April 30, 2026

தலித் கிறிஸ்தவர் - அரசியல் - எலைட் மனோநிலை

கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் அதிலும் தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்குள் ஒரு எலைட் மனோபாவத்தை கொண்டு நடப்பது விவாதத்திற்கு உரியது.

ஆண்ட பரம்பரை என தங்களைக் குறிப்பிடும் வகையினருக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. 

தங்களது எலைட் மனோபாவம் ஆபத்தானது; அது சமூக நீதி அரசியலுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது பெரும் கேள்விக்குறி!

“கிரேக்கனென்றும் இல்லை யூதனென்றும் இல்லை” எல்லாரும் கடவுள் முன்னால ஒண்ணு தான் அப்படின்னு பவுல் எழுதியிருந்தாலும், நீர் சொல்றத சொல்லும் நாங்க பின்னொட்டு வச்சி கிறிஸ்தவ ப*#ர், கிறிஸ்தவ சா#*, கிறிஸ்தவ வ*#%@ அப்படின்னு சாதியால் தான் அறியப்படுவோம் என பிரிவினை செய்பவர்கள் தான் So Called கிறிஸ்தவர்கள். 

(இதனாலேயே தான் தலித் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட்டு எழுத வேண்டி இருக்கிறது.)

தலித் கிறிஸ்தவர்களை மற்ற கிறிஸ்தவ சபையினர் புறந்தள்ளுவது காலங்காலமாக நடந்து வருகிற ஒன்று. (இந்த தலைமுறையினர்  ஓரளவு மாறியிருக்கின்றனர்)

இதில் இன்னும் முரண் நகை என்னவென்றால் ‘தலித் கிறிஸ்தவர்கள் இடையே கூட ஒற்றுமை கிடையாது.’

அது கூட பரவாயில்லை… NEET தேர்வு உள்ளிட்ட எந்த பொது நலன் சார்ந்த விசயத்திலும் தமிழர்களுக்குள்ளேயே அரசியல் கட்சிகள் துவங்கி , அரசியல் சாரா அமைப்புகள் வரை நமக்குள்ளேயே ஒருமித்த கருத்து கிடையாது.  

இஸ்ரேலியர்கள் - இஸ்ரேல் அல்லாதோர் ( புற ஜாதியினர்) என்கிற விவரணைக்கு இணையானது தான் தலித் - தலித் அல்லாதோர் என்கிற விவரணையும். 

இது கிறிஸ்தவத்தின் அடிப்படையிலேயே பிரிவினை இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அதே போன்ற பிரிவினை தமிழர்கள் இடையேயும் சாதி வடிவில் தொடர்கிறது.

சாதிய வேறுபாடு பார்க்காமல் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் செய்து விட்டுப் போன  நற்செயல்கள் தொடராமல் போனதிலும்; ஒடுக்கப்பட்டோர் நலனிற்காக அவர்கள் செய்த சேவைகளை மறந்துவிட்டு தங்கள் சுய லாபத்திற்காக கிறிஸ்தவ தத்துவத்தை வியாபாரமாக்கியதிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. 

இப்படி உள்ளடி வேலைகள் செய்து தங்கள் மேட்டிமைத்தனத்தை நிறுவி அதன் வழியாக பொருளீட்டும் தலித் கிறிஸ்தவர்கள், பெருநகரங்களில், கேள்விகளுக்கு உள்ளாகும் போது தங்களின் தலித்  அடையாளத்தையும் துறந்து விட தயாராக இருக்கிறார்கள்.

தலித் என தங்களை அடையாளப்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை. 

தங்களை தலித் என்கிற அடையாளத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக…

“நாங்க அந்த ஆளுங்க இல்ல”

“சே… சே… நாங்க SC இல்ல! நாங்க BC தான்” என்பார்கள். 

அதாவது தங்களை பிற சாதியினருக்கு ஒப்பாக காண்பிக்க இவர்கள் முன்வைக்கும் பொய்கள் இவை. 

‘தலித் என்றால் இழிவு’ என காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விவரணைக்கு, தங்கள் நிஜ அடையாளங்களில் இருந்து தப்பிக்க முயலும் தலித்களின் இது போன்றதான சொல்லாடல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. 

இவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டு, இடைநிலைச் சாதியினரை தூக்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவை அளிப்பதும், அவர்களது சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிக்காமலும் இருப்பது சமூக நீதி அரசியலில் நம்பிக்கையுடையவர்களுக்கு அழகல்ல. 

#தேர்தல்2026

#DalitChristians

April 24, 2026

திராவிட கட்சிகளின் அதிகார மமதை

 தேர்தல் - சமூக வலைதளம் - யதார்த்த வாழ்க்கை இவை இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள் முடியும் ஆனால் ஏற்றுக்கொள்வதில்லை. 

பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என கருதும் கட்சிகளும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை விவாதிக்காத சமூக வலைதள பதிவர்களும் / எழுத்தாளர்களும்/ ஊடகங்களும் அதன் போக்கிலேயே தொடர்கின்றன. 

இவை பெரும்பாலும் Like/ TRP / Votes இவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. 

கன்னியாகுமரியின் இயற்கை வள அழிப்பு; கேரளாவில் இருந்து கன்னியாகுமரியில் கொண்டு கொட்டப்படும் கழிவுகள்; சிவகாசி, விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்; மாஞ்சோலை மக்களின் வாக்கு பறிப்பு… இவை முதலான இன்னும் பல நூறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் / தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த தேர்தலை ஒட்டி நிகழவில்லை. 

ஆனால் வாக்கை மட்டும் இன்னாருக்கு போடுங்கள், அன்னாருக்கு போடுங்கள் என உழப்பல் தொடர்ந்தது. 

கல்வியை அளித்து விட்டு கூடவே வாக்குக்கு காசையும், பொன்னையும், பொருளையும்  கொடுக்கிற கட்சிகள் சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரும். 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்த பிறகும் சாதியினால் பிரிந்து கிடக்கிறோம், இளைஞர்களை அரசியல் படுத்தாமல் திரை மோகத்தில் வைத்திருக்கிறோம்; அவர்களை தற்குறிகள் என்றும் அழைக்கிறோம்,  நகரங்களை மேம்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவழித்து விட்டு நம் முதுகெலும்பான கிராமங்களை தேய விட்டிருக்கிறோம். 

பொத்தாம் பொதுவாக சனாதனத்தின் மீது குற்றம் சுமத்தி விட்டு, இடைநிலை சாதியினர் தலித் மக்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தும் வன்முறைகளை ஒடுக்க தவறிய திராவிட கட்சிகள் இருந்தென்ன பயன். இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் தலித் தலைவர்களும் வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் பேரபத்தம். 

முதல்வரும், துணை முதல்வரும்  இன்று வரை வேங்கைவயலில் கால் வைக்கவில்லை. மக்கள் அங்கு தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள். 
இவர்கள் இப்படியாக மக்களை பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது வெறும் வாக்குகளுக்காகவும் அதன் வழியாக பெறும் அதிகாரத்திற்கும் தான் என்பது தான் உண்மை. 

அதனை திராவிட கட்சிகளுக்கு கொடி பிடிப்போர் அறிந்திருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் பெரும்பான்மையின் பக்கம் நின்று ஒத்து ஊதுவதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். 
#தேர்தல்2026

March 25, 2026

தேர்தலும் நம் கீழ்மைகளும்!


தேர்தலும், அரசியலும் மக்கள் நலனிற்கானவை என்பது தானே உண்மை! சாதிய அடிப்படையில் / மதப் பின்னணியில் இயங்குகிற எந்த கட்சியும் எங்கள் சாதியினர் மட்டும் வாக்களியுங்கள் அல்லது எங்கள் மதத்தினர் மட்டும் வாக்களியுங்கள் என்று கேட்பதில்லை தானே! 


அரசியல் அமைப்பு சட்டப்படி எல்லாரும் சமம் என்பதும் உண்மை தானே! அப்படித்தானே அனைவரும் இயங்க வேண்டும்!! 


ஆனால் களம் அப்படியா இருக்கிறது!! 2026 ல் கூட எவரையும் சமமாக நடத்த மறுக்கிற, சாதி / மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிற, கூட்டணி ஆட்சியை அமைக்க மறுக்கிற கட்சிகளாகத் தான் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான  திமுக, அதிமுக இரண்டும் இருக்கின்றன. 


சாமானியர்களுக்கு ஒன்று என்றால் உடனடியாக களத்தில் வந்து நிற்பது கம்யூனிஸ்ட் தோழர்களும், இடதுசாரி கொள்கையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கிற திருமாவளவன் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே தான். 


ஆனால் அவர்களும் கூட, தொகுதிப் பங்கீடு வரை சாதியத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற திராவிட கட்சிகள் உடன் சேர்ந்தே நிற்கிறார்கள். காலங்காலமாக தொடரும் இது போன்ற கொடுமை வேறில்லை. 


இப்படியாக இவர்கள் சில சட்டமன்ற தொகுதிகளுக்காக, பாராளுமன்ற தொகுதிகளுக்காக  தங்கள் கொள்கைகளை அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் அதிகாரம், பணம், பதவி மேல் இருக்கும் ஆசைகளின்றி வேறில்லை. 


கம்யூனிஸ்ட் / விசிக திமுக கூட்டணியில் இருந்ததால் இவற்றை சாதித்தோம் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது! 


சாதிய பாகுபாடு / வன்முறை குறைந்திருக்கிறதா!!

நீட் தேர்வு இல்லை என்று ஆகி விட்டதா!!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதா!!

செவிலியர்கள் / துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டதா!!


இன்னும் சொல்லப்போனால், சனாதனம் / பாஜக உள்ளே வந்து விடக்கூடாது, அதனால் தான் திமுக உடன் இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தை, சாதியத்தை மறைமுகமாக ஆதரிப்பதே திமுக தான். பாஜக தமிழகத்தில் வளர காரணமும் திமுக தான் என்பது வரலாற்று உண்மை. 


கட்சியினர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரையும் பணப்பேய் பிடித்து ஆட்டுவிக்கிறது; சுயநலன்கள், சாதியப் பெருமைகள், மத மேட்டிமைகள் அகலாமல் நிம்மதியான தமிழகம் எக்காலத்தும் சாத்தியமில்லை. 


இந்த தேர்தல்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அவை சாமானியனுக்கு எவ்விதத்திலும் நன்மை தருவதில்லை. 


நாம் நம் கீழ்மைகளால் தான் மடிகிறோம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!!! 


Related Posts with Thumbnails