March 21, 2009

இலங்கை பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு!

25 வருடங்களுக்கும் மேலாக ஓயாமல் விமானங்களின் இரைச்சலும்,குண்டுகளின் அதிர்வும்,உயிர்களின் ஓலமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.இருப்பினும் ஒரு முடிவை யார் கண்டார்?

தமிழர்களும் காணவில்லை சிங்களர்களும் காணவில்லை. நாம் தான் ஒன்றுமறியா உறவுகளின் முடிவுகளை கண்டு வருகிறோம்.

பாவமறியா பாமரர்களின் மடியும் வாழ்க்கைகளுக்கு ஒரு முடிவு தான் இல்லையா!

தமிழர்களுடன் இணைந்து வாழ மனமின்றி சீரும் சிங்கள வெறியர்கள் ஒருபுறம்;பல பேச்சு வார்த்தைகளுக்கு பின்னரும் தங்களின் லட்சியம் நிறைவேறாமல் லட்சியத்திற்காகவே மேலும் மனம் இறுகும் தமிழ் புரட்சியாளர்கள் மறுபுறம்.

இவர்களிடையில் தினம் தினம் மரிக்கும் அப்பாவி உயிர்கள்.

இவர்கள் என்ன செய்தார்கள் என இத்தனை உபத்திரவங்களுக்கு உள்ளாக்குகிறார்கள் சிங்களர்கள்.பதிலுக்கு தமிழ் புரட்சியாளர்கள் சிங்களர்களை தாக்குகின்றனர்.இருபுறமும் மடிவது பெரும்பாலும் பொது ஜனங்களின் உயிர்களே.

புரட்சியாளர்கள் விரும்புவது போல் தன்னாட்சி செய்வதற்கு உரிமை கிடைத்து விட்டாலும் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமிடையேயான இடைவெளியை,வெறுப்பை குறைத்து விட முடியும் என தெரியவில்லை.

சிங்களன்-தமிழன் என்ற பிரிவினைகளால் பிரிந்து நிற்கும் இலங்கையை நேசத்தால் அத்தனை எளிதில் ஒன்று சேர்க்க முடியும் எனவும் நம்ப முடியவில்லை.

"இலங்கையைச் சார்ந்த எனது சக பணியாளர்கள் சிலர் எனது பெயர் arnold edwin என்றஆங்கிலப் பெயராதலால் என்னை கோவாவை சார்ந்தவன் என்றோ,மங்களூரைச் சார்ந்தவன் என்றோ கருதி என்னுடன் நட்பு பாராட்டி வந்தார்கள்"

என்று என்னை "தமிழன்" என புரிந்து கொண்டார்களோ அன்று முதல் என்னுடன் சரிவர பேசுவதில்லை அவர்கள். இதிலிருந்தே இலங்கையில் இல்லாமல் பிற நாடுகளில் கூட சிங்களர்-தமிழர் உறவுகள் ஆரோக்கியமான நிலையில்லை என்பது நன்கு புலப்படுகிறது.

இலங்கையின் போரினால் பெரிதும் பயனடைவது இந்திய அரசியல்வாதிகளேயன்றி சிங்களத்தவருமில்லை,தமிழ் புரட்சியாளர்களுமில்லை!

ஓட்டுகளுக்காக... இலங்கையில் சமாதானம் வர செய்வோம்;நாங்கள் மட்டுமே இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள்;இலங்கைக்கு தூதுவரை அனுப்ப இந்திய அரசாங்கத்தை வேண்டிக்கொள்வோம்;இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம் என்று இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அன்றி வேறு என்ன செய்து விட்டார்கள் இலங்கையில் அமைதி திரும்ப.

எவரேனும் இலங்கைக்கு சென்று அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் செய்தார்களா? இல்லையென்றால் இங்கு இருந்து கொண்டு தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்களா?

1987 ல் அமைதி காக்கும் படையாக இந்திய தேசத்திலிருந்து இலங்கைக்கு போனவர்கள் என்ன ஆனார்கள். போர் தொடுக்கும் படையாக அல்லவா திரும்பி வந்தார்கள்.

தற்போது போர் தொடுக்க அங்கு செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை.மற்றபடி சிங்களத்தவரின் போருக்கு உதவி செய்பவர்கள் இந்திய மண்ணினரே.ஆனால் தாய் தமிழக மக்களிடம் ஓட்டுகளுக்காக நாடகமாடுகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கு நன்று தெரியும் மாநில அரசால் மத்திய அரசிடம் எதிர்த்து பேச முடியாது என்று,தமிழக அரசுக்கு நன்று தெரியும் மத்திய அரசு சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாது என்று..

