நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப் பார்ப்பதன்
அனுபவம் சிறப்பானது என்றாலும் மைதானத்தின் எந்த பகுதியில் உட்கார்ந்திருக்கிறோம் என்பது
தான் நமக்கான காட்சியைத் தீர்மானிக்கிறது.
எப்படியாயினும் வெகுநாளைய கனவு நனவானதில் ஒரு திருப்தி.
1 comment:
அனுபவம் அருமை
Post a Comment