மீண்டும்! மீண்டும்!! மீண்டும்!!! எத்தனை முறை மீட்சியையும் மாட்சியையும் கண்டாலும் நிறைவடைவதில்லை மனித மனம்.
இன்றளவும் பெரும்பாலானோர் நிறைவற்றவர்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. சில ஆண்டுகள் முன்னிருந்த நிலைமையை சற்று திரும்பிப் பார்த்தால் இன்று, இந்த நொடி எவ்வளவோ வசதிகளைப் பெற்றிருக்கிறோம்; வளமை அடைந்திருக்கிறோம்... எனினும் மனதில் நிறைவில்லை நம்மில் பலருக்கு.
வருங்காலத்திற்காக நிகழ்காலத்து சந்தோஷங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம். முன்னொரு பதிவில் எழுதியிருந்த வண்ணம்...
"பணங்களை சம்பாதிக்கும் அவசரத்தில்
மனங்களை சம்பாதிக்க மறக்கிறோம்,
மறுக்கிறோம்" !!
நடந்து செல்பவருக்கு மிதிவண்டி வாங்க ஆசை, மிதிவண்டியில் செல்பவருக்கு இருசக்கர வாகனம் வாங்க ஆசை, இரு சக்கர வாகனத்தில் செல்பவருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்க ஆசை. இவ்விதமான ஆசைகள் நிறைவேறினாலும் பலரது மனங்களில் நிறைவில்லை.
ஆசைப்பட்டு வாங்கிய பின்னரும் வேறு நிறத்தில் வாங்கியிருக்கலாமோ; வேறு வடிவத்தில் வாங்கியிருக்கலாமோ என மனநிறைவடையா பல கேள்விகள்.
இதைத்தான் "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என அன்றே சொல்லிப் போனார்களோ என்னமோ!
பொருட்கள் மீதான மோகமும் ஈடுபாடும் தீர்ந்து போனால் கூட பரவாயில்லை. மனிதர்களிடம் குறிப்பாக நண்பர்களை; கட்டிய மனைவி, கணவன்மார்களையே மாற்ற நினைக்கும் மனித மனங்களை நினைத்தால் விசித்திரமாகத் தானிருக்கிறது.
என்றும் எதிலும் திருப்தியில்லாமல் இருப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் நிச்சயமாக நிம்மதி என்பது கேள்விக்குறி தான்.
குறைவிலும் நிறைவான மனம் கொள்வதும்; பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பதை வைத்து மனநிறைவடைவதும் தான் மகிழ்ச்சியான வாழ்வின் மந்திரம்.
"கனவு காணுங்கள்" என அப்துல் கலாம் கூறியது போன்ற கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை தான்; ஆனால் அந்த கனவுகள் நிஜங்களை தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதோடு நமது சக்திக்கும் / வருமானத்திற்கும் மிஞ்சிய கனவுகளாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வருகின்ற மானம் (வருமானம்) காற்றோடு போகின்ற மானமாகிப் போய் விடும்.
4 comments:
என்றும் எதிலும் திருப்தியில்லாமல் இருப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் நிச்சயமாக நிம்மதி என்பது கேள்விக்குறி தான்.
....well-said!
அருமையான பதிவு. ரசித்தேன்.
//"கனவு காணுங்கள்" என அப்துல் கலாம் கூறியது போன்ற கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை தான்; ஆனால் அந்த கனவுகள் நிஜங்களை தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.//
உண்மை உண்மை.
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்
//நடந்து செல்பவருக்கு மிதிவண்டி வாங்க ஆசை, மிதிவண்டியில் செல்பவருக்கு இருசக்கர வாகனம் வாங்க ஆசை, இரு சக்கர வாகனத்தில் செல்பவருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்க ஆசை//
நான்கு சக்கர வாகனம் வாங்கியவருக்கு நடை பயிற்சி செல்ல ஆசை.
//"கனவு காணுங்கள்" என அப்துல் கலாம் கூறியது போன்ற கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை தான்; ஆனால் அந்த கனவுகள் நிஜங்களை தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். //
:) ?
Post a Comment