‘சென்னைலயா இருக்கீங்க’?
‘சென்னை அழிஞ்சிருமாமே’?
‘சென்னைல தான் இன்னும் இருக்கீங்களா’?
‘சென்னைல உங்களுக்கு ஒண்ணுமில்லையே’ ?
‘சென்னைல கவனமா இருங்க’!
இவைகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் சென்னைவாசிகளின் சமீபத்திய
தொலைபேசி உரையாடல்கள் துண்டிக்கப்பட்டிருக்காது என்பது திண்ணம்!
1997 ல் தான் முதன்முறையாக சென்னையில் காலடி வைத்தேன். ஐதராபாத்திற்குப்
பள்ளிச் சுற்றுலா போகின்ற வழியில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சில மணி நேரங்களும்,
திரும்பி வருகையில் மக்கள் நெருக்கடி நிறைந்த வணிகப் பகுதியான தி.நகரில் சில மணி நேரங்களுமாக
முற்றுப் பெற்றது அந்த பயணம்.
அப்போதே சில கேள்விகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அதிகம் பிறரிடம்
பேசிப் பழக்கமில்லாதால், எழுகின்ற எண்ணங்கள் பெரும்பாலும் குரல்வளையைத் தாண்டியதில்லை;
ஆசிரியர்களிடம் கூட சொல்ல முற்பட்டதுமில்லை!
அவற்றில் சில…
‘சென்னை ஏன் இத்தனை நெருக்கடியாக இருக்கின்றது’
‘ஏன் தேநீர் கோப்பைகளையும், குப்பைகளையும் பொது இடங்களில்
வீசுகிறார்கள்’
‘குப்பை தொட்டிகள் ஏன் நிரம்பி வழிகின்றன’
அதே எண்ணங்கள் 1998, 2000, 2002, 2003, 2006, 2008 என தொடர்ந்த
பயணங்களிலும் மனதை ஆக்கிரமித்திருந்தன. பத்து வருட இடைவெளிக்கு பின்னர் 2018 ல் மீண்டும்
சென்னைக்கு வந்த போது, பலர் கரங்களில் சரளமாக மொபைல் போன்கள் தவழ்ந்திருந்ததும்; உயர்
கட்டிடங்களும், மெட்ரோ பாலங்களும் முளைத்திருந்ததுமான மாற்றங்களைத் தவிர்த்து நகரம்
ஒரு நகரத்திற்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததா என்றால், அதற்கு பதிலில்லை!
கூடவே, முதல் சென்னைப் பயணத்தில் தோன்றிய கேள்விகள் மீண்டும்
மனதை ஆக்கிரமித்துக் கொண்டு, ’இதற்கு விடிவே இல்லையா’ என்ற புதியதொரு கேள்வியையும்
விதைத்திருந்தது.
1997 ல் நான் பார்த்த சென்னையாகவே 2020 லும் சென்னை தொடர்கிறது.
வணிகத்திற்காக, பிழைப்பிற்காக, தங்களின் திறமைகளை எப்படியாவது
உலகறியச் செய்து விட வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த என் போன்ற மக்களால் அதிகரித்தச்
சென்னைக் குடியேறல்கள் குளங்களையும், ஏரிகளையும், காடுகளையும், வயல்நிலங்களையும் ஆக்கிரமித்துக்
கொண்டு இன்னும் தனது இருப்பை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.
இதைப் பதிவு செய்வதும் ஏரியை ஆக்கிரமித்து (அரசு அனுமதியுடன்)
கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தான். இதற்கு சொல்லப்படும் காரணங்கள்
1. மக்கள்
நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழியில்லை
2. வறட்சியான
பயனற்ற நீர்நிலைகள்
சரி, மக்கள் வாழ்வதற்காக இயற்கை வளங்களைக் ஆக்கிரமித்து குடியிருப்பாக
மாற்றி இருக்கிறீர்கள், சுற்றுப்புறத்தை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்!! முக்கிய
இடங்கள் தவிர்த்து பரவலான இடங்களில் சென்னையின் அடையாளம் இவைகள் தான் என்று சொல்லுமளவிற்கு
குப்பைகளும், நெகிழிப் (Plastic) பைகளும், துர்நாற்றமும் ஆக்கிரமித்திருக்கின்றன.
போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை, பெரும்பாலானோர் குப்பைகளை
முறையாகக் களைவதில்லை; அப்படியே முறையான தொட்டிகளில் குப்பைகளைக் களைந்தாலும் அவற்றை அகற்றுவதற்குப் போதுமான துப்புரவு தொழிலாளர்களும்
இல்லை. பலர் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.
இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கையில், மக்கள் நெருக்கடி
நிறைந்த, சுகாதாரம் குறித்தும், சுற்றுப்புறங்கள் குறித்தும் பெருமளவில் அக்கறையில்லாத
மக்கள் கொண்ட சென்னைப் போன்றதொரு நகரத்தில்
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகப்பெரும் சவால்.
இதில் இன்னும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால், மருத்துவப்பணிகளில்
இருப்போர் கூட முறையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை; முகக்கவசங்கள்
ஆங்காங்கே தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன;
வீட்டுக்கழிவுகளே சரிவர அகற்றப்படாமலும், மறுசுழற்சிக்கு
உட்படுத்தப்படாமலும் இருக்கும் நகரத்தில், மருத்துவக் கழிவுகளைக் குறித்து வாயைத் திறந்தால்
இன்னும் குமட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலமே அதற்கு சாட்சி!
இப்படியான ஒரு நகரத்தில் தான் இன்னும் பிழைப்பிற்காக பலரும்
ஒட்டிக் கொண்டுள்ளனர். இயற்கையின் சமநிலையை சீர்குலைத்து விட்டு, நாம் சீரும் சிறப்புமாக இருந்து விட முடியுமா என்பதற்கு பதில், "முடியவே முடியாது" என்பது தான்!
1 comment:
Casino Hotel & Casino - MapYRO
Casino Hotel & 당진 출장마사지 Casino in Santa Fe, NM 순천 출장안마 - Find all the 군산 출장안마 info you need at MapYRO. Casinos in the United States. 순천 출장안마 Poker Room at Casinos in Las 안산 출장마사지 Vegas
Post a Comment