December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.

9 comments:

ராஜ நடராஜன் said...

ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கபட வேண்டியவை.வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மைனாரிட்டி அந்தஸ்து பெற்ற பள்ளிகள் நிவாரண முகாம்கள் அமைக்க இடம் கொடுக்கக் கூட விரும்பவில்லை.. எவ்வளவு பணம் கொடுத்தேனும் இப்பள்ளிகளில் சேர்க்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இவர்கள் தனி ராச்சியம் யாராலும் அசைக்க முடியாது.

எட்வின் said...

நன்றி, 

சென்னையிலும், கடலூரிலும் சில கிறிஸ்தவ நிறுவனங்களால்/சபைகளால் உதவிகள் செய்யப்பட்டது உண்மை. ஆனால் பெரும்பாலானவர்கள் வேடிக்கை பார்த்தது தான் நிதர்சனம். மனிதம் போற்ற மறுப்பவர்கள், மிருகங்களுக்கு சமம்.

எட்வின் said...

என்ன செய்வது, பணநாயகத்தில், ஜனநாயகம் அழிந்து போவது எதார்த்தம் தானே! பணங்களில் மிதக்கிறார்கள். மைனாரிட்டி என்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். மக்கள் அவர்களாகவே புரிந்து கொண்டால் ஒழிய இவர்களின் ஏமாற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

விதிவிலக்காக, சிலர் நற்பணிகள் செய்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலானோர் நமக்கென்னவென்று ஒதுங்கிப் போகிறவர்கள் தான்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

நீங்கள் கிறிஸ்துவரானால் உங்களுக்குத் தொல்லை தருவார்கள் நண்பரே, உண்மையைச் சொன்னதற்காகக் கலிலியோவைக் கல்லால் அடித்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், கவனமாக இருங்கள். எச்.ஜி.ரசூல் எனும் கவிஞரை இப்படித்தான் ஜமாத்துகள் விரட்டின என்பது தெரியுமா? நல்ல பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். நான் உங்கள் நன்மை கருதியே சொல்கிறேன். உங்களின் உண்மை சொல்லும் போராட்டம் தொடரட்டும். நன்றி வாழ்த்துகள்.

சகபயணி said...

நண்பரே! தாங்கள் குறிப்பிட்டிருக்கும் 'எட்வின்' எனும் பெயரில் இருந்து தாங்கள் ஒரு கிறித்துவ மதத்தவர் என உணர்கிறேன். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், இப்பதிவு முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. சக தோழர்களாகிய தங்களைப் போன்ற உண்மையான கிறிஸ்துவ மார்க்கம் ஏற்றோரின் மனம் புண்படாதிருக்க, மற்றோர் காத்துவரும் சகிப்புத்தன்மையை ஆதாரமாகக் கொண்டு பணம் சேர்போர் கூட்டம் இது. இத்தகையப் புல்லுருவிகள் அனைத்து மதங்களிலும் மலிந்து போய்விட்டனர். இதை வைத்து மதத்தின்/ஜாதியின் பெயரால் நம்மைப் பிரித்து அரசியல் செய்வோர் ஒருபுறம். வேற்றுமைகளை அகற்றி ஒன்றுபட்டு நாமாக நம்மில் களைபறிக்கும் கட்டாயம் தோன்றியுள்ள காலகட்டம் இது. அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சாமானியனுக்கும் ஒரே எதிரி பல வேடமிட்டு அலையும் பணம் தின்னும் கழுகுகள். அவ்வகையில் தாங்கள் முன்வந்து பகிர்ந்த நடுநிலையான கருத்திற்கு எனது பாராட்டுக்கள்.

Palani velu said...

We know Samaritan story. We learn to preach it but we do not understand it. However, we pray for the affected people. God will take care of them, after all we are weak, given the flesh. You know, our God is almighty, so it is very appropriate to pray, and pray. See, Prayer is victorious, somebody said. Why then waste our energy and money? Give it to God I mean to His people. Let the people outside be Samaritans to come and help us. They do not know how to pray, but we know. Who is powerful, you see. Chant Hallelujah! and pass the hundi to those outside in need. They will be blessed, I assure you, like the widow at the temple who gave her little mite.

எட்வின் said...

@MuthuNilavan நன்றிங்க. கிறிஸ்தவன் என்பதிலும் மனிதனாய் அறியப்படுவதில் தான் மகிழ்ச்சி. தூற்றுவோர் தூற்றட்டும்.

எட்வின் said...

@சகபயணி நன்றிங்க; கிறிஸ்தவ வழி வளர்ந்தவன் என்றாலும், மனிதத்தை விட எந்த மதத்தையும் உயர்வாகப் பார்ப்பவன் அல்லன். எச்சமயத்தைச் சார்ந்தவராயினும், மனிதம் போற்ற மறுப்பவர்களை ஒதுக்கித்தள்ளல் அவசியம்.

Post a Comment

Related Posts with Thumbnails