இன்றைய காலகட்டத்தில் பெற்றவர்களையும், உறவுகளையுமே நினைவில் வைக்க பெரும்பாலானவர்களுக்கு சிரமமாக இருக்கையில் நலம் விரும்பிகளையும், நன்மை செய்தவர்களையும் நினைவு கூறுவது பலருக்கு வேடிக்கையானது சிலருக்கு வீணானது.
ஏறுகிற வரைக்கும் தேவைப்படுகிற ஏணி ஏறிய பின் தேவையற்றதாக கருதப்படுவதைப் போன்றே உதவிகளைப் பெற்று முன்னேறிய பலர் இன்று அவர்களை ஏற்றி விட்டவர்களை மறந்து விடுவது சகஜமாகி வருகிறது. நன்றி மறவாமல் இருப்பவர்கள் வெகு சிலரே.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எவரேனும் உதவி செய்திருப்பர். பண வடிவிலோ, பொருள் வடிவிலோ, அறிவுரை வடிவிலோ, பகிர்ந்து கொள்ளுதல் மூலமாகவோ உதவிகளைப் பெற்றிருப்பர். உதவிகள் பெறாதவர்கள் உலகில் எவரேனும் இருக்கின்றனரா என ஒரு கேள்வி எழும் பட்சத்தில், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக வந்து சேரும்.
சிறுவயதில் பெற்றவர்கள் மூலமாக பெறும் உதவிகள் பிற்காலத்தில் உறவுகள் மூலமாகவும் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் மூலமாகவும் நாம் கிடைக்கப் பெறுகிறோம். இப்படியாக வாழ்வின் பல நிலைகளில் நாம் அடைந்த உதவிகளை எத்தகைய சூழ்நிலையிலும் நாம் மறவாதிருப்பதே மனிதத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை.
உதவிகள் செய்தவர்களுக்கு கைமாறாக உதவிகள் செய்ய இயலவில்லை என்றாலும் கூட அவர்கள் செய்த உதவியை மறந்து போகாமல் குறைந்தபட்சம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தால் அதுவே பெரிய விஷயம் தான். (உயிருக்கு உயிராக பழகிய ஒருவரிடம் அப்படி ஒருமுறை உதவி கேட்கப்போய் அசிங்கப்பட்டும் இருக்கிறேன். உதவி கேட்ட போது செய்கிறேன் என வாக்களித்தவர்கள் மீண்டும் தொலைபேசியில் அழைக்கையில் தொலபேசியை எடுக்கவில்லை. மிகவும் நொந்து போனேன். முடியாது என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தால் இந்த வேதனை இருந்திருக்க வாய்ப்பில்லை)
உதவிகள் செய்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு, நன்றி தெரிவிப்பதோடு அந்த உதவியை மறக்காமலிருப்பதும் தான். அடைந்த உதவியை மறந்துவிடுதல் போன்ற நன்றி கெட்டச் செயல் வேறு எதும் இருக்க முடியாது. அதனை வள்ளுவன் "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என வெகு அருமையாக இரண்டே வரிகளில் அழுத்தமாகச் சொல்லிச் சென்று விட்டார்.
நாம் உதவி செய்த ஒருவர் நம்மை நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கையில் எழுகின்ற உவகைக்கு அளவே இல்லை. அத்தகைய நன்றியை இந்த வருடம் நீங்கள் உதவி பெற்ற எவருடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்கள் உள்ளத்தை மகிழ்வித்த நல்ல எண்ணத்துடன் இந்த வருடத்தை தொடர்ந்து தொடருங்கள்.
5 comments:
ஏறுகிற வரைக்கும் தேவைப்படுகிற ஏணி ஏறிய பின் தேவையற்றதாக கருதப்படுவதைப் போன்றே உதவிகளைப் பெற்று முன்னேறிய பலர் இன்று அவர்களை ஏற்றி விட்டவர்களை மறந்து விடுவது சகஜமாகி வருகிறது.
..... Tell me about it!
இப்படி சிலர் கிட்ட பல்பு வாங்கி இருக்கேன்... Ouch!
என்னோட அனுபவம் அக்கா, அதத் தான் எழுதியிருக்கேன்.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.....
இந்த பதிவை வாசிக்க வேண்டியவங்க எல்லாம் வாசித்தால் நல்லா இருக்கும். :-)
Nice Advice!
நீங்க செஞ்ச எல்லா உதவிகளுக்கும் நன்றி தல..
Post a Comment