September 25, 2022

நன்றிகள் பெடரர் 🎾❤️

ஐந்து வயது முதலே கிரிக்கெட்டை மட்டுமே கண்டும், விளையாடியும்; கிரிக்கெட் குறித்த தகவல்களை மட்டுமே கேட்டும், விவாதித்தும் இருந்ததால் பிற விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு பதின்ம வயது வரை பெரிதாக இல்லை. 

பதின்ம வயதின் மத்தியில் தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆட்டங்கள் நண்பர்கள் வழியே அறிமுகம் ஆயின.

அன்று பார்க்க ஆரம்பித்த EPL இன்றளவும் Manchester United விசிறியாக வைத்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் பீட் சாம்ப்ராஸ், அகாசி, போரிஸ் பெக்கர் போன்றோர் டென்னிசில் கோலோச்சிய காலம் அது. 

அப்போது Hard Court ல் மரப்பலைகைகள் / பிளைவுட் பலகைகள் கொண்டு டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தோம். 

அதன் பின்னர் படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்றாகிய பின்னர் இன்று வரை விளையாட்டுகளை கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் தான் அமைந்திருக்கிறதே தவிர விளையாடும் வாய்ப்புகள் இல்லை. 

அத்தனைப் பெரிய டென்னிஸ் Court ல் வலை இல்லாமல் ஒரு செட் (6 Games) விளையாடவே தாவு தீர்ந்து போகும். 

அப்படியென்றால் ஒரு உலகளாவிய ஆட்டத்தில் ஐந்து செட் ஆட வேண்டுமெனில் எப்படியான உடற்திறனும், திறமையும், பொறுமையும் வேண்டியிருக்கும்!

ஐந்து செட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் அதிகமாக ஐந்து மணி நேரம் வரையிலும் ஆட வேண்டி வரும். 

இப்படியான உடற்திறன் தேவைப்படுகிற ஆட்டத்தில், தான் ஆடிய 23 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தர வரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் தொடர முடிந்திருக்கிறது என்கிற ஒன்று போதும் பெடரரின் திறமையைக் குறிப்பிட்டுச் சொல்ல. 

2019 பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆண்டி முர்ரே உடைந்து அழுததற்கும், இரு தினங்கள் முன்னர் பெடரர் அழுததற்குமான முதற் காரணம், தாங்கள் மிகவும் நேசிக்கும் டென்னிசை தங்கள் காயங்கள் காரணமாக இனி தொடர முடியாதே என்பது தான். 

தனக்கு எதிராக ஆடியவர்களுடன் மிகுந்த நட்புணர்வும், மரியாதையும் கொண்டிருந்தார் பெடரர். தனது கடைசி ஆட்டத்தில் தனது போட்டியாளரும், தான் வியந்து போற்றுகிற நடால் உடன் இணைந்து இரட்டையர் ஆட்டம் ஆடினார். 

அவர் நினைத்திருந்தால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அல்லது ஏதேனும் ATP போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருக்கலாம். " நான் தனிமையாக உணர விரும்பவில்லை, அதனாலேயே Laver Cup ல் தன் சக  ஆட்டக்காரர்கள் உடனிருக்கையில் கடைசி ஆட்டத்துடன் ஓய்வு பெற விரும்பினேன் " என்றார் அவர். 

சமகாலத்தின் ஒப்பற்ற டென்னிஸ் நட்சத்திரம் பெடரருக்கு நன்றிகள். #Federer 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails