மழை-கிறுக்கல்கள்



கார் முகிலால்

நீல வான் மறைகையில்

எழும் கவலையினால்

விழும் வானின்

கண்ணீர் திவலையா-நீ















அடை மழை

மெதுவாய் துவங்கும்

உன் விசும்பல்களை

பீரிட செய்தவர்-யாரோ

வான்வெளியிலும் பாகுபாடோ
















வெண் முகிலாய் இருக்கையில்

கவலை கொள்ளா வானம்-நீ

கரிய நிறம் கொள்கையில்

வெறுத்து கீழே தள்ளுதல்

வர்ண பேதமோ


















எவருமில்லா தனிமையில்

என்னுடன் ஆடும்

என்னுயிர் தோழியா நீ













தோழி என்றதால்-நின்

அடை மழையால்

அடம் பிடித்து-என்

அலுவல்களை பாதிக்கிறாயோ




















சங்கீதச் சாரலில்

சங்கேதங்களால்-தன்

அகம் மகிழும்

சிறு குழந்தையை

சினம் கொண்டு அழைக்கும்

அன்னைக்கு தெரியுமா

சாரலின் சங்கேதங்கள்




















கருப்புக் குடை

காண்பித்தால்-நீ

மீண்டும் வரமாட்டாய்

என்பதாலா-இவள்

வர்ணக் குடை

விரிக்கிறாள்

-------

நவம்பர் மழையில்
குவைத் நகரத்தில்
முடங்கிய போது
கிறுக்கியவை


2012 ம் 200 ஆவது பதிவும்!

200 ஆவது பதிவு பேரழிவைக்குறித்து இருக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.... இருக்கட்டும் இருக்கட்டும்.

மாயன் நாட்காட்டி, 2012 ல் உலகம் அழிவு, நாசா விஞ்ஞானிகளின் மறுப்பு என பல வருடங்களாகவே புகைந்து வரும் உலகம் அழிவதைக் குறித்த குறிப்புகள் கொண்ட மாயன் கலாச்சாரத்தின் மையக்கருத்தை கொண்டு Independence Day(1996), The Day After Tomorrow(2004) போன்ற அழிவைக் குறித்த திரைப்படங்களால் மிரட்டிய இயக்குனர் ரோலண்ட் எம்மெரிக் 2012 என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.


Y2k விவாதங்கள் உட்பட இதற்கு முன்னரும் பலராலும் பலமுறை இன்ன நாளில் உலகம் அழியப்போகிறது என முன்குறிக்கப்பட்டாலும் எந்த கருத்துக்களும் மெய்யாகவில்லை.


2012 திரைப்படத்தில் சினிமாத்தனங்கள் இருந்தாலும்,தொழில்நுட்பத்தின் உதவியுடன் (Graphics) 2012 வருடத்தின் போது தொடர்ச்சியாக உலகம் முழுவதும் ஏற்பட போவதாக எடுக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை(சுனாமி), நிலநடுக்கங்கள், நோவாவின் பேழை போன்ற மிகப்பெரிய கப்பல்கள், எரிமலை சீற்றங்கள் என பிரம்மாண்டங்கள் வியக்கவைக்கின்றன.


திரைப்படத்தில் உலகின் ஒவ்வொரு பகுதிகளும் ஒன்று மாறி ஒன்று நிலைகுலையும் போது நமது ஈரக்குலையும் நடுங்கத்தான் செய்கிறது.


இத்தனை பிரம்மாண்டங்களைக் கொண்டுள்ள இத்திரைப்படத்திற்கான செலவு 1400 கோடியாம்!!!


இந்த பேரழிவிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் மிகப்பெரிய கப்பல்கள் வடிவமைக்கப்படுவதற்கு இந்தியர் ஒருவர் காரணமாவதாகவும், சீனாவில் அவை வைக்கப்பட்டிருப்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருப்பது வருங்காலத்தில்(இப்போ மட்டும் என்னவாம்!) மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை ஆசிய நாடுகள் தகர்க்கும் என்பதற்காக அமைக்கப்பட்டதா என தெரியவில்லை.


எதுவாக இருந்தாலும் இந்த திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காக ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படமே.


தற்போது '2012' திரைப்படத்தைக்குறித்து இணையத்தில் விவாதிக்கப்படாத நிமிடங்கள் இல்லை எனலாம்.


மாயன் நாட்காட்டியைக்குறித்தும் 2012 திரைப்படத்தைக் குறித்தும் விக்னேஷ்வரன் என்பவரால் இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் இடுகைகளை கீழே உள்ள சுட்டி யை சுட்டினால் படிக்கலாம்.


http://vaazkaipayanam.blogspot.com/2009/11/2012.html








மாலை நேரம் - பாடல் வரிகளுடன் காணொளியாய்

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மாலை நேரம்" பாடல் குறித்து இப்போது சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.இதமான காதல் பாடல்களை ரசிக்கும் அனைத்து தமிழ் ரசிகர்களையும்; இசைப்பிரியர்களையும் சில மாதங்களாகவே கட்டிப்போட்டிருக்கிறது என்பதற்கு அந்த பாடலைக்குறித்து இதுவரை எழுதப்பட்டிருக்கும் எண்ணற்ற வலைப்பதிவுகளே சாட்சி.

இந்த பாடல் குறித்து பதிவர் கார்க்கியின் பதிவு இங்கே

பாடல் வரிகளை புகழ்வதா இல்லை மெட்டைப் புகழ்வதா இல்லை பாடகியை புகழ்வதா என தெரியவில்லை.

அற்புதமாக கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அதே போன்று ஆன்ட்ரியாவின் குரலை எத்தனை பாராட்டினாலும் தகும். பாடல் வரிகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. பாடலாசிரியர் செல்வராகவன் பாடல் வரிகளுக்கு காதல் வர்ணம் தீட்டியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

பாடகி ஆன்ட்ரியா (ல,ள) (ன,ண) உச்சரிப்புகளில் கவனம் செலுத்தியிருந்தால் பாடல் இன்னும் சிறப்பைப் பெற்றிருக்கும்.

மாலை நேரம் பாடலை பாடல் வரிகளுடன் கீழே காணொளியாக கோர்த்திருக்கிறேன்...




Search and Download More Music Free


பிரிவினைகளுக்கு எதிராக குரல் கொடுத்த சச்சினும் ராகுலும்

இந்திய தேசத்தில் சாதியினாலும், மதத்தின் பெயராலும், மொழியினாலும், எல்லைகளினாலும் தொடர்ந்து இருந்து வரும் பிரிவினைகளுக்கும் அதனை ஊக்குவித்து வரும் பிரிவினை சக்திகளுக்கும் எப்போதுமே குறைவில்லை.


எனினும் முன்னிருந்ததை விட தற்போதைய கணினி யுகத்தில் பிரிவினைகள் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதில் இளைஞர்களின் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.


இது ஒருபுறமிருந்தாலும் சட்டக்கல்லூரி சம்பவம் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையும் மறந்து விட முடியாது.


தாங்கள் எந்த சாதி, மதத்தையும் சாராதவர்கள் எனவும் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்களில் சாதி,மதமற்றவர்கள் என்பதைக் குறிப்பிடவும் போராடி வருபவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.


இவற்றிற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்த சச்சின் மற்றும் ராகுல் காந்தியின் அறிக்கைகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.


நான் மகாராஷ்டிரத்தைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு பெருமையென்றாலும் முதலில் நான் ஒரு இந்தியன் என சச்சின் கடந்த வார பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.


அதே போன்று கடந்த மாதம் கேரளாவில் பேட்டி ஒன்றின் போது ராகுல் காந்தி... நான் ஒரு மனிதனின் வீட்டிற்கு தானே போகிறேனே அல்லாமல் ஒரு தலித்தின் வீட்டிற்கு அல்ல; பத்திரிக்கைகள் தான் இத்தகைய பாகுபாட்டைக் குறிப்பிட்டு எழுதி வருகின்றன என பத்திரிக்கைகளை சாடியிருந்தார்.

