August 07, 2009

பன்றிக்காய்ச்சலுக்கு பன்றிகள் தான் காரணமா?

பன்றிக் காய்ச்சல் என்பது H1N1 காய்ச்சல் என மூன்று மாதங்களுக்கு முன்பே உலக சுகாதார நிறுவனத்தால் (WHO), மாற்றி அறிவிக்கப்பட்ட பின்னரும் பொது மக்களாலும், ஊடகங்களினாலும் பன்றி காய்ச்சல் என்றே இன்னமும் அறியப்பட்டு வருவதை மக்களின் அறியாமை என கொள்வதா? இல்லை ... சரியான தகவலை அறிய மறுக்கிறார்கள் என கொள்வதா?

இந்த மாதம் H1N1 காய்ச்சலுக்கு பலியான முதல் இந்திய உயிருக்குப்பின் தற்பொழுது இந்நோய் குறித்த பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமாகி வருகிறது. என்றாலும் பெரும்பாலோனாரால் இன்னமும் பன்றிக்காய்ச்சல் என்றே அறியப்படுவது வருந்தத்தக்கது.

மனிதரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த H1N1 வைரஸ்கள், நோயுற்ற பன்றிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ்களுடன் ஒன்றிப்போகவில்லை என்கிறது உலக விலங்குகள் நல நிறுவனம். இதனாலும், காரணமே இன்றி பன்றிகள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம், Swine Flu (பன்றிக் காய்ச்சல்) என்ற பெயரை H1N1 Flu (H1N1 காய்ச்சல்) என மாற்றி அமைத்தது.

பன்றிக் காய்ச்சல் என ஆரம்பத்தில் அறியப்பட்டாலும் பன்றிகளிலிருந்து மனிதனுக்கு பரவியதாக இது வரை நிரூபிக்கப்படாததும் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.

ஆனால் இன்னமும் நம்மூர்களில், பன்றி இறைச்சியை உண்பதால் பன்றிக் காய்ச்சல் பரவும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஊடகங்களும் பன்றிக் காய்ச்சல்...பன்றிக்காய்ச்சல் என்றே விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்களின் மனதிலும் 'பன்றி' என்பது மாற்ற முடியாத சொல்லாகி விட்டது.

பன்றிக்காய்ச்சலுக்கு H1N1 காய்ச்சல் என்ற பெயர் மாற்றத்தையும், பன்றி இறைச்சி உண்பதால் இந்நோய் பரவுவதில்லை என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள சற்றே சிரமப்படுவார்கள் என்றாலும் அதனை செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகள் மற்றும் ஊடகங்களின் கடமையாகும்.

H1N1 காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களையும், இந்தியாவில் இந்நோயின் தீவிரம்,கட்டுப்பாட்டு முறைகள் போன்ற பல தகவல்களையும் http://www.swineflu-india.org/ என்ற இணையதளத்தின் மூலம் அறிய முடியும்; புதிதாக கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் இங்கு பதிவேவேற்றமும் செய்கிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு http://www.cdc.gov/h1n1flu/qa.htm என்ற தளத்திலும் உலவலாம்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails