February 07, 2010

விரோதங்களை விரட்டும் இந்திய-பாக் இணை

பாகிஸ்தான் சென்று ஆட இந்தியருக்கும்,இந்தியா வந்து ஆட பாகிஸ்தானியருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் ஒருபுறம்.ஐ.பி.எல் ல் பாகிஸ்தானியரை ஏற்க மறுக்கும் அணிகளின் பெரும்தலைகள் மறுபுறம்.

இவை போதாதென்று பாக் மற்றும் ஆஸி கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு மும்பை சேனாவினரின் பயமுறுத்தல் என விளையாட்டிற்கு வினைகள் பலபுறமிருந்து சீறிப்பாய்கின்றன.

இவற்றிற்கு மத்தியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும் பாகிஸ்தானின் குரேஷியிம் இன்று தென்னாப்பிரிக்காவில் சர்வதேச ஏ.டி.பி டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் 2007முதல் இணைந்து ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் இரு முறை சர்வதேச இறுதிப்போட்டிகளில் ஆடியிருந்தாலும் இதுதான் இவர்களுக்கு முதல் வெற்றி.

நட்பினை முன்னிறுத்தி விளையாட்டுகள் நடந்த காலங்கள் மாறி இன்று நட்பினை பின்னுக்குத் தள்ளி வெற்றியை மட்டுமே வெறியாகக் கொண்டு விளையாட்டுகளை அணுகுகிறார்கள் விளையாடுபவர்கள்.

நட்பிற்கு இலக்கணமான ஒலிம்பிக் போட்டிகளில் கூட வெற்றியடைய தங்கள் வீரத்தைக் காட்டாமல் வெறி பிடித்தவர்களாய் போதை மருந்துகள் உபயோகிப்பது சகஜமாகியிருக்கிறது இன்று.

சமீபத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர் அஃப்ரிடி அவசியமின்றி பந்தைக் கடித்து அவமானத்தைத் தேடிக் கொண்டார்.

விளையாட்டிற்கு வேட்டு வைக்கும் விரோதங்கள் இன்று பெருகி வருவதும் விளையாட்டினை விளையாட்டாக எடுக்காமல் வினையாக பாவிப்பதும் நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல.

இந்தியன்-பாகிஸ்தானியன் என்ற வேறுபாடோ,பாகுபாடோ நோக்காமல் தொடர்ந்து இணைந்து ஆடி வரும் போபண்ணாவிற்கும் குரேஷிக்கும் பாராட்டுக்கள்.

சேனாவினரிடமிருந்து இன்னமும் இதற்கு பதில் ஒன்றுமில்லை !!!

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சேனாவினரிடமிருந்து இன்னமும் இதற்கு பதில் ஒன்றுமில்லை !!!//

இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா தல,,,

அந்த அளவு உலக நடப்புக்கள் அவர்களைச் சென்றடையுமா?

எட்வின் said...

ஏன் பாஸு, ஆஸ்திரேலியால நம்மாளுங்கள அடிக்கிறத எல்லாம் புட்டு புட்டு வைக்கிறவங்களுக்கு இது தெரியாம இருக்குமா என்ன?

Post a Comment

Related Posts with Thumbnails