அதென்னவோ தெரியல, சென்னையும், கன்னியாகுமரியும் திரும்பத்
திரும்ப வாக்குப்பதிவு சதவீதத்தில் சுணக்கம் காண்பித்து வருகின்றன. இத்தனைக்கும் கற்றவர்களை
அதிகம் கொண்டிருக்கின்றன இவ்விரு மாவட்டங்களும்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக்குறைவாக
சென்னையிலும், குமரியிலும் 68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த முறையும்
சென்னையில் 60% குமரியில் 66% அளவிற்கே வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தமிழகம் நூறு சதவீதம் என்ற நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் பல
நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் சென்னை மிகக் குறைவான வாக்குப்பதிவைக் கண்டிருப்பது
சில விடயங்களை நமக்கு உணர்த்துகிறது.
முதல் முறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்கவில்லையா என்ற
கேள்வி ஒரு புறமிருந்தாலும், 2011 ஐ விட 2016 ல் பத்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள்
சென்னையில் பதிவாகியிருப்பதற்கு அது ஒரு பெரிய காரணியாக இருந்து விடும் என்று சொல்வதிற்கில்லை.
டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு பலரும் சென்னையை
விட்டு வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து
விட்டதால் கூட குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது.
அப்படியே இடம் பெயர்ந்திருந்தாலும், தேர்தலுக்கும் டிசம்பருக்கும்
இடைப்பட்டதான நான்கு மாத கால இடைவெளியில் முகவரி மாற்றம் செய்து அவர்கள் புதிய வாக்காளர்
அடையாள அட்டை பெற்றிருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் பழைய முகவரியில் இருக்கும் பெயர்களை பட்டியலில்
இருந்து நீக்குவது மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சதவீதத்தைக் குறைத்திருக்ககூடும்.
ஆனால் ஓட்டுப் போடுவதால் என்ன ஆகி விடப் போகிறது என்கிற மனநிலையில் இருப்பவர்களால்
இதெல்லாம் சாத்தியமில்லை.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களால் மொத்த
வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வதும் சாத்தியமான ஒன்றே. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
இருந்து சென்னையில் பிழைப்பிற்காக குடியேறிய பலர் அவர்கள் சொந்த மாவட்டங்களில் ஒன்றும்,
சென்னையில் ஒன்றுமாக இரட்டைப் பதிவு செய்திருப்பார்கள். இதுவும் வாக்குப்பதிவு சதவீதத்தில்
நேரடியான தாக்கத்தை ஏற்படுத்த சாத்தியமான ஒன்று.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஒருபுறம்
தவறு செய்கிறார்களென்றால் மறுபுறம் தேர்தல் ஆணையம் இது போன்ற இரட்டைப் பதிவுகளை சரிவர
கணக்கில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, இரு வருடத்திற்கும் மேலான
எனது முகவரி மாற்றத்திற்குப் பின்னரும் எனது பெயர் நெல்லை வாக்காளர் பட்டியலில் இன்னும்
தொடர்கிறது. அதனை நீக்குமாறு இருமுறை வேண்டுகோள் விடுத்தும் இன்னும் நமது தேர்தல் ஆணையம்
கண்டுகொள்ளவில்லை.
இவையெல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய விடயம் நமது மக்களின் அலட்சியம்.
படித்தவர்களை விட படிக்காதக் கிராமப்புற மக்கள் அதிகம் வாக்குப்பதிவு செய்வது கண்கூடு.
வாக்களிப்பதால் என்னவாகி விடப் போகிறது, எவர் வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகிறார்கள்
என்ற பரவலான பேச்சு பலருக்குள் இல்லாமலில்லை.
வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கருதாமல், நமது உரிமையாக கருதும்
நிலைமை இருந்தால் வாக்குப் பதிவு சதவீதத்தில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னை,
கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும்
வாய்ப்பிருக்கிறது.
அதோடு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு
தபால் மூலம் அல்லது கணினி மூலமாக Online வாக்கு அளிக்கும் வாய்ப்புகள் குறைத்து தேர்தல்
ஆணையம் வரும் காலங்களில் ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
நாகர்கோவில்
17.05.2016
No comments:
Post a Comment