July 05, 2009

ஞாபகங்கள்-விமர்சனம்


'உங்கள் திரையரங்குகளை தாஜ்மஹால் ஆக்க வருகிறது' என்ற விளம்பரத்தை கவனித்து நல்ல திரைக்கதையோடு கூடிய சினிமா பார்க்கலாம் என அதிகம் எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கவிஞர்.பா.விஜயின் நண்பருடைய உண்மையான காதல் கதையைக் கொண்டு தீட்டப்பட்டது தான் திரைப்படம் என ஆரம்பித்திலேயே சொல்லி விடுகிறார்கள்.

லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் என இவர்கள் காதலை மட்டும் தான் திரைப்படமாக எடுக்க முடியுமா? நமக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் போன்றோர் நடுவில் இருக்கும் காதலையும் திரைப்படமாக ஏன் எடுக்கக்கூடாது என கேள்வியையும் எழுப்புக்கிறார் கவிஞர்.

கவிஞருக்கு "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்காக தேசிய விருது கிடைத்ததை பலர் மறந்து இருக்கக் கூடும் என நினைத்து விருது பெறும் நிகழ்வையே ஆரம்ப காட்சியாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பம் தான் தொய்வாக இருக்கிறது என்றால் அடுத்த இருபது நிமிடங்களுக்குள்ளாக இரு பாடல்களை ஓடவிட்டு நம்மை தியேட்டரை விட்டே ஓட வைக்கிறார்கள். திரும்பிச் சென்று விடலாமா என கூட யோசித்தேன்.749 இருக்கைகள் கொண்ட அந்த திரையரங்கில் இருந்தவர்கள் 18 பேர் மட்டுமே.

கதிரவன் என்ற இளம் கவிஞருக்கு வட இந்திய பெண் ஒருவருடன் ஏற்படும் காதலை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். குடும்பப் பிரச்சினை காரணமாக கதாநாயகி வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீ பெரிய கவிஞனாக வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து விட்டு காதலிடமிருந்தும், காதலனிடமிருந்தும் விடைபெறுகிறார் கதாநாயகி.அதன் பின்னர் கதாநாயகன் என்ன செய்கிறார் என்பது தான் கதை.

திருமணத்திற்கு முந்தைய இரவு கதாநாயகனின் வீட்டு முன் வந்து நின்று கொண்டு உனக்கு தருவதற்கு ஒன்றுமில்லை... 'என்னையே எடுத்துக்கோ' என கதாநாயகி வசனம் பேசுவது சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தெரிகிறது.

திருமணத்திற்கு பின்னர் வட இந்தியாவில் கதாநாயகியின் வீட்டில் அமைக்கப்படும் காட்சிகள் அனைத்தும் அப்படியே RainCoat என்ற ஹிந்தித் திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது. RainCoat ல் ஐஸ்வர்யா ராயும், அஜய் தேவ்கனும் அற்புதமாக நடித்திருப்பார்கள். (DVD கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்) 90 நிமிடத்திற்கும் மேலாக RainCoat திரைப்படத்தின் பாதிப்பு தெரிகிறது. இயக்குனர் ஜீவன் Raincoat திரைப்படத்தின் பாதிப்பினால் காட்சிகளை அமைத்தாரா அல்லது இயல்பாகவே காட்சிகள் அப்படி அமைந்து விட்டதா என தெரியவில்லை.

இடைவேளைக்கு சற்று முன்னர் காதலியின் கணவர் உயிருடன் இல்லை என்பதை அவரது புகைப்படத்தின் மேல் போடப்பட்டிருக்கும் மாலையின் மூலம் கண்டு அதிர்ச்சியடைய வேண்டிய கவிஞரின் முகத்தில் அதிர்ச்சிக்குள்ளான முகபாவங்களே இல்லை.காதை கிழிக்கும் இசை மட்டுமே கவிஞர் அதிர்ச்சியிலிருப்பதாக நமக்கு உணர்த்துகிறது. பெரும்பாலான இடங்களில் கவிஞருக்கு நடிப்பே வரவில்லை. ஏதோ வசனம் பேச வேண்டுமே என்ற கடமைக்காக பேசியதாகவே தெரிகிறது.

கதாநாயகியின் நடிப்பு சில இடங்களில் குறிப்பாக வட இந்தியாவில் வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளில் சொல்லும்படியாக உள்ளது.

ஆரம்ப காட்சிகளிலும், கதாநாயகியை காட்டும் காட்சிகளிலும் கவிஞர் வசனம் பேசாமலேயே அவரது மனது கவிதை பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படு போர். 'ஞாபகங்கள்' என்பதற்கு பதிலாக கவிதைகள் என்று பெயர் வைத்திருக்கலாமோ?

காதலியின் வீட்டில் கவிஞரும், காதலியும் இருட்டில் இருப்பதாகத் தான் பேசிக் கொள்கிறார்கள்... ஆனால் ஒளிப்பதிவில் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை; வெட்ட வெளிச்சத்தில் இருந்து உரையாடுவதாகவே படுகிறது. அதனிடையில் இருட்டாக இருக்கிறது என்று மெழுகுவர்த்தியையும் பற்ற வைக்கிறார்கள்... படத்தொகுப்பின் போதுமா கவனிக்கவில்லை!

அடிக்கடி aquafina தண்ணீரை கவிஞர் அருந்துவது ஏனோ? சென்னையில் அமைக்கப்பட்ட காட்சிகளில் தான் அப்படி என்றால் வட இந்தியாவில் ஓட்டல் அறையிலும், கதாநாயகியின் வீட்டிலும் அதே aquafina தண்ணீரைத் தான் அருந்துகிறார் கவிஞர். விளம்பரம் செய்யவோ!

SP.B ன் குரலில் 'ஞாபகம் இல்லையோ' பாடல் மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. மொத்தத்தில் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு தோன்றவில்லை.திரையரங்குகளை தாஜ்மஹால் ஆக்க முயற்சித்ததற்கு பதில் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சி வழி ஒவ்வொரு வீட்டினையும் தாஜ்மஹால் ஆக்க கவிஞர் முயற்சித்திருக்கலாம். தொலைக்காட்சி தொடராக வெற்றியும் பெற்றிருக்கும்.

--------------------

youtube தளத்தில் தேடிய போது கிடைத்த Raincoat திரைப்படத்தின் ஒரு காட்சியை இங்கே இணைத்துள்ளேன். மேலும் சில காட்சிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



3 comments:

selventhiran said...

வித்தகக் கவிஞர் விளையாடிட்டார் போலருக்கு...

ஆர்வா said...

இந்த மொக்கைப் படத்தை எப்படி சார் பார்த்தீங்க?

எட்வின் said...

என்ன தான் சொல்ல வராங்கன்னு தெரிஞ்சிட்டு போவோமே தான் சார் பாத்தேன். என்னன்னு சொல்ல அந்த கொடுமைய. 749 இருக்கை உள்ள நெல்லையில் உள்ள அந்த திரையரங்கில் 18 பேர் மட்டுமே இருந்தோம்னா பாத்துகோங்க .

Post a Comment

Related Posts with Thumbnails