2010 ல் எதிர்பார்க்கும் பத்து விடயங்கள் என்ற தலையங்கத்தில் ஜனவரி ஆறாம் தியதி பதிவிட்டிருந்தேன்.அதனை திரும்பிப் பார்க்கும் ஒரு பதிவு இது, அனைவருக்கும் என் கனிவான ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்.
1. ரஹ்மான் - கிராமி விருது
2009 ற்கான கிராமி விருதிற்காக ரஹ்மான் இரு பிரிவுகளில் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்கான இசைக்காகவும், ஜெய்கோ பாடலுக்ககவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இரு பிரிவுகளிலும் அவருக்கு விருது கிடைத்தது. இவை போதாதென்று 2010 ல் நோபல் பரிசளிப்பு விழாவில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சி அரங்கேறியது, மீண்டும் 2010 ற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக (டேனி போயலின் 127 Hours திரைப்படத்திற்காக) பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார்.
2. உலகக்கோப்பை ஹாக்கி
டெல்லியில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி போட்டிகளில் வழக்கம் போலவே இந்திய அணியினர் சொதப்பினர். ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றனர், ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றது.
3. உலகக்கோப்பை கால்பந்து
முதன் முறையாக ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் Vuvuzela ன் இரைச்சல் சத்தத்தின் இடையிலும் சிறப்பாகவே நடந்து முடிந்தன. 2008 முதல் தோல்வியையே சந்திக்காத நெதர்லாந்தும், ஆடிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்த ஸ்பெயின் அணியும் இறுதிப் போட்டியில் ஆடியது எவரும் எதிர்பார்க்காதது. ஆக்டோபஸ் 'பால்' கணித்தபடியே ஸ்பெயின் வெற்றி பெற்றது. (மரித்தும் போனது ஆக்டோபஸ்)
4. இலங்கை ஜனாதிபதி தேர்தல்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த இலங்கை தேர்தல் மாற்றம் எதையும் தரவில்லை. முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் சிறைபிடிப்பைத் தவிர.
5. எந்திரன்
ரோபோட் - எந்திரன் எதிர்பார்த்ததற்கும் அதிகமான வசூலைக் கொட்டி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. 20 ரூபாய் டிக்கெட்டுகள் இருநூறு ரூபாய்க்கு விலை போனதென்றால் வசூலாகாமல் இருக்குமா என்ன?! இத்தனை வயதில் சூப்பர் ஸ்டாருக்கு உலக அழகியுடன் நடனம் தேவையா என்பது கேள்வி எழுப்பப்பட வேண்டிய ஒன்று.
இரண்டாவது பாதி காட்சிகள் சில கார்ட்டூனை நினைவுபடுத்தியது மறுக்கமுடியாத ஒன்று. உலகம் முழுவதையும் ஷங்கர் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பதற்காக பாராட்டப்பட வேண்டிய சினிமா. மறைந்த "சுஜாதா" அவர்களின் பங்களிப்பையும் மறந்து விடமுடியாது.
6. வேட்டைக்காரன் - விஜய்
மீண்டும் ஒரு மசாலா படத்தை அளித்த திருப்தி ‘சுறா’வினால் இளையதளபதிக்கு உண்டாயிருக்கக்கூடும். ஆனால் பணத்தை போட்ட தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இல்லை. ஆனால் இளையதளபதி ஒன்றோடு நிறுத்திக்கொண்டது ஏனோ?
7. இந்தியா - உலக அரங்கில்
உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் கொடிகட்டி பறந்ததைத்தவிர வேறு ஒன்றும் விஷேசமாக இந்தியா செய்ததாகத் தெரியவில்லை. ஐ.பி.எல், காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஸ்பெக்ட்ரம் என தொடரும் ஊழல்கள் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய செய்தன. G-20 மாநாடு உள்ளிட்ட பன்னாட்டு மாநாடுகளில் இந்தியாவின் பங்கு குறைவு தான்.
8. டைகர் உட்ஸ்
இருபது வார இடைவெளிக்கு பின்னர் ஏப்ரல் 2010 ல் மீண்டும் களத்தில் இறங்கிய கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் குறிப்பிடும்படியான வெற்றிகளை இதுவரை பெறவில்லை. உலகத்தில் மிக அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக ஜூலையில் அறிவிக்கப்பட்டாலும் கோல்பில் தனது முதலிடத்தை அக்டோபரில் இங்கிலாந்தின் Lee Westwood இடம் பறிகொடுத்தார்.
9. ஃபெடரர் Vs நடால்
ஃபெடரருக்கும் நடாலுக்கும் இடையே இதுவரை மொத்தமாக நடைபெற்றுள்ள 22 ஆட்டங்களில் நடால் 14-8 என முன்னிலை பெறுகிறார். காயங்கள் காரணமாக 2009 ன் இறுதி கட்டத்தில் தரவரிசையில் தனது முதலிடத்தை ஃபெடரரிடம் இழந்த நடால், ஜூன் 2010 ல் பெற்ற பிரெஞ்ச் ஓபன் வெற்றியுடன் மீண்டும் முதலிடம் பெற்றார். நடாலின் ஒன்பது வருட காத்திருப்பு இந்த வருடம் யு.எஸ் ஓபனில் நனவானது. முதன்முறையாக நடால் யு.எஸ்.ஓபன் சாம்பியன் ஆனார். முதன்முறையாக நடால் மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்றதும் இந்த வருடம் தான்.
10. இந்தியா - பிரிவினை
முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் குண்டு வெடிப்புகளும், மதக்கலவரங்களும் குறைந்திருந்தது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனாலும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண இன்னும் பல வருடங்கள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அனைவருக்கும் புதிய ஆங்கில வருடம் பொன்னானதாக அமைய வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் புதிய ஆங்கில வருடம் பொன்னானதாக அமைய வாழ்த்துக்கள்.
2 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புது வருட வாழ்த்துக்கள்!
Post a Comment