நண்பர்கள் சேர்ந்து நட்பின் வலிமையை உணர்த்தியிருக்கும் திரைப்படம் நாடோடிகள் எனலாம்.இரு தோல்விப்படங்களைக் கொடுத்த பின்னரும் தளராமல் இந்த படத்தை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதே காரணத்தை(தோல்வி) வலியுறுத்தி பலரால் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னரும் நண்பனுக்காக துணிந்து நடித்து தனது சாமர்த்தியமான நடிப்பால் கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் சசி குமார்.
காதல் என்றும் உயர்ந்தது, சில காதலர்களாலேயே காதலுக்கு களங்கம் ஏற்படுகிறது என்ற மையக் கதைக்கருவோடு அந்த காதலுக்காக எதுவும் செய்யும் நண்பர் கூட்டங்களையும் அதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் இழப்புகளையும் இணைத்து திரைப்படத்திற்கு முழு வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர்.
நம்மை கதாபாத்திரங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யும் விதம் தீட்டப்பட்டிருக்கும் தொய்வில்லாத திரைக்கதையும், அடுத்து என்ன நிகழும் என யூகிக்கவியலாத அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சி அமைப்புகளும் நம்மை இருக்கைகளில் கட்டிப் போடுகின்றன.
ஒருபுறம் தன் மகன் எது செய்தாலும் சரியாகத் தான் செய்வான் என கருதும் சசியின் தகப்பனார் , மறுபுறம் தன் மகன் என்ன செய்தாலும் அதில் சந்தேகம் கொள்ளும் பாண்டியின் தகப்பனார் என்ற இரு வேறான தகப்பன் கதாபாத்திரங்கள்... இப்படியொரு தகப்பன் நமக்கு வாய்க்க வேண்டும்/வாய்க்கக் கூடாது என நிச்சயம் யோசிக்கச் செய்யும்.
காமெடிக்கென்று தனிக்களம் இல்லையென்றாலும் வசனங்களிடையே வரும் டைமிங்க் காமெடிகளால் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.
"நண்பர்கள் இருக்கிறாங்க அப்படின்ற ஒரே தைரியத்தால தான் இன்னைக்கும் துணிஞ்சு காதலிக்கிறாங்க" என்கிற வசனத்தில் இளைஞர்களின் கைத்தட்டல்களை அள்ளுகிறார் சமுத்திரக்கனி அவர்கள்.
அறிமுக கதாநாயகியிடமிருந்து அளவாக ஆனால் அற்புதமாக நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.முதல் பாதியில் நாயகி காட்டும் குறும்புகளை ரசிக்கலாம். பாடல்கள் சொல்லும்படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் அதிக சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்.
மொத்தத்தில் காதலின் உயர்வையும், அதற்கு துணை நிற்கும் வலிமையான நட்பின் தூய்மையையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். நிச்சயம் இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நாடோடிகளுக்கு விகடன் நிச்சயம் 50 ற்கும் அதிகம் மார்க்குகள் வழங்கலாம் என எதிர்பார்க்கிறேன் :)
---------------------------------------
ஸ்ருதி ஹாசன்
சத்தமே இல்லாமல் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் luck என்ற ஹிந்திப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது பாலிவுட்டில் அவருக்கு அறிமுக படமாக இருக்கும். அடுத்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகலாம் என தெரிகிறது.
---------------------------------------
ஷரப்போவா
டென்னிஸ் உலகத் தரவரிசையில் சில ஆண்டுகள் முன் முதலிடம் பெற்றிருந்த ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவாவிற்கு இது போதாத காலம் போலும். காயத்திலிருந்து விடுபட தான் பெற்ற பத்து மாத சிகிச்சைக்குப் பின்னர் ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன் என ஆடிய இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
சரியான ஓய்வு இல்லாமையும், தகுந்த பயிற்சி ஆட்டங்கள் இல்லாமையுமே அவரது தோல்விகளுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதே கருத்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் அதன் தலைவரான தோனிக்கும் மிகப் பொருந்தும். சரியான ஓய்வு இன்மையும், தகுந்த பயிற்சி ஆட்டங்கள் இல்லாமையுமே இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணம் என கருதுகிறேன்.
6 comments:
நல்லா இருந்தது காக்டெயில் பதிவு, சசிகுமார் நடிகராகவும் வெற்றி பெற்றுவிட்டாரா!!
<<>>
தோனியையும், இந்திய அணியைப் பற்றியும் நாம் எதுவும் சொல்ல போறதில்லைங்க, நேத்திதான் ஒரு பதிவு போட்டேன், போட்ட 3 மணி நேரத்தில் நெத்தியடியா பதில் கொடுத்துட்டாங்க் :-))
வாங்க நண்பரே கார்த்தி ... வருகைக்கு நன்றி. உங்கள் பதிவை விரைவில் பார்க்கிறேன்.
:)
நல்லா எழுதியிருக்கீங்க.
சமுத்திரகன்னியின் முதல் 2 படங்களும் என்ன????
1. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் 'உன்னைச் சரணடைந்தேன்.
2.விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு.
விகடன் 43 மதிப்பெண்கள் அளித்திருப்பது சற்று ஏமாற்றம் தான் :(
Post a Comment