யகூதா என்றறியப்படுகின்ற யூதேயாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவரான יֵשׁוּעַ (Yeshu'a in Aramaic ) இயேசுவை, இந்த குளிர்காலங்களிலே ( டிசம்பர் 25 முதல் ஜனவரி 19 வரையிலான இடைப்பட்ட நாட்களில்) யூலே, கிறிஸ்துமஸ், எக்ஸ்மஸ், நோயல் என பல பெயர்களில் நினைவுகூர்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் அதாவது ஏறத்தாழ 6-12 நூற்றாண்டுகளில் இவ்விதம் நினைவு கூர்வதில் எவ்வித சந்தைப்படுத்தலோ, வியாபார நோக்கமோ இல்லையெனினும் அண்மைக் காலங்களில் இயேசுபிறப்பின் நினைவு கூறலை கிறிஸ்துமஸ் என்ற அடைமொழியோடு சந்தைப்படுத்தி, வியாபார களமாக்கி விட்டது தான் இம்மானுடத்தின் சூட்சுமம்.
வாழ்த்து அட்டையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சந்தைப்படுத்தல், புத்தாடை, அலங்காரம், பட்டாசு, சான்டா கிளாஸ், சிவப்பு வர்ண தொப்பி, நட்சத்திர விளக்கு, அலங்காரத்தோரணை கொண்ட மரம், மதுபானம், கேக் என இன்னும் நீள்கிறது.
மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு போதையாகப் பார்ப்பவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் இரட்டிப்புப் போதை.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 30-35 மில்லியன் அலங்கார மரங்கள் விற்கப்படுவதாக history இணையதளம் குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில் மட்டுமே இப்படியான மூடத்தனத்திற்கு இவ்வளவு பணம் விரயமாகிறது என்றால் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்துமஸிற்கு எவ்வளவு பணம் விரயம் செய்யப்படுமென்பது ஊகிக்க முடியாதது.
பணம் செழுத்தவன் விரயமாக்குவதில் இங்கு எவர்க்கும் நட்டமில்லை, மாறாக இவர்களைப் பார்த்து நாமும் அலங்காரப்படுத்த வேண்டும் என்று கடன் வாங்கி பிச்சைக்காரனாகும் பாமரன் தான் இந்த சந்தைப்படுத்தலில் விழுந்து போகிறான்.
விவேகானந்தரின் கூற்றான "சிக்கனம் என்பது எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதில் அல்ல; என்ன தேவைகளுக்காக செலவு செய்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது" என்பது தான் இந்த சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் நம்மைக் கேட்க வேண்டிய கேள்வி.
அதோடு இயேசுவின் பிறப்பையே, மேசியா(கிறிஸ்து)வின் பிறப்பு என்று அடையாளப்படுத்தி இந்த சந்தைப்படுத்தலை உலகமயமாக்கியது தான் அரசியல் வியாபாரிகளின் தந்திரம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியம்.
No comments:
Post a Comment