பிறந்த சில
மாதங்களில் தாயைப் பறிகொடுத்து விட்டு எங்கோ அனாதையாய் இருந்திருக்க வேண்டிய
சிறுவன்,
தொண்டு நிறுவனம் ஒன்றினால் தத்து எடுக்கப்படுகிறான்; பின்னாளில் ஏழை எளிய மக்களுக்காக நாகர்கோவிலில் மருத்துவமனை ஒன்றைத்
துவங்கிச் செல்கிறார்; துவங்கப்பட்ட போது இந்தியா முழுவதும் காலரா எனும் கொள்ளைநோயினால்
பீடிக்கப்பட்டிருந்திருக்கிறது.
அம்மருத்துவமனையின் மூலம் அப்பகுதியைச் சார்ந்த பெருந்திரளான மக்கள் பயனடைகின்றனர். சம காலத்தில் அங்கு சிகிச்சை பெற்றவர்கள், படித்தவர்கள், பணி செய்தவர்கள் என சில லட்சம் பேர் மிக உயர்ந்த நிலையில் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்றனர்.
நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓரு கொள்ளை நோய் கொரோனா உருவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் சனங்களை வெகுவாகப் பாதிக்கிறது; நாம் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையாயிற்றே,
நாம் பயின்ற இடமாயிற்றே, நாம் பணிபுரிந்த நிறுவனமாயிற்றே, நம் உணர்வுகளோடு பிணைந்த மருத்துவமனையாயிற்றே என்பவற்றின் பெயரில் மூச்சுத்திணறல்களோடும் நெஞ்சு வலிகளோடும் சாமானியர்கள் நம்பிக்கையோடு அம்மருத்துவமனையை நாடுகிறார்கள்; போகின்ற வேகத்தில், அவர்கள் நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் விதம் "இங்கு சிகிச்சையளிக்க முடியாது" என்கிற பதிலுடன் திருப்பி அனுப்பும் மிக மிகப் பரிதாபமான நிலையில் இன்று இருக்கிறது அம்மருத்துவமனை!
அம்மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தவர் 'Harry' Henry John Andrews [b.1873 d.1919]
அவரது சிறு வரலாறு கீழே
1873 ல் லண்டன் கிழக்கு முனையில் அனாதையாக தன் வாழ்நாளைக் கழித்திருக்க வேண்டிய அவர் எம்மா பூத் என்கிற பெண்மணியால் தத்து எடுக்கப்பட்டு அவர் பணி புரியும் சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்படுகிறான்.
எம்மா 1888 ல் இந்தியாவிற்கு பயணப்படுகையில் அச்சிறுவனையும் உடன் அழைத்து வருகிறார். இந்தியாவில் காலரா நோய் அதி தீவிரமாக இருந்த நேரமது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது பதின் பருவத்திலேயே (1893) மருத்துவப் பணியில் ஈடுபாடு காட்டத் தொடங்குகிறான் அச்சிறுவன்.
நாகர்கோவிலில் அவர்களது அலுவலகக் குளியலறையை மருத்துவப்பணிக்காக பயன்படுத்துகிறார்.
பின்னர் சிக்காகோ சென்று மருத்துவம் பயின்று விட்டு நாகர்கோவில் திரும்பும் அவர் மருத்துவர் பெர்சி டர்னருடன் 1901 ல் மருத்துவமனையை துவக்குகிறார். அங்கிருந்து குஜராத் Emery மருத்துவமனையில் சில காலமும், பின்னர் உ.பி மொரதாபாத்தில் சில காலமும் பணியாற்றி விட்டு வஷிரிஸ்தான் (இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது) பகுதியில் இருந்த இந்திய ராணுவ முகாமில் மருத்துவராகப் பணியில் இருந்த போது தோட்டாக்களால் காயமடைந்த ராணுவ வீரர்களைப் பாதுகாப்பான இடத்தில் மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு உயிர் நீத்திருக்கிறார்!
தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டச் சிறுவன், அவனது காலம் முழுமையும் பிறர் நலனிற்காக உழைத்து இறக்கும் தருவாயிலும் பிறருக்காகவே மாண்ட பேராளுமை எங்கே! அவர் துவக்கி வைத்துப் போன மருத்துவமனையினால் மூன்று தலைமுறைகள் வரை நன்மைகளைப் பெற்று விட்டு, இன்று அவ்விடத்தையே மீச்சிறு அவசரச் சிகிச்சைக்கு கூட ஒவ்வாத ஒரு இடமாக பேணுகின்றவர்கள் எங்கே!!
அங்கு பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையிலும், அங்கு பணிபுரிந்தவன் என்கிற அடிப்படையிலும், இன்றளவும் ஒரு அங்கமாகத் தொடர்பவன் என்கிற ஆதங்கத்திலும் இதைப் பதிவு செய்கிறேன்!
இன்றைய தேதியில் - சுயநலன்களால் தொலைக்கப்பட்ட ஆகப்பெரும் அடையாளமாகத் தான் அவ்விடத்தைப் பார்க்கிறேன்.
நான் அண்ணாந்து, அதிகம் வியந்து பார்த்த, என் மனதிற்கினிய CBH குறித்து மன வருத்தத்துடன் எழுதுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் கனத்த இதயத்துடன் முடிக்கிறேன்.
No comments:
Post a Comment