September 16, 2009

கிரிக்கெட்வாதிகள் ஆகும் அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்களோ இல்லையோ ஆனால் அரசியல் அல்லாத பணிகளில் சற்று அதிகமாகவே ஈடுபாடு காண்பிக்கின்றனர். அதற்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல. இன்று மற்றுமொரு அரசியல்வாதி, கிரிக்கெட் சங்கத் தலைவராகியிருக்கிறார்.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அம்மாநில முதல்வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான நரேந்திர மோடி இன்று தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னர், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவராக பாரதீய ஜனதாவின் மற்றுமொரு மூத்த தலைவர் அருண் ஜெட்லி அவர்களும், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் அவர்களும் இருந்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பல உயர் பதவிகளில் இருக்கும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், அரசியலுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத!? கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் எத்தகைய ஈடுபாட்டுடன் தங்கள் பங்களிப்பை அளிக்கக் கூடும் என்பது புரியவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழுவிற்கு இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளின் மூலம் எந்த இடையூறும் இல்லை என்றும் குறிப்பிட்ட வீரரைத் தான் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதில்லை என்றும் கூறப்பட்டாலும், வீரர்கள் தேர்வில் மறைமுகமாக அவர்கள் பங்கு கடந்த காலங்களில் இருந்ததாகவே படுகிறது.

ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதவரை இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், கிரிக்கெட்டில் மட்டுமல்லாது வேறு துறைகளிலும் பல பதவிகளைப் பெறுவது தவிர்க்க முடியாததே.

அரசியல்வாதிகளால் கிரிக்கெட்டிற்கு லாபமோ இல்லையோ கிரிக்கெட்டினால் அரசியல்வாதிகள் லாபமே.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails