எங்கோ என்றோ படித்த ஒரு ஆங்கில வாசகம் தான் புத்தாண்டு பிறந்த இரு தினங்களாக மீண்டும் மீண்டும் எனது எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. "The WORST is yet to come" என்பது தான் அந்த வாசகம்.
புதிய வருடமானால் மட்டும் மனதின் ஆதங்கங்களும், மனிதனின் தேவைகளும், வித்தியாசப்பட்டு விடுமா என்ன? புது வருட கொண்டாட்டங்களில் பங்கு பெற்று விட்டால் அந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்குமென்பதோ இல்லை நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பிரார்த்தனை செய்தால் வருங்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்பது அர்த்தமாகி விடாது.
இரவு பகல் என்பது போன்றே இன்பம் துன்பம் என்பதும் மனித வாழ்க்கையின் இரு பக்கங்களாகவே கொள்ளலாம்.வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து காத்திருக்கத் தான் செய்கிறது. அது எந்த அளவிற்கு தீவிரமானது என்பதும் எவரும் அறியாதது.
நாளை என்ன நடக்கும் என எவராலும் முன்குறிக்க முடியாமல் இருக்கையில் கவலைப்படுவதால் எந்தவித நன்மையும் எவர்க்கும் ஏற்படப்போவதில்லை. அதையே தான் விவிலியமும் "கவலைப்படுவதினால் தனது சரீரத்தில் ஒரு முழத்தை யார் கூட்டுவான்" என்கிறது.
முடிந்த வரையில் உலகில் இருக்கின்ற காலம் மட்டும் சுற்றி இருப்பவர்களையும், நண்பர்களையும், குடும்பத்தினரையும் சந்தோஷமாக வைத்திருப்பதால் கிடைக்கின்ற நற்பெயர் மட்டுமே மனிதத்தை இன்னும் நாம் வாழ வைக்கும் மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
பிரச்சினை என்று வரும் போது என்ன பிரச்சினை என கவலை கொள்ளாமல் பிரச்சினைகளில் இருந்து வெளிவருகிற வழிமுறைகளை நோக்குவதோடு The Worst is yet to come என்ற மனப்பான்மையும் கொண்டிருப்போமானால் இந்த வருடம் மட்டுமல்ல எந்த வருடமும் சிறந்த வருடம் தான்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், பூங்கொத்தும், பிரார்த்தனைகளும்.
Photo Courtesy: http://vi.sualize.us/
1 comment:
அருமையான கருத்து.
Post a Comment