சிறுவனாயிருக்கும் போது என்னைப் பார்க்கையிலெல்லாம்
மரியாதைக்குரிய பெரியவர் ஒருவர் 'சிரியா' நாட்டுக்காரன் என்பார். நானும் எதோ வெளிநாட்டுக்காரன்
போன்று உவமைப்படுத்திச் சொல்கிறார் போலும் என்று கருதிக்கொள்வேன். ஆனால், நான் சிரிக்காமல்
இருப்பதை நையாண்டி செய்வதற்காகவே 'சிரியா' நாட்டுக்காரன் என அழைத்திருக்கிறார்
என்பது தாமதமாகவே புரிந்தது!
இன்று 'சிரியா' வில் இருக்கும் பெரும்பாலான
சிறுவர்களும் 'சிரியா' நிலைமையிலே இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
கடந்த ஓராண்டில் மட்டும் 652 சிறுவர்கள்,
குண்டுகளுக்கும், வன்முறைகளுக்கும் பலியாகியிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா சபை.
இதை எழுதுகையிலேயே கண்களில் நீர் எட்டிப்பார்க்கிறது
எனும் போது, அச்சிறுவர்கள் சார் உறவுகளின் துயரம் நிச்சயம் இருதயங்களை நொறுக்கிப் போடும்
என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஏழு வயது சிறுவர்கள் சிறைக் காவலாளிகளாகவும்,
போர்க்களங்களில் ஆயுதமேந்துபவர்களாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பெற்றவர்களைப் போரில் இழந்த நான்கு வயது
சிறுவன் வயிற்றிற்காக உணவகத்தில் வேலை செய்வதெல்லாம் பெருங்கொடுமை! இவர்களின் மன ரீதியான
உளைச்சலுக்கும், வலிகளுக்கும் இடையே நமது பிரச்சினைகளெல்லாம் ஒன்றுமேயில்லை.
இனியேனும் என் போன்றோர் சிரிக்கப் பழகுதல்
வேண்டும்!
Photo Credit: AFP
No comments:
Post a Comment