ப்ரிம்யா கிராஸ்வின் அவர்கள் பேஸ்புக் வழியாகத் தான் பரிச்சயம். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியாது எனினும் அவரின் நண்பர்கள் பகிரும் அவரது பதிவுகளை வாசிக்கும் போதெல்லாம் அன்றாட நிகழ்வுகளை அவர் சொற்களில் விவரிக்கிற முறைமையை, சொல்லாடல்களை ரசித்திருக்கிறேன். பின்னர் அவரது பதிவுகளை பின் தொடரவும் செய்திருந்தேன். கடந்த விடுமுறையில் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் சென்றிருந்த போது எதேச்சையாக ‘தப்பரும்பு’ கண்ணில் படவும் வாங்கிக் கொண்டேன்.
தப்பரும்பு கவிதைத் தொகுப்பு - பிரிவாற்றாமையை, துயரை, தனிமையை சன்னமாக பேசுகிறது; சமயங்களில் உரக்கச் சொல்கிறது.
வெறும் புலம்பல்கள் அல்ல அவை; கவித்துவமான சொற்களின் வழியாக வாழ்வனுபவங்களை முன்வைக்கிற தன்முனைப்பு அவை. பிரிவாற்றமையோடு நின்று விடாமல் கூடவே பூக்குட்டியையும், அன்றாட வாழ்வியலையும் கவிதைகளாக்குகிறார்.
அதில் ஒன்று
பூக்குட்டியும் புடவைத் தலைப்பும்!
தாத்தா வெற்றிலை போட்டுக்கொள்வார்... ஆச்சிக்கு கால் நீட்டி அமர வேண்டும்... அப்பாவுக்குப் பல்குச்சி...
அக்காளுக்கு இளையராஜா…
அன்னையின் புடவைத் தலைப்பை
தேடி உண்ட வாய் துடைத்தால்தான்
சாப்பிட்டு முடித்ததாய்
அர்த்தம் கொள்கிறாள் பூக்குட்டி!
சமகாலத்தில் நேசமித்ரன், நர்சிம், வெய்யில் இவர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். எனினும் பெண் ஒருவரின் பார்வையில் வாழ்வனுபவங்கள் கவித்துவம் பெறுகிற போது வாழ்வின் இன்னொரு கோணம் நமக்கு புலப்படுகிறது.
உடன் பிறந்த சகோதரிகள் இல்லாத நிலையில், கலையில், எழுத்துகளில் பரிணமிக்கும் பெண்டிரை எனக்குப் பிடித்துப் போவதில் அதிகம் வியப்பில்லை.
ப்ரிம்யா அவர்கள் இதற்கும் ‘ எழுதும் பெண் ’ என கவிதை ஒன்றை வைத்திருக்கிறார். ‘ எழுதும் பெண்ணை விரும்பாதீர் ’ என முடிக்கிறார் அந்த கவிதையை 🤭
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M Phil) பட்டமும் பெற்ற ப்ரிம்யா அவர்கள் தமிழில் எழுதுகிறார் என்பது அழகிய முரண்!
ஒவ்வொரு கவிதைக்கும் தனி ஒரு பதிவே போடலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொன்றும் மனதிற்கு நெருக்கமானவை.
அவைகளில் இருள் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட…
நான் இருளைத்தான் இறுக்கமாய்ப் பற்றியுள்ளேன்.
அது என்னைக் கடைத்தேற்றும்!
இருளே
நட்சத்திரங்களைப் புலப்படுத்தும்!
என்கிற பகுதியும்
கோளாறு விழிகள் தலைப்பில் எழுதப்பட்ட…
கத்திரி வெயிலில்
தட்டோட்டில் விழுந்த
மழைத்துளி போல
அரை நொடியில் உன்னை
உறிஞ்சிக்கொள்ளும்
கோளாறு
விழிகளை என் செய்ய?
என்கிற பகுதியும் அட! என அதிகம் ரசிக்க வைத்தன.
கூடவே, நெல்லையின் தகிக்கும் வெயிலின் இடையில் அரிதாக விழும் சிறு தூறல்களை கண நேரத்தில் விழுங்கும் தட்டோடுகளைப் பார்த்து, தண்ணீரைத் தெளித்து விளையாடிய பொழுதுகள் நினைவிற்கு வந்தன.
சகா என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில்
தனிக்குவளை நீட்டும் மதியிழந்த ஊரில்
எனக்கென பெருமழை பெய்ததல்லவா உன் வானம்!
என நம் சமூகத்தின் அவலத்தையும் எழுதி கூடவே ‘மதியிழந்த’ என கொட்டும் வைக்கிறார் 🤭
தப்பரும்பு - தவற / தனித்து விடப்பட்ட அரும்பு அல்ல! அது மலர்ந்து கமழும் வாழ்வியல் அனுபவங்கள்🌹
அன்பும் மகிழ்ச்சியும் ப்ரிம்யா அவர்களே 🥰
புத்தகம் - தப்பரும்பு | எழுதியவர் - ப்ரிம்யா கிராஸ்வின் | பதிப்பகம் - வாசகசாலை | பக்கங்கள் - 122
No comments:
Post a Comment