October 18, 2013

தாயும் நானே தங்க இளமானே Vs தேவனே நான் உமதண்டையில்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 16/10/2013 தேதி ஒளிபரப்பில் தற்செயலாக மதுமிதா பாடிய "தாயும் நானே தங்க இளமானே" என்ற பாடலை கேட்க நேர்ந்தது. பாடலின் ஆரம்பத்திலேயே இந்த மெட்டு "தேவனே நான் உமதண்டையில்" என்ற கிறிஸ்தவ பாடலின் மெட்டைப் போலல்லவா இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எனினும் முழுப்பாடலையும் கேட்டு விட்டு ஒரு தீர்மானத்திற்கு வருவோம் என காத்திருந்தேன்; முழுப்பாடலும் முடிந்தது... சந்தேகமேயில்லாமல் 'தேவனே நான்' பாடலின் மெட்டும் 'தாயும் நானே' பாடலின் மெட்டும் ஒன்றே என தெளிவாகியிருந்தது..

பின்னர் கூகுளில் "தாயும் நானே" பாடலின் முழு விவரங்களை தேடினேன். 1982 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஜானகி அம்மையார் அவர்கள் ரஜினி காந்த் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்" என்ற திரைப்படத்திற்காக பாடிய பாடல் என்ற விவரம் கிடைத்தது. இதே மெட்டில் பி. சுசீலா அம்மையார் அவர்கள் குரலில் "இந்த மங்களம் செழிக்கவே" என்ற கிறிஸ்தவ திருமணப்பாடலும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவனே நான் உமதண்டையில் பாடல் மதுரை ஜில்லா பகுதிகளில் ஊழியம் செய்து வந்த போதகர். சந்தியாகு என்பவரால், Nearer, my God, To Thee என்ற ஆங்கிலப்பாடலைத் தழுவி எழுதப்பட்டது. எழுதப்பட்ட ஆண்டின் விவரம் தெரியவில்லை.

இவ்விதமாக கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பாடல்கள் நமது பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மெட்டமைக்கப்பட்டன. தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை என்பவரும்  பல கிறிஸ்தவ கீர்த்தனைகளை  எழுதி இருக்கிறார்கள்.  அவற்றை பெரும்பாலும் இசைத்தட்டில் பாடியவர்கள் நடராஜ முதலியார் மற்றும்  ஜிக்கி அவர்கள். சில பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவரான எல்.ஆர்.ஈஸ்வரி (லூர்து மேரி ராஜேஸ்வரி ஈஸ்வரி) பாடிய அம்மன் பக்தி பாடல்கள் மிக பிரபலம். இந்துவான ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல்கள் மிக பிரபலம்.  (சுசீலா அவர்கள் பாடிய எல்லா ஹிந்து, கிறிஸ்தவ,   பக்தி பாடல்களும் பிரபலம்.).

ஆனால் இன்று மதத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது, மனிதன் என்று மதத்தை விட்டு மனிதத்தை தழுவுகிறானோ அன்று தான் இம்மண்ணுலகம் மகிழும்.

தேவனே நான் உமதண்டையில் பாடலும், தாயும் நானே பாடலும் "துஜாவந்தி" ராகத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவையிரண்டில் எந்த பாடல் முதலில் மெட்டமைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி: விஜய் தொலைக்காட்சி
விக்கிப்பீடியா


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails