February 11, 2010

'அ' 'ஆ' அசல், ஆ-ஒருவன்

ஆளாளுக்கு அசலையும் ஆயிரத்தில் ஒருவனையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதனிடையில் சினிமா விமர்சனம் செய்யும் அளவிற்கு இன்னமும் அனுபவம் போதாது என்றாலும் என் மனதில் பட்டதை பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த அ... ஆ.

.ஒருவன் போன்ற திரைப்படம் தமிழ்த்திரையுலகில் உருவாக செய்த முயற்சிக்கே சம்பந்தப்பட்டவர்களைப் பாராட்டலாம்.

சோழர் காலத்து பேச்சு வழக்கிற்கும், அதற்கு இணையான கலை மற்றும் காட்சியமைப்புகளுக்கும் நிச்சயம் அதிகம் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இயக்குனருக்கும், கலை இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

Gladiator உள்ளிட்ட சில ஆங்கில திரைப்படங்களைப் பின்பற்றி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கருத்துக்கள் ஒருபுறமிருந்தாலும்; அது போன்ற காட்சியமைப்புகள் தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் இட்டுச்செல்ல காரணமானால் மகிழ்ச்சியே.

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை சற்றே சொதப்பினாலும் பாடல்கள் ரசிக்கும் ரகம். நான் அதிகம் எதிர்பார்த்த மாலை நேரம் பாடல் திரைப்படத்திலேயே இடம்பெறவில்லையா இல்லை வெட்டி விட்டார்களா என தெரியவில்லை!!

சற்றே அதிகமான (குறிப்பாக ரீமாசென்) கிளாமரைக் குறைத்திருக்கலாம்!

ஆயிரத்தில் ஒருவனின் ஆரம்பத்தில் சோழர் கால வரலாறிற்கும் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என வேறு போட்டிருக்கிறார்கள். அதோடு ஈழத்தமிழர் நிலைக்கும், திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை எனவும் போட்டிருக்கலாமோ என்னவோ!!

இறுதி கட்ட காட்சிகள் ஈழத்தமிழரை நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.

.சல்

அஜீத்திற்கும், அஜீத் ரசிகர்களுக்கும் ஏகனின் தோல்விக்குப் பிறகு அசல், மனநிறைவைத் தந்திருக்கலாம். எனினும் புதிய மொந்தையில் பழைய கள் என்பதாகவே படுகிறது.

மறுபடியும் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டை சரண் கையில் எடுத்திருக்கிறார்.

திரைப்படத்தில் பிரான்ஸும், மும்பையும் கதைக்களமாக இருந்தாலும் அமைக்கப்பட்ட காட்சிகள் பெரும்பாலானவை இரு நகரங்களின் அழகையும் காட்ட தவறி விட்டன.

பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் ரீமிக்சை தவிர மற்றவை அவ்வளவாக ஈர்க்கவில்லை. யூகி சேதுவும், பிரபுவும் எதற்கோ வந்துவிட்டு போகிறார்கள்.

சமீராவையும், பாவனாவையும் துரத்தும் வில்லன் கோஷ்டிகள் சட்டென நிற்பதும், பின்னணியில் ('புகை வரும் முன்னே அஜீத் வருவார் பின்னே' என்ற தோரணையுடன்) புகையுடன் அஜீத் வெளிப்படுவதும்;

உச்சகட்டத்தில் அதாங்க கிளைமேக்ஸில், ஹீரோ சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கடத்தி வைத்திருப்பதையும்(எத்தன படத்தில பாத்திருப்போம் சரண் சார்!!) பார்த்துவிட்டு அசல் வித்தியாசமான சினிமாவாகத் தெரியவில்லை.

ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக்குகள் இல்லாதது தான்.

1 comment:

DR said...

நான் நெணச்சென் நீங்க சொல்லிட்டீங்க... வாழ்த்துக்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails