கல்லறைகளுக்கு எப்போது சென்றாலும் அது தரும் அமைதி அலாதியானது.
மரங்களும், மலர்களும், பறவைகளின் ரீங்காரமும் மயான அமைதி என்கிற சொல்லுக்கு பொருத்தமான அமைதியும் இன்னும் சற்று நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என தூண்டுவதில் வியப்பில்லை.
அதிலும் நமக்கு பிரியமானவர்களது நினைவிடங்கள் இன்னும் பல நூறு நினைவுகளை மீள் பார்வைக்கு உள்ளாக்கி நமை இன்னும் ஆற்றுப்படுத்தும் என்பது அனுபவத்தால் நான் உணர்ந்த பேருண்மை.
அப்படியாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக களத்தில் நின்று போராடி பல ஆயிரம் பக்கங்களை பதிவு செய்து 1912 இல் காலமாகிய டிரமென்ஹீர் என்கிற James Henry Apperley Tremenheere (30 October 1853 – 28 October 1912) அவர்களது எழுத்துகள் அவரது கல்லறையை பார்க்கத் தூண்டியது.
Brookwood எனும் இடத்தில் அவரது கல்லறை இருக்கிறது என்பது இணையவெளித் தேடலிலும், கல்லறை நிர்வாகத்தினருடனான உரையாடலின் வழியேயும் புலப்பட்டாலும், பல நூறு கல்லறைகளுக்கு இடையே ஒரு நூற்றாண்டு முன்னர் எழுப்பப்பட்ட அவரது கல்லறையை அடையாளம் காண செலவிட்ட மூன்று மணி நேர தேடல்கள் வெற்றி பெறாத வகையில் புதர் மண்டியும் கல்லறைகளில் கல்வெட்டுகளின் எழுத்துகள் உருக்குலைந்தும் காணப்பட்டது சற்றே நெருடல்.
கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கிறவர்களால் கூட தற்போது அடையாளம் காண இயலவில்லை என்றாலும் வருங்காலங்களில் அடையாளம் காண வழிவகை செய்வார்கள் என்கிற உறுதியுடன் கல்லறைத் தோடடத்திலிருந்து விடை பெற்றேன்.
அங்கிருந்தவாறே தொரசாமி அம்பேத்கரிய நாவலின் திறனாய்வு கூட்டத்தில் பங்கு பெற்றதும் நெகிழ்வான நிகழ்வு.
கலெக்டர் / கிரிக்கெட்டர் / சமூக செயற்பாட்டாளர் / என்கிற பன்முகம் கொண்ட திரமென்ஹீர் அவர்களது பயணம் பூனா - Middlesex - Gloucestershire - செங்கல்பட்டு - நீலகிரி - Scotland - Surrey - Brookwood என்பதாக நிறைவுற்றாலும் காலங்கள் கடந்தும் பேசப்படுவார் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment