தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதே இந்தியாவின் உச்சக்கட்ட பரீட்சையாக இருக்கும் என உலகம் முழுவதும் கிரிக்கெட் ஊடகங்களும், விமர்சகர்களும் கிரிக்கெட் என்னும் பலூனை ஊதி பெரிதாக்கி விட்டிருக்கிறார்கள்.
கூட 'டென் கிரிக்கெட்' சானல் தெ.ஆ வீரர்களைக் கொண்டு தென்னாப்பிரிக்கா காத்திருக்கிறது என விளம்பரப் படத்தையும் எடுத்து ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராக இருக்கிறார்கள்.
இவற்றிற்கு எல்லாம் காரணம் இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றிகள் ஏதும் பெறாதது தான். கடைசியாக 2006-07 ல் சுற்றுப்பயணம் செய்திருந்த போது 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கோட்டை விட்டிருந்தது.
அந்த தொடரில் ஜோகனஸ்பெர்க்கில் பெற்ற வெற்றி மட்டுமே இந்தியா இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் பெற்றுள்ள ஒரே ஒரு வெற்றி.உலகின் முதல் தர அணியாக இருக்கும் இந்திய அணிக்கு நடைபெறவிருக்கும் மூன்று டெஸ்ட் ஆட்டங்களுமே சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பசும்புல் நிறைந்த தென்னாப்பிரிக்கா மைதானங்கள் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும். பவுன்சர்கள் என்றாலே பதுங்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக டெல்லி துவக்க ஆட்டக்காரர்களான சேவாக்கிற்கும், காம்பீருக்கும் ஆரம்ப சில ஓவர்கள் கடினமாகத் தானிருக்கும். ஆரம்ப இணை முதல் பத்து ஓவர்களைத் தாக்குப் பிடித்து நின்று விட்டால் பின்னர் வருகின்றவர்களுக்கு ஓரளவு சாதகமாகி விடும்.
டெஸ்ட் ஆட்டங்களில் 50 ற்கும் மேல் சராசரி வைத்திருக்கும் சச்சின்,திராவிட்,சேவாக்கின் சராசரி (தென்னாப்பிரிக்காவில்) முறையே 40, 34, 26 மட்டும் தான் என்கிறது cricinfo. லக்ஸ்மன் இதுவரை தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்ததில்லை.
ரைனாவிற்கும், காம்பீருக்கும் தென்னாப்பிரிக்காவில் இது தான் முதல் வாய்ப்பு. தோனி இது போன்ற மைதானங்களில் எந்த அளவிற்கு பிரகாசிப்பார் என சொல்ல முடியாது. அவரது cross bat shots அவருக்கு நிச்சயம் துணையளிக்காது.
பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சகீர் கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் இவர்களில் எவரேனும் ஆரம்பத்தில் விக்கெட் எடுக்க தவறும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு பின்னடைவு தான். இல்லையென்றால் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், ஓஜா இருவரையும் நம்ப வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே சகீர் காயமடைந்திருப்பதும் இந்தியாவிற்கு பின்னடைவே. மட்டை வீச்சில் வலுவாக இருக்கும் இந்தியா நிச்சயம் 7 மட்டைவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அந்த பட்சத்தில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் மறுக்கப்படும்.
தென்னாப்பிரிக்கா அவர்கள் மண்ணில் இறுதியாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக ஆடிய இரண்டு தொடர்களிலும் வெற்றி பெறாதது அவர்களுக்கு பின்னடைவு தான். எனினும் சொந்த மண்ணில் ஆடுவது அவர்களுக்கு கை கொடுக்கக் கூடும். அணித்தலைவர் ஸ்மித், ஆல்ரவுண்டர் காலிஸ், திராவிட்டைப் போன்றே மூன்றாவது களமிறங்கும் ஆம்லா, பவுச்சர் என தென்னாப்பிரிக்காவும் மட்டைவீச்சில் வலுவாக இருக்கிறது.
இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் பயிற்சாளராக இருப்பது ஒரு வரப்பிரசாதம். தென்னாப்பிரிக்கா மைதானங்களைக் குறித்து நன்கு அவர் அறிந்திருக்கக்கூடும் என்பதும், தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்களின் மனநிலையை அறிந்தவர் என்பதும் இந்தியாவிற்கு சாதகம்.
எப்படியானாலும் நாளை துவங்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடருக்கு இணையாக கவனிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
5 comments:
பொறுத்திருந்து பார்ப்போம் ...
நன்றாக அலசியுள்ளீர்கள்.
தென்னாபிரிக்கா முன்னர் போன்று கடினமான ஆடுகளங்களை இப்போது அமைப்பதில்லை, இருந்தாலும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தவிர வேறு எந்த நாடுகளும் கடந்த 15 ஆண்டுகளில் தென்னாபிரிக்காவில் தொடரை வென்றதாக ஞாபகமில்லை. இந்தியா தவிர வேறெந்த நாடும் ஒரு போட்டியில் கூட வென்றதாக நினைவில்லை (கிரிக்இன்போவை புரட்டவில்லை) இந்தியா வலுவாக இருந்தாலும் தென்னாபிரிக்காவில் தொடரை வெல்வது அவளவு சுலபமில்லை. ஆம்லா, கலிஸ்,வில்லியஸ்,ஸ்மித் நான்கு பெரும் சிறப்பான போமில் இருப்பது பச்சை ஆடுகளங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் முழு நேரமும் ஸ்ரைன்,மோர்க்கல் இருவரையும் சமாளிக்கவேண்டி இருப்பதுவும் இந்தியாவிற்கு சவால்.
டோனி cross bat என்றாலும் அவரது மூளையால் ஓட்டங்களை குவிப்பார், சென்ற தடவையும் ஓட்டங்களை குவித்ததாக ஞாபகம்.
எனது ஆதரவு தென்னாபிரிக்காவிற்க்குத்தான், இருந்தாலும் இந்தியா ஜெயிக்க வாழ்த்துக்கள்.
@ அரசன்
ம்ம்ம் நிச்சயமாக சரிசமமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்
@ எப்பூடி
நன்றிங்க,
நிச்சயமாக டேல் ஸ்டேன், மோர்க்கல் பந்து வீச்சு இந்தியர்களுக்கு சவால் தான்.
தோனி... பார்க்கலாம்.
தொடர் சமநிலையில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilthirati.corank.com/
Post a Comment