இவை சாதி, மத, இன பேதமற்ற இந்தியாவை காண ஆவலாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் மேலும் ஊக்கமளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் 'SALVATION ARMY'



ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பது அறிஞர் அண்ணாவின் வாக்கு .அதைப் போன்று SALVATION ARMY எனப்படும் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏழைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் 1865 ல் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் வில்லியம்பூத் மற்றும் கேதரின் பூத் என்னும் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ நிறுவனம் தான் இரட்சணிய சேனை என்றழைக்கப்படும் SALVATION ARMY.

இன்று 118 நாடுகளில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது Salvation Army. குறிப்பாக இயற்கை பேரழிவுகளிலும், பெரும் விபத்துகளிலும் தங்களது உதவிக்கரங்களை நீட்ட SA எப்போதுமே தவறியதில்லை.

2001 ல் அமெரிக்காவில், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் Red Cross க்கு இணையாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டதும் Salvation Army தான்.

2004 ல் இந்தியா உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) தாக்குதலுக்கு உள்ளான போதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது.



குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தியதோடு சாலையையும் சீரமைத்துக் கொடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. அந்த சாலைக்கு அரசாங்க அனுமதியுடன் வில்லியம் பூத் சாலை எனவும் பெயரிடப்பட்டது.

தமிழகத்திலும் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என பல பணிகளை மேற்கொண்டுவருகிறது. மருத்துவப்பணியில் சொல்லும்படியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தில் காதரீன் பூத் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலங்காலமாக சிறந்து விளங்கிவரும் உலகின் பத்து பிரபல அமைப்புகளை 2004 ல் Booz Allen Hamilton என்ற நிறுவனம் பட்டியலிட்டது. அதில் ஆக்ஸ்ஃபோர்டு,ஒலிம்பிக் விளையாட்டுகள், சோனி நிறுவனம்,ரோலிங் ஸ்டோன்ஸ் இவைகளின் வரிசையில் Salvation Army ம் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Salvation_army
http://www.salvationarmy.org/ihq/www_sa.nsf
http://www1.salvationarmy.org/ind

http://en.wikipedia.org/wiki/Catherine_Booth_Hospital

நன்றி
SA,
Gee Jo Sam,

CBH - Gershom



பிரிவினைகளைத் தூண்டும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவம் என்பது இன்றைய காலகட்டத்தில் அன்பை பறைசாற்றுகிறதோ இல்லையோ, வெறுப்பையும், பிரிவினைகளையும், விரோதங்களையும் வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

கிறிஸ்தவத்தை வியாபாரமாக்கியது தான் இந்த நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் செய்த அரும்பெரும் சாதனைகளில் முதலிடம் பிடிப்பது. பணக்கார பேய்களுக்கு ராஜபோக மரியாதை அளிக்கும் கிறிஸ்தவ சபைகள் ஏழை மக்களை ஏளனமாக பார்ப்பதும் உண்மையாகி வருகிறது.

இவைகள் போதாதென்று கல்வி நிறுவனங்களை நிறுவி காசு கறக்கும் மகான்களும் உண்டு; மட்டுமல்லாமல் அவர்களின் நிறுவனங்களில் பிற கிறிஸ்தவ பிரிவினரைச் சேர்த்துக் கொள்ளாமல் பாகுபாடு பார்ப்பதும் சகஜமாகி விட்டது.

இவை அனைத்திற்கும் அச்சாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பது கிறிஸ்தவத்திற்குள்ளேயே காணப்படும் எண்ணிக்கையற்ற பிரிவுகள் தான் என்பது கிறிஸ்தவர்கள் வெட்கப்படவும், வருத்தப்படவும் வேண்டிய விஷயம். சாதிப் பாகுபாடு, இன வெறியைப் போன்றே இதுவும் மகா கேவலமான செயலாகும்.

தற்செயலாக கிறிஸ்தவன் என சொல்லித் திரிகிற எவருடனாவது பேச்சு கொடுத்தால் நீங்கள் என்ன கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்வியோடு தான் ஆரம்பிப்பார்கள் ஆரம்ப அறிமுகத்திலேயே!

