எதற்கெல்லாம் கொண்டாட்டம் வைக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரையறையே இல்லை போலும். அன்னையர் தினம், தந்தையர் தினம் என எடுத்ததெற்கெல்லாம் கொண்டாடியவர்கள், அதையெல்லாம் தாண்டி தலையணை மோதல் தினம் என்று கிளம்பியிருக்கிறார்கள் இப்போது. 2008 முதல் கொண்டாடியும் வருகிறார்கள் அமெரிக்கர்கள். நாளை ஏப்ரல் 2 அன்று தலையணை மோதல் தினமாம்; உலகம் முழுவதும் இருந்து நூறுக்கும் மேற்பட்ட நகரங்கள் இதில் பங்கெடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் இதன் இணைய தளத்தில். ( http://www.pillowfightday.com/ )
அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இவைகளை விட்டால் வேறு வேலை இல்லை போலும். வேலன்டைன் தினம் @ காதலர் தினத்திற்கே எதிர்ப்பு கிளப்பி வரும் நம்ம ஊர்வாசிகள் தலையணை மோதல் தினத்திற்கு என்ன சொல்வார்கள் என்று கேட்கவே தேவையில்லை.
நகர வாழ்க்கையில் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கும் பொதுமக்களை வீதிக்கு வர வைத்து மக்களோடு மக்களாக பழக வைக்கவும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் தான் இந்த தலையணை மோதல் தினம் என்று கூறுகிறார்கள். அதற்கு Urban Playground Movement என பெயரும் வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் இன்றைய இளைய தலைமுறைகள் இவை போன்ற தினங்களில் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள். கடந்த மார்ச் 8 அன்று மகளிர் தினம் என்றார்கள். மேற்கத்தியர்கள் உருவாக்கிய இந்த மாதிரியான தினங்கள் வர்த்தகத்தை தான் வளர்க்கிறதே ஒழிய வேறு எதற்கும் உபயோகமாக இருப்பதாக படவில்லை. மகளிர் தினம் அனுசரித்தாலும் மறுபுறம் பெண்ணடிமை, ஆணாதிக்கம் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இந்தியாவும், தமிழகமும் இன்னும் மாற வேண்டும்!
ஏப்ரல் ஒன்றாகிய இன்று முட்டாள்கள் தினமாம்; இன்னும் என்னத்திற்கெல்லாம் தினங்கள் வரவிருக்கின்றனவோ? தலையணை மோதல் தினம் இந்தியாவில் வைத்தால் எப்படி இருக்கும் என யோசித்து பார்த்தேன், சிரிப்பு தான் வருகிறது.
எந்த எந்த நகரங்கள் தலையணை மோதல் தினத்தில் பங்கெடுக்கின்றன என்பதை http://www.pillowfightday.com/ தளத்தில் பார்க்கலாம், வேண்டுமானால் நீங்கள் உங்கள் நகரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment