July 04, 2009

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

பாண்டியில் கேள்விப்பட்ட உண்மை சம்பவத்தை மனதில் கொண்டு புனையப்பட்ட சிறுகதை.

-------------------------

எம்மா கலைவாணி... அந்த களவாணிப் பய மகேஷ், வெள்ள வேட்டியும் சட்டையும் இஸ்திரி போட்டு கொண்டாந்து குடுத்தானா இல்லையா? நானும் ரெண்டு நாளா தெருமுனைக்கு போகும் போதும் வரும் போதும் அவன் கிட்ட சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன்.

ஏன் இப்பிடி அவசரப்படுறேள்? அவன் சொன்ன நேரத்துக்கு கொண்டு வந்து குடுத்துட்டுப் போறான். அதுக்கில்லடி, இன்னைக்கு இலக்கிய விழாவில எனக்கு பாராட்டு விழா வைக்கிறா இல்லையா அதுக்குத் தான் இந்த ஏற்பாடு எல்லாம்.

இதோ வந்திட்டானே மகேஷ்... இப்பிடிக் குடுப்பா என்று துவைத்துத் தேய்த்த துணிமணிகளை வாங்கிக் கொண்டார் தமிழ் புலமை பெற்று புகழும் ஈட்டிய அய்யா கதிரவனின் மனைவி கலைவாணி, என்னப்பா மொத்தம் எவ்வளவாச்சு? என்றார் கதிரவன். தனது கை இன்னும் கட்டியிருக்க வாய் கட்டினை மட்டும் அவிழ்த்து...பதினாறு ரூபாய்ங்க என்றான் மகேஷ்.

இந்தாப்பா என்று இருபது ரூபாய் தாளை நீட்டினார் கதிரவன்.சட்டைப் பையினுள் சில்லறைகளைத் துழாவிக் கொண்டிருந்த மகேஷிடம், வேண்டாமப்பா மீதி... நீயே வச்சுக்க என்றார்; இன்னைக்கு இவரோட தமிழ் புலமையைப் பாராட்டி விழா வைக்கிறாங்களாம் அதனால தான் இதெல்லாம் என்று சிரித்த கதிரவனின் மனைவி அலக்குவதற்காக மேலும் சில துணிமணிகளை மகேஷிடம் நீட்டினார்.

சட்டையை மாட்டிக் கொண்டே...பின்ன இல்லையாக்கும், தமிழுக்காக நான் என்ன என்ன செய்திருக்கேன் தெரியுமாடி உனக்கு, எத்தனை புத்தகம் எழுதியிருப்பேன் எத்தனை புத்தகங்கள மொழி பெயர்த்திருக்கேன். அதுக்குத் தான் இந்த பட்டம், பாராட்டு, புகழ் எல்லாம் என்ற கதிரவன்... என்னடி பக்கத்து வீட்டில அதிகாலைல இருந்தே என்னமோ சத்தம் வந்திட்டிருக்கே! நீ என்னன்னு போய் பாத்தியா? என கூறிக் கொண்டே பக்கத்து வீட்டை நெருங்கினார்.

பக்கத்து வீட்டுக்காரர், தான் கீழே வாடகைக்கு குடி அமர்த்திய குடும்பத்துடன் வீட்டை காலி பண்ணச் சொல்லி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். என்னப்பா பிரச்சினை என்ற கதிரவனிடம்... அய்யா நீங்களே கேளுங்க இந்த கொடுமய. "தமிழ்" ஆளுங்க தான்னு நம்பி வீட்ட வாடகைக்கு விட்டேன். இப்ப தான் தெரியுது இவங்க 'சிலோன்' தமிழுன்னு. இவங்கள இங்க குடி வச்சா இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஆபத்து தான்யா எனக்கு என்றார் ஒரே மூச்சில்.

சற்றே யோசித்த கதிரவன்... ஆமா ஆமா... நீங்க சொல்றது தான் சரி, இலங்கைத் தமிழன்னாலே பிரச்சினை தான். தமிழ், தமிழன்னு பாத்தா நம்ம பொழப்பு என்னாகிறது எனக் கூறிவிட்டு தமிழ் அரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார் தமிழுக்கும், தமிழருக்கும் அவர் செய்த சாதனைக்கான விருதை வாங்குவதற்காக!

2 comments:

செம்மலர் செல்வன் said...

தல, யாரையோ தாக்குற மாதிரி இருக்கே!!! எழுத்து நடை நன்றாக உள்ளது

கிறிச்சான் said...

பாண்டி தமிழ் 'ல கலக்கி இருக்கீங்க!

யாருக்கு இந்த உள்குத்து??

மானங்கெட்ட மொத்த தமிழனுக்கும் தானே?

Post a Comment

Related Posts with Thumbnails