கிறிஸ்தவம், ஒரு கருத்தைத் தான் போதிக்கிறது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள், வகுப்புகள், பிரிவினைகள், பாகுபாடுகள் என்ற உண்மை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஒரு பிரிவைச் சார்ந்த ஆலயத்திற்கு போய்விட்டு வந்தால் மற்ற பிரிவை சார்ந்தவர்கள் முறைப்பதும் இவர்கள் ஆலயத்திற்கு போனால் அவர்கள் முறைப்பதும் இன்னும் நகைச்சுவையான செயல்.

கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே இத்தனை பிரிவினைகள் இருக்க இவர்கள் மற்றவர்களுக்கு நற்செய்தி சொல்வதனால் என்ன பயன்?

மனிதனை மனிதனாக பார்க்கும் மனிதாபிமானம் இல்லாதவரை, இது போன்ற பிரிவினைகள் இருக்கும் வரை மண்ணில் மனிதனுக்கும், மனித உணர்வுகளுக்கும் மரியாதை இல்லை.


நோயாளியின் மேலோகப் பயணத்தில் முடிந்த மன்மோகனின் பயணம்


நேற்று 03.11.2009 அன்று சண்டிகரில் உள்ள PGMIER (Postgraduate Institute of Medical Education & Research) மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சிங் சென்றிருக்கிறார்.

அவரின் வருகையால் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உயிரைப் பாதுகாக்க முடியாமல் செய்திருக்கிறது. கடுமையான பாதுகாப்பு காரணத்தால் சுமித் வர்மா என்ற சிறுநீரக நோயாளி தக்க நேரத்தில் சிகிச்சை பெறவியலாமல் காலமாகியிருக்கிறார். பாதுகாவலர்கள் அவரை இரண்டு மணி நேரம் மருத்துவமனைக்குள் நுழையவிடாமல் செய்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காலமான நோயாளியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இன்று பிரதமர் அறிக்கையும்; நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறாராம்.

வழக்கமாக அமைச்சர் பெரு(சிறு)மக்களோ! சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களோ வருகிறார்கள் என்றாலே போக்குவரத்தில் பல மாற்றங்களைச் செய்தும், சி(ப)ல சாலைகளை தற்காலிகமாக அடைத்தும் விடுவர். இவர்களுக்கே இத்தகைய ஏற்பாடென்றால் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பைக் குறித்து சொல்ல வேண்டியதில்லை.

நேற்று சண்டிகரில் நடந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது ஒருபுறமிருந்தாலும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகளும், பாதுகாப்பு வளையங்களும்; அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்ய மறுக்கப்படுவதும் வாடிக்கையாகி போய்விட்டதாகவே படுகிறது. அவை மீண்டும் பல கேள்விகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன.

இத்தனை கெடுபிடியான பாதுகாப்புகள் என்னத்திற்கு என்பது எவர்க்கும் இன்னும் புலப்பட்டதாகத் தெரியவில்லை. யாருக்கு பயப்படுகிறார்கள்? ஓட்டளித்த பொதுமக்களுக்கா? இல்லை எதிர்க்கட்சிகளின் சதிகளுக்கா? இல்லை தீவிரவாத தாக்குதலுக்கா?

அப்படியே தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து தான் இத்தகைய பாதுகாப்பு முறைகள் என்றால், தங்களது சொந்த உயிருக்கே உத்தரவாதம் அளிக்கவியலாத ஒரு தலைவர் எப்படி சாதாரண குடிமகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவியலும். இத்தகைய நிலைமைக்கு காரணமென்ன?

பயம் இல்லையென்றால் அதிகாரத்தை தவறான வழியில் உபயோகிக்கிறார்களா? பல நூறு வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால் தான் அவர்களுக்கு பெருமையா? பல நூறு காவலர்கள் இருந்தால் தான் அவர்களால் பாதுகாப்பாக இருக்கவியலுமா?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதனால் போன உயிர் வந்துவிடுமா என்ன!