...மத்திய அரசுக்கு நன்று தெரியும் (தற்போதைய) இலங்கை அரசு இந்திய அரசின் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்ளாது என.இந்திய அரசு என்ன! ஐ.நா.சபை,அகில உலக போலீஸ்(இன்டர்போல் இல்லை) அமெரிக்கா சொன்ன பின்னர் கூட இலங்கை அரசு கேட்கவில்லை.அத்தனை வெறி கொண்டு இனப்படுகொலையை செய்து வருகிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த பின்னரும்... ஒவ்வொருவரும் தமிழகத்தில் தங்களுக்குள்ளாக அடித்துக் கொள்(ல்)கிறார்கள்.கட்சிகள் ஒருபுறம் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன.நீதிமன்றத்தில் ஒரு சாரார் அடித்துக் கொள்கிறார்கள்.பொது சொத்துக்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன.

இப்படி செய்வதனால் இலங்கையில் தீர்க்கமான முடிவு கிடைத்து விடுமா? இவைகளுக்கு முடிவு தான் என்ன?

இலங்கை அரசும்,தமிழீழ புரட்சியாளர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் பேசி தீர்த்தால் மட்டுமே இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு வருமென தெரிகிறது.

அப்படியே பிரச்சினைகள் அகன்றாலும் தமிழர்-சிங்களர் இடையே தற்போது காணப்படும் மிகப்பெரும் இடைவெளியை அகற்ற இரு நூற்றாண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
----------

9 comments:

மஞ்சூர் ராசா said...

//இலங்கை அரசும்,தமிழீழ புரட்சியாளர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் பேசி தீர்த்தால் மட்டுமே இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு வருமென தெரிகிறது.//


நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது நடைபெறுமா என்பது தான் கேள்விக்குறி

எட்வின் said...

மஞ்சூர் ராசா said...
\\இலங்கை அரசும்,தமிழீழ புரட்சியாளர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் பேசி தீர்த்தால் மட்டுமே இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு வருமென தெரிகிறது.\\


//நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது நடைபெறுமா என்பது தான் கேள்விக்குறி//

எனக்கும் அதே சந்தேகம் தான்.காலம் காலமாக போராகவே இருந்து விடுமோ என்ற கவலை வேறு :(

ஆ.ஞானசேகரன் said...

//அப்படியே பிரச்சினைகள் அகன்றாலும் தமிழர்-சிங்களர் இடையே தற்போது காணப்படும் மிகப்பெரும் இடைவெளியை அகற்ற இரு நூற்றாண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. //

உண்மைதான் பிரச்சனை தீருமா என்பதே ????????

Anonymous said...

எட்வின், இந்திய அரசு, ஐ.நா.சபை, அமெரிக்கா சொன்ன பின்னர் கூட இலங்கை அரசு
கேட்கவில்லை.அத்தனை வெறி கொண்டு இனப்படுகொலையை செய்து வருகிறார்கள் என்று சொல்கிறீர்களே உங்கள் புலி மட்டும் என்ன செய்யுதாம்? மக்களை தனக்கு பாதுகாப்பாக வைத்து அவர்களை பலியிட்டு கொண்டிருக்கிறது. நீங்கள் சொன்ன ஐ.நா.சபை அமெரிக்கா இந்திய அரசு புலிகளை சரணடையும் படி கேட்டனவே மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் அதை செய்யலாம்.

எட்வின் said...

போராளிகள் சரணடைந்திருக்கலாம் தான்... இலங்கை அரசை மட்டுமே நான் சாடவில்லை. போர் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வாக அமையும் என நானும் நம்பவில்லை

எட்வின் said...

அது என்னங்க உங்க புலி... நல்லா கோர்க்கிறீர்களே

Anonymous said...

//அது என்னங்க உங்க புலி..//

தவறுக்கு மன்னிக்கவும் எட்வின்.

தங்க முகுந்தன் said...

/இலங்கையைச் சார்ந்த எனது சக பணியாளர்கள் சிலர் எனது பெயர் arnold edwin என்றஆங்கிலப் பெயராதலால் என்னை கோவாவை சார்ந்தவன் என்றோ,மங்களூரைச் சார்ந்தவன் என்றோ கருதி என்னுடன் நட்பு பாராட்டி வந்தார்கள்"
என்று என்னை "தமிழன்" என புரிந்து கொண்டார்களோ அன்று முதல் என்னுடன் சரிவர பேசுவதில்லை அவர்கள். இதிலிருந்தே இலங்கையில் இல்லாமல் பிற நாடுகளில் கூட சிங்களர்-தமிழர் உறவுகள் ஆரோக்கியமான நிலையில்லை என்பது நன்கு புலப்படுகிறது./
அது சரி!
உங்களுடன் பணிபுரிந்தவர்கள் யார்? சிங்களவர்களா? தமிழர்களா? விரிவாக அறிய விரும்புகிறேன்!

எட்வின் said...

சிங்களர்களே

Post a Comment

Related Posts with Thumbnails