என்ன கொடுமைடா இது! என்று சலித்துக்
கொள்ளும் அளவிற்கு இருக்கின்றது தமிழகத்தில் தற்போதைய நிலைமை. பத்திரிக்கையைத் திருப்பினால்
விபத்து, கொலை, கொள்ளை, மோசடி, வரதட்சணைக் கொடுமை, கடத்தல், கற்பழிப்பு என பட்டியலிடப்படும்
தனி மனித அல்லல்கள் ஒரு புறமென்றால், மறுபுறம், அந்த கட்சி சரியில்லை, இந்த கட்சி இவ்வளவு
கொள்ளை என பட்டியல் போடப்படும் அரசியல் கட்சிகளின் வெறித்தனங்கள் பக்கங்களை நிரப்புகின்றன.
தொலைக்காட்சியைத் திருப்பினால்
எந்நேரமும் எவரேனும் நாங்கள் இதைச் செய்வோம்! அதைச் செய்வோம்!! என கூவிக் கொண்டிருக்கின்றனர்.
போதா குறைக்கு அரசியல் நாகரீகமின்றி தனிமனிதத் தாக்குதல் பரவலாக அனைத்து கட்சியினராலும்
தொடுக்கப்படுகின்றது; அந்த அளவில் தான் ஒவ்வொரு கட்சியினரும் நடந்தும் கொள்கிறார்கள்.
நிதித்துறையில் இருந்து நீதித்துறை
வரை எங்கு செல்லினும் பாமரனுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கனியை
எட்டும் முயற்சியெடுக்கவே இங்கு பலருக்கு கணி காண்பிக்க வேண்டியிருக்கிறது.
சாதிய அடக்கு முறைகளும், மதச்சண்டைகளும்,
பெண்ணடிமைத்தனங்களும், கல்வி வியாபாரமாக்கப்படுதலும், விவசாயிகளின் அவலங்களும், தற்கொலைகளும்,
இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
பொதுவெளியில் மக்களின் செயல்பாடு
இன்னும் ஏமாற்றமளிப்பதாய் இருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து, முன் பதிவு மையங்கள்
வரை வரிசையில் நிற்க வேண்டும் என்ற சாதாரண மனநிலை கூட பெரும்பாலான மக்களிடம் இல்லை.
இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஏன் இத்தனை வேகமாக இயக்கப்படுகின்றன
என்பதன் விடை தெரியவில்லை. சக வாகன ஓட்டுனர்களை, பாதசாரிகளை இன்னும் சொல்லப் போனால்
போக்குவரத்து விதிமுறைகளைக் கூட பலரும் மதிப்பதில்லை.
மக்கள் மிக வேகமாக பயணிக்கின்றனர்,
ஒருவரை மற்றவர் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பரவலாக அனைவருக்கும் இருக்கிறது;
ஆனால் தானும் வாழ வேண்டும், கூடவே மற்றவரும் வாழ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
சக மனிதர்கள் இன்றி சுயமாக வாழ்ந்து விட முடியாது என்ற புரிதலும் இல்லை.
குப்பைகளைக் களைவதிலும், சுகாதாரமாய்
வாழ்வதிலும் பொது மனிதராய் நமக்கு இருக்கும் அக்கறை இன்னும் சராசரிக்குக் கீழே தான்.
பிரயாணங்களின் நடுவே, சன்னல்களின் வழியே வீசியெறியப்படும் காகித, பிளாஸ்டிக் குப்பைகளும்;
வயல்வெளிகளில் கொட்டப்படும் வேதிக் கழிவுகளும், மக்காத குப்பைகளுமே போதும் நம் அக்கறையைச்
சுட்டிக்காட்ட!!
பணம் செழுத்தவன் வரி ஏய்ப்பு
செய்து பகட்டாக வாழ்வதும், பணம் இல்லாதவன் கடனாலும், பசியினாலும் தொடர்ந்து மடிவதும்
ஒரே மண்ணில் தான் என்பது வேதனைக்குரிய விடயம்.
இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு
விடும் சங்கதி ‘டாஸ்மாக்’மதுபானக் கடைகள். கல்லூரி விழாக்களில் துவங்கி, திருவிழா,
திருமணவிழா, கட்சி விழாக்கள் வரை மதுபானமில்லாத விழாக்கள் இல்லையெனலாம். போதை ஏற்படுத்தும்
வில்லங்கங்களும், கைகலப்புகளும், விபத்துக்களும், குடும்பத் தகராறுகளும், வியாதிகளும்,
மரணங்களும் இன்னும் தொடர்வது தான் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை.
இத்தனைக் கொடுமைகளின் ஊடே நமது
ஊரில் வாழ்வதை ஒரு சாகசம் என்று கூட சொல்லலாம்!
மதுவிலக்கு, கல்விக்கடன்களில்
இருந்து விலக்கு, முதியோர் உதவித் திட்டம், விவசாயிகளின் நலன் காப்பு என கட்சிகள் அளித்திருக்கிற
வாக்குறுதிகள் தமிழகத்தை நேர்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், சில
நூறுகளுக்காக விலை போகிறவர்களும், இலவசங்களை எதிர்பார்ப்பவர்களும், அரசு நிதிகளை தம்
வசமாக்கும் அதிகார வர்க்கமும், லஞ்சம் பெறும் கயவர்களும், கல்விக் கொள்ளையர்களும் தமிழகத்தில்
தொடரும் வரை தமிழகத்தின் அல்லல்கள் தொடரவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
01/05/2016
நாகர்கோவில்.
நாகர்கோவில்.
No comments:
Post a Comment