வீட்டிற்கு வீடு வாசல்படி என்பதன் படி இன்று பிரச்சினை என்பது அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது. பிரச்சினை இல்லாத மனிதர்களை பற்றி எவரும் கேள்விப்பட்டதாக இருக்கமுடியாது. எனினும் தனிமனிதர் ஒருவரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் அவரே தான் என்பது மறுக்க முடியாத உண்மை.அதனால் அன்றே கணியன் பூங்குன்றனார் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'என்று கூறிச் சென்றிருக்கிறார்.
அப்படியென்றால் பிரச்சினைகள் அனைத்திற்கும் நாம் மட்டும் தான் காரணமா? பிறரால் நமக்கு பிரச்சினைகள் ஏற்படுவதில்லையா என கேள்விகளும் எழாமல் இல்லை? ஒரு விஷயத்தை பிரச்சினையாக பார்க்கும் மனநிலையும் சகஜமாக பார்க்கும் மனநிலையும் அவரவரை சார்ந்தது என்ற உண்மையும் புலப்படுகிறது. இதனைப்பற்றி பதிவர் சேசுரா அவரது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பல பிரச்சினைகளுக்கு நமது நாவு காரணமாகி விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் விளையாட்டாக (சில நேரங்களில் வேண்டுமென்றே) ஏதாவது எவரிடம் சொல்லி வைக்க; அது தேவையற்ற விவாதத்திற்கும் விதண்டாவாதத்திற்கும் வழிவகை செய்து விடுகிறது. மற்றவரது கோபத்திற்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விடுவது தான் இன்னும் வேடிக்கை.
வேடிக்கையாக சொன்ன விஷயத்தை மற்றவர் மறந்து மன்னித்து விட்டால் சொல் அம்பு எய்தவருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும்; வேறொரு சந்தர்ப்பத்தில் முன்னர் எய்த சொல் அம்பின் தழும்புகளால் அந்த நிகழ்வை மீண்டும் எடுத்துச்சொல்லும் நிலைமை வரும் பட்சத்தில் எய்தவருக்கு அதனை விட பெரிய வலி ஏதும் இருக்காது. வள்ளுவன், "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என சொல்லிச் சென்றது இதனை மனதில் வைத்து தான் போலும்.
பிரச்சினைகளை ஒரு சுமையாக கருதாமல் மிக எளிதாக எதிர்கொண்டு சமாளித்து விடுகின்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் சகஜமே. அதற்கு நேர் எதிராக ஒன்றுமில்லாத விஷயத்தையும் பிரச்சினையாக பார்க்கிற ஆசாமிகளும் இருக்கிறார்கள்.
எது எப்படியாயினும் எவர் எப்படியாயினும் நம்மைத் தொடரும் தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் நாம் உதிர்க்கும் வார்த்தைகளும்; விஷயங்களை நாம் அணுகும் முறைகளும் தானே காரணமேயல்லாமல் வேறொருவரும், வேறெதுவும் இல்லை.
No comments:
Post a Comment