"நான் நானாக இல்லாததால் நேசிக்கப்படுவதை விட நான் நானாக இருப்பதால் வெறுக்கப்படுவதை விரும்புவேன்"
நண்பர் ஒருவரின் முகநூலின் (Facebook) பக்கத்தில் தற்செயலாக வாசிக்க நேரிட்ட ஆங்கில வாசகத்தின் (என்னாலான) தமிழாக்கம் இது.
இந்த வாசகமும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "உலகம் ஒரு நாடக மேடை" என்ற வாசகமும் ஏறக்குறைய ஒன்றி போகக்கூடியவை .
இன்றைக்கு அநேகமாக அனைவரும் ஏதோ ஒரு முகக்கவசத்தை அணிந்தவர்களாகவே சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையிடம் ஒவ்வொரு விதமாக பேசிப் பழக வேண்டிய கட்டாயத்தில் பலர்.
ஒருவரிடம் பரிமாறும் கருத்துக்களை அதே செறிவுடன் அதே உள்ளடக்கத்துடன் மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.
இன்னும் சிலர் உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; மாறாக அதே விஷயத்தைத் திரித்து சற்றே பொய்யாகக் கூறும் பட்சத்தில் ஏற்றுக்கொள்கின்ற வாடிக்கையும் உண்டு.
வழக்கமாக நட்பு பாராட்டும் பலரிடம் (ஏன் குடும்பத்தினருடன் கூட) சற்றே அவர்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தோ அல்லது எதிராகவோ பேசினால் கூட கோபித்துக் கொள்ளுதலும் இன்று சகஜமே.
அவர்கள் என்ன சொன்னாலும் ஆமாம் ஆமாம் என நாம் ஜால்ரா அடித்தால் பிரியப்படுவார்கள்.இல்லையென்றால் முகத்தை திருப்பிக்கொண்டு போவதும் தொடரத்தான் செய்கிறது.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒருவரின் நன்மைக்கென்று அவரது கருத்திலிருந்து நாம் மாறுபட்டாலும் அது நிமித்தம் நம் மீது கோபம் கொள்கின்ற ஜென்மங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எவர் எப்படி இருந்தாலும் எது எப்படி ஆனாலும்... உண்மையாகவும், நியாயத்தின் பக்கமும் இருப்பதே எப்போதும் அழகு. இருக்கும் விதமாகவே இருப்போம்; மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நடிக்க தேவையில்லை. அதைத் தான் இந்த ஆங்கில வாக்கியம் அருமையாக சொல்கிறது. "I would rather be HATED for who I am than LOVED for who I am not"
1 comment:
"I would rather be HATED for who I am than LOVED for who I am not"///////////// superb.
Post a Comment