‘இதுவரை இல்லாத அளவு’ அச்சுறுத்தல்!
ஒரு நாட்டின் தூண்கள் என சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய இந்நான்கை குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப காலங்களில் காட்சி ஊடகங்கள் என்றால் அரசே ஏற்று நடத்திய தூர்தர்சன் மட்டும் தான். 1991 ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் தாராளமயமாக்கக் கொள்கைகளினால் தனியாருக்கும் தொலைக்காட்சி உரிமங்கள் வழங்கப்பட்டன, தென் இந்தியாவின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக 1992 ல் சன் குழுமத்தினர் அறிமுகமானார்கள்; இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை பல நூறுகளைத் தொடும்.
அரசு ஏற்று நடத்துகின்ற தூர்தர்சனில் இன்றளவும் அரசு சம்பந்தமான நிகழ்வுகளும், செய்திகளும் தான் இடம் பெறும். அந்த தொனியில், தனியார் ஊடகங்களும் அதன் தலைமைக்குச் சாதகமான செய்திகளையே வெளிக்கொணர்ந்தாலும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் அவ்வப்போது எடுத்துரைப்பவையாக இருந்து வந்திருக்கின்றன.
ஆனால் இன்றைய தேதியில் தனியார் செய்தி ஊடகங்களில் கூட எப்படியான செய்திகளை முன்னிறுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதை ஆளும் ஒன்றிய அரசே தீர்மானம் செய்வதாகத்தான் படுகிறது. குணசேகரன்கள் தரம் தாழ்ந்து நடத்தப்படுவதற்கும் அதைத்தான் காரணம் என்கிறார்கள். இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களும் அதனை உறுதி செய்திருக்கிறார்.
கோவிட்-19 குறித்தச் செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஊடகங்கள் ‘இன்று மட்டும்/ இன்று ஒரே நாளில்/ இதுவரை இல்லாத அளவு’ என்பவற்றைத் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி வருகின்றன. ஆகஸ்ட் 3 மாலை நேரப் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தில் 56,698 பேருக்கு தொற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இது வெறும் தொற்று இருப்பவர்களது எண்ணிக்கை தான். இவர்களில் எத்தனை பேர் நலமாய் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டு மொத்த எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு ‘இதுவரை 2.63,222’ பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆகஸ்ட் 3 நிலவரத்தின் படி, தொற்று ஏற்பட்டு நலமாகி வீட்டிற்கு போனவர்கள் 2,02,283 பேர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இவ்வளவு என்று லட்சக்கணக்கை காட்டுவதும், இன்று இத்தனை பேருக்கு என குறிப்பிடுவதை விடுத்து, ‘இன்று மட்டும் ஒரே நாளில் இது வரை இல்லாத அளவிற்கு’ எனவும் அழுத்தி சொல்வதும் மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு உக்தியாகத்தான் படுகிறது.
உள்ளிருப்பில் நான்கு மாதங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வாதாரத்திற்கு மக்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். இன்னமும் உள்ளிருப்புக் காலத்தைத் தொடர்வதன் மூலம் மக்களை அடைத்து விட்டு, தொடர் அச்சத்தில் வைத்துக் கொண்டு, உரிமைகளுக்கெதிரான அவர்களின் குரல்வளைகளையும் நெறித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
No comments:
Post a Comment