December 15, 2012

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில்


மனித குலம் எத்தனையோ நாகரீகங்களைக் கடந்தும்; இத்தனை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்; இத்தனை இலட்சம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டும் - கடந்தும்; இத்தனை கோடி மாற்றங்களைக் கடந்து; இத்தனை மில்லியன் மரணங்களைக் கடந்தும் இன்னும் தனக்கென, தனக்குள்ளாக, தன் குடும்பத்திற்குள்ளாக, தன் மாவட்டத்திற்குள்ளாக, தன் மாநிலத்திற்குள்ளாக, தன் தேசத்திற்குள்ளாக ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து வருவது வியப்பிற்குரியது.

தன் அல்லது தனது என்ற எண்ணம் நம் அல்லது நமது என்ற அளவில் அதிகம் வளராதது வருத்தத்திற்குரியது.

ஒரு மனிதனின் அடிப்படை வேரான அவனது குடும்பத்திலிருந்து துவங்கலாம். குடும்பத்திற்குள் ஒருவர் உயர்ந்த கருத்தை அல்லது வழக்கத்திற்கு மாறான கருத்தை முன் வைத்து விட்டால் போதும்; அது எத்தனை நல்ல கருத்தாக இருந்தாலும்... உடனே அவன்/ள் என்ன சொல்வது... அதெல்லாம் சரி வராது என தட்டிக்கழிப்பது தான் நடந்தேறும்.

குடும்பத்திற்குள் இப்படியென்றால் குடும்பங்களுக்குள் வேற்றுமைகளுக்கு சொல்லவே வேண்டாம்... அந்த குடும்பம் என்ன சொல்வது; அவர்கள் அப்படி என்றால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமா; அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத்தான் வேண்டுமா என வீம்பு செய்வது கண்கூடு.

தனிமனித உறவுகளை எடுத்துக் கொண்டால்... அங்கேயும் இது தான். கருத்துக்களை செவிமடுக்கவும், அமர்ந்து பேசவும் எவர்க்கும் சமயமில்லை. மாறாக மனத்தாங்கல்கள் வரும் போது... ‘உன்னிடம் பணம் இருக்கிறது’ என்பதால் அல்லது “நான் அழகில்லை என்பதால் தானே” என்பதான வீண் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகிறது.

மாவட்டங்களைப் பார்க்கப் போனால்... அங்கும் இது தான். நீ பாண்டி நான் நாஞ்சில், நீ மேற்கு நான் கிழக்கு என பிரித்துப் பார்ப்பவர்கள் தான் அதிகம்.

மாநிலங்களுக்குள் நீ தமிழன் - நான் மலையாளி; நீ கன்னடன் - நான் தெலுங்கன்; நீ பிகாரி - நான் மராத்தி என்பதான வேற்றுமைகள் இன்னும் தொடர்வது  மிகுந்த வருத்தத்திற்குரியது. வேற்றுமைகள் - வைராக்கியத்தையும், வீம்பையும், அகங்காரத்தையும் அதற்குள்ளாக அடக்கி வைத்திருப்பது தான் அதன் கோர முகம்.

அதனால் தான் தமிழகத்திற்குள் முழுமையாக காலடி வைக்க காவிரியும், கிருஷ்ணாவும் இன்னும் காத்திருக்கின்றன; முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது; மகாராஷ்டிராவில் பீகார், ஒரிசாவைச் சார்ந்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகின்றனர்.

தேசங்கள் இவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி... இந்தியா என்ன சொல்வது என பாகிஸ்தானும்; அமெரிக்கா என்ன சொல்வது என ஈரானும்; இஸ்ரேல் என்ன சொல்வது என பாலஸ்தீனும்; ரஷ்யா என்ன சொல்வது என சீனாவும்  முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது தொடரும் வரை பிரச்சினைகளும் முடிவிற்கு வராது.

இவற்றிற்கு எல்லாம் சமய சாயம் பூசுவது இன்னும் வருத்தமளிக்கும் விஷயம். சாதி சமய வேற்றுமைகள் தான் பிற வேற்றுமைகள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இதை மறுப்பவர்கள் தான் அதிகம் என்பது விசித்திரமான உண்மை.

இத்தனை வேற்றுமைகளின் நடுவே தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உயிர்கள் எண்ணிக்கையிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உறவுகள் சொல்லிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உண்டாக்கிய விரிசல்கள் இன்னும் தொடர்கிறது...

எவ்வித சாதி, சமய, மொழி, தேசிய, கலாச்சார வேற்றுமைகள் இல்லாமால் மனிதனை  மனிதனாகப் பார்த்தலும்; சக மனிதனின், சக மாநிலத்தவனின், சக தேசத்தை சார்ந்தவனின் பிரச்சினைகளை நமது பிரச்சினையாக பார்த்தலும் தான் இத்தகைய வேற்றுமைகள் ஏற்படுத்திய விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails