வழக்கமாக காலையில் பயலுவள எழுப்ப கிறிஸ்தவ @ விவிலியம் சார்ந்த பாட்டுகள ஓட்டி விடுகது வழக்கம் . அப்படியான ஒரு காலைல ‘ என் தேவன் என் வெளிச்சம்’ பாடல்ல ஒரு வரி சட்டுன்னு கவனத்த ஈர்த்து, திரும்ப கேக்க சொல்லிச்சி… அந்த வரி இது தான்…
பிசாசு,
பாவம், உலகம்
இச் சத்துருக்களை
‘
அழிந்து போக மிதியும் ’
நீர் வாழ்க இயேசுவே!
விவரம் அறியா சிறுவயதில் இந்த பாடல ஆலயத்தில் பாடும் போதெல்லாம் இருக்கிற மொத்த எனர்ஜியயும் “ சத்துருக்களை அழிந்து போக மிதியும் ” ல இறக்கி வச்சிருக்கேன் :( ! (அக்காலத்து சத்துருக்கள் என்பவை என் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகள் தான்)
இது போன்ற மேலும் சில பாடல்கள்…
பெர்க்மன்ஸ் அவர்களின்
ஒன்று சேர்ந்து
நாம் துதிப்போம்
‘ சாத்தானை மிதிப்போம் ‘
‘ மருந்து கண்டேனே ‘ பாடலின்
இறுதி சரணத்தின் முதல் வரி
‘ பிசாசின் தலையை நசுக்கும் மருந்து! ‘
மிகப் பிரபலமான கிறிஸ்து பிறப்புப் பாடல் ‘ பாலன் ஜெனனமானார் ’ ன் இறுதி சரணத்தின் முதல் வரி
‘ இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின் சிரசு நசுங்கவே ‘
பட்டியல் இன்னும் நீளும்; அதோடு, பதிவும் நீண்டு சொல்ல வந்தது நீர்த்துப் போகும் என்பதால் இம்மட்டில் முடிக்கிறேன்
இதன் தொடர்ச்சி தான் ‘கிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாத’ பாடல். அதன் சரணத்தில் ‘கிறிஸ்தவன் பொறுமையானவன்’ என்கிற வரி வருகிறது; ஆனால் அதனை நிறுவுவதற்கு ‘கிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாத’ என துவங்குகிறார்கள்.
கிறிஸ்தவம் அன்பைப் போதிக்கின்ற; மன்னிப்பை முன்னிறுத்துகின்ற ஒரு மதம்/ அமைப்பு/ மார்க்கம் என ஒரு பக்கம் உரைத்து விட்டு மறுபக்கம் பிசாசு, சாத்தான், தொல்லை குடுக்கிறவன், நம்மள விரும்பாதவன், நமக்கு எதிரா பேசுறவன் எல்லாவனும் அழியணும் அப்படிங்கிற தொனில வெளிப்படையாவே அறைகூவல் விடுறதெல்லாம் ஒரு செயலா என்கிற கேள்வி ஒருபுறமிருந்தாலும், விவிலியத்தை புரிந்து கொண்டவர்கள் பெரிய ஏமாற்றம் அடைவது இல்லை.
ஏனெனில் விசுவாசத்துடன் கேட்டால் கிடைக்கும் என்பதோடு \ கடவுளுடைய நேரத்தில் அதுவும் அவர் மனசு வச்சா (சித்தம் இருந்தா) மட்டும் தான் கிடைக்கும் என்பதும் அறிந்தவர்கள் அவர்கள்.
ஆதாம் காலத்து
சாத்தானும், இரண்டாம் ஆதாம் (இயேசு) காலத்து
சாத்தானும் என்னவென்றால் பாம்பு தான் (ஆதி 3:15). அந்த
சாத்தானத்தான் நசுக்குவோம், மிதிப்போம்னு நெனச்சி பாட்டு
எழுதுவதாக இருந்தாலும், இன்றைய தேதியில் அது மிகை தான்.
இந்த தாக்கத்தில தான் நாமளும் பாடல் எழுதியிருக்கோமா அப்டின்னு ‘என் புகலிடம்’ பாடல்களை அவசர கதியில் எட்டிப்பார்த்தேன்! அப்படி எந்த வரிகளுமில்லை என உறுதிப்படுத்தின பின்னர் தான் சற்று தணிந்தேன். கூடவே, வெறுப்பு சூழ் இவ்வுலகு என்னில் பெரிதாக தாக்கத்த்தை ஏற்படுத்தவில்லை என்கிற மட்டில் சிறு நிம்மதி.
ஜெபம்/ விண்ணப்பங்களின் போது சிலர், ‘நினைக்கிற காரியம் நடந்தேற தடையா இருக்கிற சாத்தானின் செயல்கள் எல்லாத்தயும் தவிடு பொடியாக்கும் ஆண்டவரே’ அப்டிம்பாங்க.
குறிப்பிட்ட அந்த சாத்தான நான் இது வர பாத்ததில்ல. நமக்கு சாதகமில்லாத சூழ்நிலைகளும்; நம் விருப்பங்களுக்கு தடையா இருக்கிற; நமக்கு பிடிச்சத தராத எல்லோரையும், எல்லாவற்றையும் சாத்தான்களா உருவகப்படுத்திக்கிறோம் அவ்வளவு தான்!
அப்படியான சூழ்நிலைகளை/ அப்படியான மனிதர்களை திறந்த மனதோடு எதிர்கொள்வதோடு, ஏற்றுக்கொள்ளவும் பழகுதல் காலத்தின் தேவை; அவ்வாறாக சொற்களினால்/ அன்பினால் மாற்ற இயலாதவற்றை கடந்து வரவும் பக்குவப்பட வேண்டும்.
இல்லையென்றால் ‘ கிறிஸ்தவம் அன்பை போதிக்கிறது’ ‘ கிறிஸ்தவம் மன்னிப்பை முன்னிறுத்துகிறது ’ என்பதெல்லாம் வெறும் சொற்களோடு நின்று போகும்.
மாறாக, பாடல்கள் வழியே, சொற்கள் வழியே வன்மங்களை விதைத்தல் எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது.
No comments:
Post a Comment