இந்த முறை மக்களை மொத்தமாக குறை சொல்லி விடவும் முடியாது. சற்று தெளிவாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள்.
வாக்கு சதவீதம் குறைந்தாலும் சென்ற ஆட்சிக்கெதிரான அதிருப்தியை சென்னையிலும், குமரியிலும்
காண்பித்திருக்கிறார்கள். வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்றோரை
தோற்கடித்திருக்கின்றனர். சரத்குமார் எனும் கருவேப்பிலையை தாளித்திருக்கிறார்கள். தெளிவற்ற
விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக வினர் தோற்கடிப்பட்டு அவர்களின் வாக்கு சதவீதம் சரிக்கப்பட்டு
இருக்கிறது.
இனவாத அரசியல் செய்த சீமான் விரட்டப்பட்டிருக்கிறார். சாதி அரசியல் செய்கின்ற
அன்புமணி அவரது சொந்த மண்ணிலேயே வீழ்ந்திருக்கிறார்.
திருமாவளவனை வெற்றி பெற வைக்கவே போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்,சூழ்ச்சியால்
வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடாநட்பில் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள்.
கோவை. தெற்கில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வானதி தோற்றது
போன்ற ஒரு சில தொகுதி வேட்பாளர்களே ஏமாற்றம் தந்தாலும் திமுக, அதிமுக வின் பிற வேட்பாளர்களை
மக்கள் ஆதரித்திருப்பதில் அதிகம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களும் அந்த அளவிலேயே இருந்தனர்.
சிலர் பணத்திற்கு வாக்கு செலுத்தியிருந்தாலும், பணம் மட்டுமே இந்த முடிவுகளை
தீர்மானித்திருக்கின்ற்ன என்று எளிதில் சொல்லி விடவும் முடியாது.
தேர்தல் நேரங்களில் மக்கள் பணத்தை இயல்பாகவே எதிர்பார்க்கிறார்கள். வாங்கக்கூடாது
என்று பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்... அவர்களாக தருகிறார்கள் உங்களுக்கு ஏன் வலிக்கிறது
என தேர்தல் அலுவலர்களிடமே மல்லுக்கு நிற்கிறார்கள். 'அரசு அலுவலகத்திற்கு சென்றால்
எங்களிடம் பிடுங்குகிறார்கள் தானே' 'இப்போது நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம்'
என்று தெளிவாக இருக்கிறார்கள்.
பணம் எவரிடமிருந்து கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் எவருக்கு வாக்களிக்க
வேண்டுமென்றிருக்கிறார்களோ அதையே செய்வார்கள்.
ஆக இங்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லாதவரை மக்களில் ஒரு சாரார் தொடர்ந்து
வாக்குகளை வியாபாரப் பொருளாக பாவிப்பதையே தொடர்ந்து செய்வர்.
எப்படியாயினும் தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி
பலம் சட்டமன்றத்திற்குள் நுழைவதே இந்த தேர்தலின் வெற்றி தான். ஒரே குறை கம்யூனிஸ்ட்கள்
அந்த பட்டியலில் இல்லையென்பதே!
No comments:
Post a Comment