இன்றைய காலகட்டத்தில் மார்ச் 31 இரவே சில அறிவாளிப் பெருமக்கள் மறுநாள் யாரை முட்டாளாக்கலாமென்று யோசித்துக் கொண்டிருப்பதும்; அதற்கான புதிய வழி முறைகளை ஆலோசனை செய்வதுமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
மற்றவரை முட்டாளாக்கிப் பார்ப்பதில் சில அறிவாளிப் இவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. இதற்காக பந்தயம் கட்டவும் தயாராக இருக்கின்றனர். [ஓசியில் வயிற்றை நிரப்பலாமென்ற நினைப்பிலிருக்குமோ ;) ]
அனைவரையும் குறை சொல்வதற்குமில்லை. நட்பு வட்டாரத்தில் சகஜமாக மற்றவரை கேலி செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருக்கத்தான் செய்கின்றனர். அதனை சக நண்பர்கள் சகித்துக் கொள்ளவும் செய்கின்றனர்(வேறு வழி இல்லாமலோ என்னமோ !! )
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை எவரும் மறுக்கவியலாது. வரம்பு மீறி ஏப்ரல் ஒன்றாம் தியதி வரிந்து கட்டிக்கொண்டு தொலைபேசியிலும், குறுந்தகவல்களிலும், மின்னஞ்சல்களிலும் பிறரை முட்டாளாக்குபவர்களை முற்போக்கு சிந்தனையில்லாத கோழைகள் என்பதாகவே கூறுவேன்.
நண்பர் விபத்திற்குள்ளாகி விட்டார் என பொய் உரைத்ததையும், நண்பர் இன்ன நேரத்திற்கு வர சொன்னார் என கூறி விட்டு காத்திருக்கச் செய்ததையும் வரம்பு மீறிய செயலன்றி வேறு என்னவென்று பொருள் கொள்வது!!
இவை போன்ற செயல்கள் சாதாரண கிண்டலுக்கு செய்யப்படினும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு அசாதாரணமானது என்பதும், ரணம் ஏற்படுத்துவது என்பதும் வேதனைக்குரிய விஷயம். அதிர்ச்சியை அனைவரும் சுலபமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஏப்ரல் ஒன்றாம் தியதி மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் சகஜமாக செய்யப்படும் இது போன்ற கேலி கிண்டல்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலும் மன வருத்தமும் பல நேரம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
இத்தகைய மொள்ளமாரித்தனம் தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை. பிறரை முட்டாள்களாக்கி (அவர்களது பார்வையில்) Just For Laughs Gags என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளில் ஒளிபரப்பாகி வந்தவை இன்று இந்தியாவிலும் MTV ன் Bakra உள்ளிட்ட பல பெயர்களில் ஊரை ஏமாற்றி வருகின்றன.
மற்றவரை மனநிறைவடையச் செய்து காணும் மகிழ்ச்சியை விட்டு மற்றவரை முட்டாள்களாக்கி முகம் மலரும் இவர்கள் தான் முட்டாள்கள் என கருதப்படுவரேயன்றி இவர்கள் முட்டாள்களாக்கப்பார்க்கும் மற்றவர்கள் அல்ல.
1 comment:
மற்றவரை முட்டாள்களாக்கி முகம் மலரும் இவர்கள் தான் முட்டாள்கள் என கருதப்படுவரேயன்றி இவர்கள் முட்டாள்களாக்கப்பார்க்கும் மற்றவர்கள் அல்ல. ///// செம குத்து!
Post a Comment