இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் மீது எனக்கு இருந்த அதீத பற்று இன்று இல்லை என்பது தான் நிதர்சனம்.
அசாருதீன், அஜய் ஜடேஜா காலகட்டங்களில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் Match Fixing க்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்த ஈடுபாடு குறைந்து போனது. எனினும், கால்பந்து, டென்னிஸ் போன்று கிரிக்கெட்டையும் ஒரு விளையாட்டாக பின்தொடர்வது இன்றளவும் தொடர்கிறது.
அணித் தேர்வுகளில் நடக்கும் பாரபட்சமும், அதீத காவிச்சாய பூசலும், கிரிக்கெட் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் வாரியங்களின் பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருப்பதும் கிரிக்கெட் மீதான வெறுப்பை இன்னும் இறுகச் செய்கின்றன.
எனினும் அண்மையில் பார்த்த '1983' திரைப்படம், பால்ய காலத்து நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் விதம் அமைந்திருந்தது. அந்த உந்துதலில் தான் இதனைப் பதிவு செய்கிறேன்.
கடின உழைப்பும், தொடர் முயற்சிகளும், தன்னம்பிக்கையும் என்றேனும் வெற்றியை ஈட்டித்தரும் என்பது தான் 83 தரும் பாடம்.
அதைத்தான் கபில்தேவ் சாதித்துக் காட்டினார். அன்றைய நாட்களின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கு இந்தியத் தீவை அவர்கள் மண்ணிலேயே 1983 மார்ச் ல் வீழ்த்திய கபில்தேவ், தொடர்ந்து ஜூன் மாதத்தில் அவர்களுடன் ஆடிய மூன்று ஆட்டங்களில் (இறுதிப் போட்டி உட்பட) இரண்டில் வெற்றி பெற்று உலகக் கோப்பையையும் நமதாக்கினார்.
ஒருவேளை, இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின்னர். 'சஹிவால்' என தற்போது அறியப்படும் ' மோண்ட்கோமெரி ' மாவட்டத்தில் கபிலின் பெற்றோர் தொடர்ந்திருந்தால், கபிலின் சாதனைகள், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியின் பக்கங்களில் இன்று எழுதப்பட்டிருக்கக் கூடும்.
வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களை கடந்து வர நாம் எடுக்கும் பெருமுயற்சிகள் கண்டுகொள்ளப்படாமலும், பதிவு செய்யப்படாமலும் போவது தான் எக்காலத்தும் டிசைன் போல!!
அப்படியாகத் தான் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் சதமும், உலகச் சாதனையும், 17/5 என்கிற நிலைமையில் அணி இருந்த போது தனியொருவராக செய்த அதகளமுமான 175 ஓட்டங்கள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படவில்லை; வீடியோ பதிவும் செய்யப்படவில்லை. (அதற்குக் காரணமாக BBC ன் பணி நிறுத்தம் கூறப்பட்டாலும், இந்தியா பெரிதாக என்ன சாதித்து விடப் போகிறது என கருதிய BBC ன் மேட்டிமைத்தனம் தான் உண்மையாக இருக்க முடியும்)
1983, ஜூன் 18 அன்று சிம்பாப்வே அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில் அச்சாதனை நிகழாமல் இருந்திருந்தால், இந்தியா அரை இறுதிக்குக் கூட தகுதி பெற்றிருக்காது.
உயர்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்கிற கட்டுக்கதைகளை உடைத்தெறிந்த கபில்கள், தோனிகளின் சாதனைகள் காலத்துக்கும் பேசு பொருளாக வேண்டும்.
கபிலைக் குறித்து Cricinfo இப்படியாக பதிவு செய்கிறது //The inspirational captain of the World Cup-winning team, Kapil Dev, was neither college-educated nor Brahmin.//
//Post Independence International players emerged from Najafgarh, Rae Bareilly, Bharuch, Palarivattom, Aligarh, Jalandhar and Ranchi.//
1983 கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டு உலகிற்கும் புத்தொளி பாய்ச்சியது என்பது தான் வரலாற்று உண்மை.
No comments:
Post a Comment